Smoke and Ashes - நூல் அறிமுகம்.
Smoke and Ashes
Amitav Ghosh
நூலனுபவம்:
எனக்குத் தேநீர் அவ்வளவாகப் பிடிக்காது. சிறுவயதில் காப்பி குடித்து வளர்ந்தவன். இன்று யோசித்துப் பார்க்கையில், அதுவுமே, ஒரு அபத்தமான வழக்கமாகத்தான் தோன்றுகிறது. ஆனாலும், அது காலையில் தவிர்க்க முடியாத வழக்கமாக உள்ளது என்பது உண்மை.
உலகின் பெரும்பான்மையான மக்களும், பெரும்பான்மை இந்தியர்களும் குடிப்பது தேநீர்தான். ஆனால், இந்த பயிர், இன்னொரு பயிருடன் இணைந்து, உலகை இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக ஆட்டிப் படைத்திருக்கிறது என்பதை அமிதாவ் கோஷ் சொல்கையில். ‘என்னைய்யா கத விடறார்’, னு தோன்றும். ஆனால், அதுதான் உண்மை என்கிறது அமிதாவ் கோஷின், ’Smoke and Ashes’, புத்தகம்.
அமிதாவ் கோஷ் உலக இலக்கியத்தில் மிக முக்கியமான ஆளுமை. இந்தியாவில், இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதான, ‘ஞானபீட’, பரிசைப் பெற்றவர். இவரது Ibis Trilogy என அழைக்கப்படும், ‘Sea of Poppies’, ‘River of Smoke’ and ‘Flood of Fire’, என்னும் புகழ் பெற்ற நாவல் வரிசையை எழுதியவர். இந்த நாவல்களுக்காக அவர் செய்த ஆய்வுகளை, ஒரு வரலாற்றுக் குறிப்பாக ‘Smoke and Ashes’, என்னும் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இலக்கியத்துக்காக வழங்கப்படும் நோபல் பரிசு இவருக்குக் கிடைக்கக் கூடும் என்னும் யூகம் பல ஆண்டுகளாக இலக்கிய உலகில் உலவிக் கொண்டிருக்கிறது. அதற்கு முற்றிலும் தகுதியானவர்தான் அமிதாவ் கோஷ்.
நாம் தாவரங்களுடன் பழகுகையில், அதை உபயோகிக்கும் நமது பார்வையிலிருந்து இருந்து அணுகுகிறோம். ஆனால், அது ஒருதலைப்பட்சமான உறவல்ல. தாவரங்களுடன் நாம் கொள்ளும் உறவின் வழியே, நாமும் மாறுகிறோம் என்னும் ஒரு புதிய கோணத்துடன் தொடங்குகிறது முதல் அத்தியாயம். Robin Wall Kimmeerer என்னும் தாவரவியல் அறிஞரின், வாக்கியங்களில்,
“In the indigenous view, humans are viewed as somewhat lesser beings in the democracy of species. We are referred to as the younger brother of creation, so like younger brothers, we must learn from our elders. Plants were here first and have had a long time to figure things out. They live both above and below ground and hold the earth in place”.
இந்த நான்கு வாக்கியங்களும் மிகவும் ஆழ்ந்த பொருள் கொண்டவை. படித்த பல மணிநேரம், இவை என்னைச் சிந்தனையில் ஆழ்த்தின. யோசித்துப் பார்த்தேன். நாம் அலட்சியமாகத் தரையில் வீசியெறியும் விதைகளில் இருந்து, எவ்வளவு அழகான ஒரு புதிய உயிர் மேலெழுந்து வருகிறது. காற்றையும், மண்ணையும், ஈரப்பதத்தையும், சூரிய ஒளியையும் இணைத்து, உலகுக்கே உணவை உற்பத்தி செய்யும் அற்புத உயிரல்லவா அது? ஒப்பீட்டில், ஒன்றையுமே உற்பத்தி செய்யாமல், தாவரங்களின் உழைப்பைச் சார்ந்து வாழும் உயிரினங்கள்தாமே நாம்?
இப்படிச் சொல்வது, எந்த வகையிலும், மனிதனின் முக்கியத்துவத்தைக் குறைப்பதல்ல. மாறாக, உலகில் உள்ள உயிரினங்களோடு, குறிப்பாக தாவரங்களோடு பல்வேறு வகையிலான உறவை பயன்படுத்தியே மனித இனம் முன்னேறியுள்ளது என்பதை நாம் நுட்பமாக அவதானிக்க வேண்டுமென்பதே இதன் சாரம்.
