பாவை - நூல் அறிமுகம்.

தகடூர் புத்தகப் பேரவை நூல் அறிமுகம்.
நூல் தலைப்பு: பாவை.
 நூலாசிரியர்: மு வரதராசனார்.
 நூல் அறிமுகம்: நூலகர் சி சரவணன்.

‘பாவை’ இது 1944ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு அற்புதமான புதினம். கதைச்சுருக்கம்: 
ஒரு கிராமத்து மணியக்காரரின் மகன் பழனியப்பர். கல்லூரிப் படிப்பைப் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து இருக்கிறான். அதே கிராமத்தில் வேலுப்பிள்ளை என்பவரின் மகளான பாவையை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். பாவை, இவன் பள்ளியில் படிக்கும் பொழுது, அதேப் பள்ளியில் சிறுமியாக படித்தவள். பாவை பள்ளிக்குச் செல்லும்போது பழனியின்(பழனியப்பர்) தாயார் அவளை அழைத்து தலைவாரி பூச்சூடி அழகு பார்ப்பது வழக்கமாக இருந்தது. பழனியின் தாயாருக்கு பெண் குழந்தை இல்லாததால் அவ்வாறு செய்து மகிழ்ந்தார். அதனால், பாவை மருமகளாக வருவதை தன் தாயார் எதிர்க்க மாட்டார் என்று நம்புகிறான் பழனி. ஆனால், பழனியின் தந்தை மணியக்காரர் இந்த காதலுக்குஎதிர்ப்பு தெரிவிக்கிறார். தன் மகனுக்கு தன் ஜாதியில் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைப்பது என்று முடிவு செய்து மணமகள் தேடுகிறார். மணியகாரர் மற்றும் வேலுப்பிள்ளை குடும்பங்களுக்கு நல்ல நட்பாக இருக்கும் ஏகாம்பரம் செட்டியார், இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்குமாறு மணியக்காரரிடம் கூறுகிறார். அதற்கு உடன்படாத மணியக்காரர், “பழனிக்கு எங்கள் ஜாதியில் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம். பாவையை அவன் இன்னொரு வீடு பார்த்து வைத்துக் கொள்ளட்டும்; அல்லது இதே வீட்டில் கூட கொண்டு வந்து வைத்துக் கொள்ளட்டும்” என்கிறார்.
 இந்த நிலையை அறிந்த வேலுப்பிள்ளை பழனிக்கு திருமணம் ஆகும் வரை தன் மகளை தன் மாமியார் வீட்டில் இருக்குமாறு செய்கிறார்.
 அங்கு பாவையின் தாய் மாமன் அண்ணாசாமி பாவையை திருமணம் செய்து கொள்ள விரும்பி பல்வேறு சூழ்ச்சிகளை செய்கிறான். அதனால், பாவை அந்த இடத்தில் இருந்து தப்பித்து, இரவோடு இரவாக ஆற்காடு செல்கிறாள். அங்கு முன் பின் தெரியாத ஆசிரியர் (சாமிநாதன்) குடும்பம் அடைக்கலம் கொடுக்கிறது. பழனிக்கு பாவை கடிதம் எழுதுகிறாள். பழனி பாவையை வந்து சந்திக்கிறான். ஆசிரியர் சாமிநாதன், சென்னையில் உள்ள தன் நண்பர் எழுத்தாளர் கண்ணப்பர் முகவரிக்கு கடிதம் கொடுத்து அங்கு சென்று தங்குமாறும் அறிவுறுத்தி அனுப்புகிறார். அங்கு சென்று தங்கிய நிலையில், தன் பெற்றோருக்கு இந்தத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று செட்டியாருக்கு பழனி கடிதம் எழுதுகிறான். ஓரிரு நாட்களில் வேலுப்பிள்ளை மகளைத் தேடி சென்னை வந்து, பழனியின் தாயார், பழனியைக் காணாததால் நோயுற்று சாகும் நிலையில் இருக்கிறார் என்கிறார். உடனே பழனி தாயாரை பார்க்கச் செல்கிறான். பழனியைக் கண்ட அவன் தாயார் உடல் நலம் தேறுகிறார். இறுதியில் சமரசம் அடைந்த குடும்பங்கள், இவர்கள் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்கின்றன. இதுதான் இந்த கதையின் சுருக்கம். 

இந்த நாவல் எழுதி 80 ஆண்டுகள் ஆகின்றன. இதை படிக்கும் போது அந்தக் காலத்தில் சமூகம் எப்படி இருந்தது? மக்கள் பழக்க வழக்கங்கள் எப்படி இருந்தன? சாதி கட்டுப்பாடுகளுக்கு எவ்வாறெல்லாம் அஞ்சி வாழ்ந்தார்கள்! படித்தவர்கள் எப்படி இருந்தார்கள்? படிக்காதவர்கள் எவ்வாறு இருந்தார்கள்? மக்களின் பொருளாதார நிலை எப்படி இருந்தது? விலைவாசி எப்படி இருந்தது? - இது போன்று பல்வேறு செய்திகளை நம் கண் முன்னே அழகாக கொண்டு வந்து சேர்க்கிறார் நூலாசிரியர் மு.வரதராசனார். எளிய நடை, தேர்ந்தெடுத்த சொற்கள், யார் மனமும் புண்படாத வகையில் கதையை கொண்டு போகிறார். அதே நேரத்தில் தான் இந்த சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய செய்திகளை ஆங்காங்கே கதாப்பாத்திரங்கள் மூலம் சொல்கிறார். இன்றளவும் மூ.வரதராசனாரின் படைப்புகள் போற்றப்படுவதற்குக் காரணம் பிறமொழிச் சொற்கள் கலக்காமல், நல்ல தமிழில் எழுதியுள்ளது இவர் படைப்புகளின் சிறப்பு. ஆக, இந்தக் கதை ஓர் அற்புதமான கதை. அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.

நன்றி.

Comments

  1. எதார்த்தமான உண்மை தான்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Smoke and Ashes - நூல் அறிமுகம்.

உணவு சுற்றுலா - நூல் அறிமுகம்.

கற்பது உலகளவு - நூல் அறிமுகம்.