சீனர்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக தேநீர் அருந்தி வருபவர்கள். இங்கிலாந்துக்கு தேநீரை அறிமுகப்படுத்தியவர் போர்ச்சுகல் நாட்டின் இளவரசி கேதரின். இவர் 1662 ல், இங்கிலாந்து மன்னர் இரண்டாம் ஜார்ஜுடன் மணம் நடந்து இங்கிலாந்து வருகையில், இவருடன் தேநீரும் இங்கிலாந்துக்கு வந்தது. அத்துடன் இந்தியாவின் 6 சிறு தீவுகளையும் பரிசாகக் கொண்டு வந்தார். அவை பின்னாளில், ஒன்றாகி, பாம்பே (இன்றைய மும்பை) எனப் பெயர் பெற்றன.
தேநீர் பருகும் வழக்கம் இங்கிலாந்தில் மிக விரைவாகப் பரவியது. அடுத்த 50-60 ஆண்டுகளில், (இந்தியாவில் ஆங்கிலேயப் பேரரசு உருவாகும் முன்னர்), தேநீர் இங்கிலாந்து நாட்டின் முக்கியமான பானமாகியது. தேநீரின் மீதான இறக்குமதி வரிகள், 75% முதல் 127% வரை இருந்தன. தேநீர் இறக்குமதி வரிகள் அரசுக்கு மிக முக்கியமான வருமானமாக இருந்தன. வட அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் போர்களை நடத்தி, பெரும் நிலங்களைக் கைப்பற்ற இது பிரிட்டிஷ் அரசுக்குப் பேருதவியாக இருந்தது. வெற்றிகரமான காலனியாதிக்கச் செயல்பாடுகளின் பின்னால் இருந்த நிதி, இங்கிலாந்து மக்கள் தேநீர் பருகுவதற்காகக் கொடுத்த வரிகள்.
இதில் ஒரு பிரச்சினையும் இருந்தது. இங்கிலாந்திலிருந்து எந்தப் பொருளையும் சீனா இறக்குமதி செய்யவில்லை. எனவே, சீனத்திலிருந்து இறக்குமதி செய்கையில், அதற்கீடாக வெள்ளியைக் கொடுத்துச் செய்ய வேண்டியிருந்தது. அந்தக் காலகட்டத்தில், வெள்ளி, அமெரிக்க காலனியில், ஆப்பிரிக்க கறுப்பின அடிமைகளால் குறைந்த செலவில் தோண்டியெடுக்கப்பட்டதால், ஓரளவு பிரச்சினையில்லாமல் நடந்து வந்தது. ஆனால், காலப் போக்கில் இது குறைந்து போனதால், இங்கிலாந்து அரசுக்குப் பெரும் பிரச்சினை எழுந்தது.
இதற்கு ஒரு சுலபமான தீர்வு – இந்தியாவில் தேயிலை உற்பத்தியைத் தொடங்குவது. சீனத்திலிருந்து தேநீர்த் தாவரத்தையும், அதை பயிர் செய்யத் தெரிந்த தொழிலாளர்களையும் கொண்டு வந்து வடகிழக்கில் தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன். ஆனால், நாம் நினைப்பது போல, தேநீரை இந்தியர்கள் விரைவில் ஏற்றுக் கொள்ளவில்லை. இதைப் பிரபலப்படுத்த, தேநீரை, இந்திய விடுதலைப் போருடன் இணைத்து, நூல் நூற்கும் சர்க்காவுடன், ஒரு பெண்ணை முன்னிறுத்தி, 100% சுதேசி என தொடக்கத்தில் விளம்பரம் செய்தார்கள். பிற்காலத்தில் வெகுவிரைவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, விரைவில், தேநீர் இந்தியாவின் தேசிய பானமாகிவிட்டது.
அப்போது இந்தியாவில் இருந்தது பருத்தியும், ஓப்பியம் எனப்படும் போதைப் பொருளும் சீனத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருந்தன இதில் ஒப்பியத்தின் ஏற்றுமதி வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. தேநீர் என்னும் தாவரம் இங்கிலாந்து நாட்டுக்கு உருவாக்கிய அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு Papaver somniferum என்னும் ஓப்பியம் தீர்வாக அமையுமென்று அன்று யாரும் நினைத்திருக்கவில்லை.
ஓப்பியம் கிழக்கு ஐரோப்பாவில் கருங்கடலுக்கு அருகே முதலில் தோன்றியிருக்க வேண்டும். மனித இனம் தொடங்கிய காலத்திலிருந்தே, ஒப்பியத்துக்கும் மனிதர்களுக்கும் உறவு ஏற்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. ஸ்விட்ஜர்லாந்து நாட்டில், 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு தொல்லியல் களத்தில் ஒப்பியம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.மு இரண்டாம் நூற்றாண்டில் உருவான ஒரு எகிப்திய பிரமிடிலும் இது இருந்துள்ளது. ஹோமர் உள்ளிட்ட இலக்கியவாதிகள் இதைக் குறிப்பிட்டுள்ளார்கள். உலகின் பல்வேறு மனித குழுக்கள், ஒப்பியத்தின் மருத்துவப் பண்புகளை அறிந்திருக்கிறார்கள். இன்றுவரை, பல நூறு மருந்துகளில் ஒப்பியம் பயன்படுத்தப்படுவது, அதன் மருத்துவ முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. இது கோரெக்ஸ் போன்ற இருமல் மருந்துகளில் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறது.
இது முகலாயர் காலத்தில் அரசர்களாலும், உயர் குடிகளாலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தியாவில் பாட்னாவுக்கு அருகில் உள்ள கங்கைச் சமவெளியிலும், மத்திய இந்தியாவில் உள்ள மால்வா பகுதியிலும் விளைவிக்கப்பட்டு வந்தது.
சிறு விவசாயிகளால் பயிர் செய்யப்பட்ட ஒப்பியம், வணிகர்களால் கொள்முதல் செய்யப்பட்டு, பாட்னாவில் உள்ள சிறு தொழிற்கூடங்களில் மேலும் சுத்திகரிக்கப்பட்டு உலகமெங்கும் அனுப்பப்பட்டு வந்தது. கால ஓட்டத்தில், இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் வணிகத்துக்காக காலடி வைத்த ஐரோப்பியர்கள், ஒப்பியத்தை கொள்முதல் செய்து, தாங்கள் வணிகம் செய்யும் நாடுகளில் உள்ள அரசர்கள், பெரும் வணிகர்களுக்கு அன்பளிப்பாக அளித்து வந்தனர். முதலில் இதை போர்த்துக்கீசியர்கள் செய்து வந்தார்கள். அவர்களை வெளியேற்றி பின்னர் டச்சுக்காரர்கள், இந்த வணிகத்தை ஆக்கிரமித்து, மிளகு, ஜாதிக்காய், கிராம்பு போன்ற மிக முக்கியமான வணிகங்களை ஆக்கிரமித்தனர். டச்சுக்காரர்கள்தாம், ஒப்பியத்தின் வணிக சாத்தியங்களை முதல் கண்டறிந்தவர்கள். மலாய் தீபகற்பத்தில் உள்ள நாடுகளில் தொடங்கிய வணிகம் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஒப்பியம் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியது.
டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி, ஒப்பியத்தை ஒரு நாணயமாகவே வர்த்தகத்தில் உபயோகிக்கத் தொடங்கினார்கள். இந்தோனேஷியா, மலாய், ஜாவா தீவுகளில் உள்ள வேளாண் பொருட்களைக் கொள்முதல் செய்து கொள்வதற்கு ஈடாக ஒப்பியத்தை அளிக்கத் தொடங்கினார்கள்.
அங்கிருந்து ஓப்பியம் தாய்வானுக்கும், சீனாவுக்கும் செல்லத் தொடங்கியது. சீன வர்த்தகர்கள், ஒப்பியத்தை புகையிலையுடன் சேர்த்துப் புகைக்கும் வழக்கத்தைத் தொடங்கினார்கள். பின்னர் ஓப்பியத்தையே புகைக்கும் வழக்கம் தொடங்கியது.
ஒப்பியம் வணிகம் தொடர்பான விமரிசனங்கள் எழும் போதெல்லாம், டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி, ‘நாங்கள் வணிகத் தேவையை மட்டுமே பூர்த்தி செய்கிறோம்’, எனப் பூசி மெழுகினார்கள். ஒப்பியத்தின் தீமைகளை உணர்ந்து, உள்ளூர் சிற்றரசர்கள் அவற்றைத் தடைசெய்ய முற்பட்ட போதெல்லாம், சிறு சிறு போர்கள் வழியே, அத்தடைகளை முறியடித்தார்கள். இந்தப் போர்களின் பின்ணணியில் மிக வலுவான போதைப் பொருள் அடித்தளம் இருந்தன. பின்னர், ஆசிய நாடுகளில் நடந்த போதைப்பொருள் போர்களின் முன்னோடி டச்சுக்காரர்கள் நடத்திய இந்தச் சிறு போர்கள்தாம்.
கிழக்கு இந்தியாவில் இருந்து ஒப்பியத்தைக் கொள்முதல் செய்து, அவற்றை கிழக்காசிய நாடுகளில் கொள்ளை விலைக்கு விற்கும் இந்த வணிகச் சங்கிலியை நீண்டகாலம் வெற்றிகரமாகப் பராமரித்து வந்தனர். கிழக்கு இந்தியாவில் இருந்தது கொள்முதல் செய்வதற்கு பதிலாக, கிழக்காசிய நாடுகளிலேயே விளைவிக்கலாமே என்னும் ஒரு கேள்வி எழுந்த போது, அப்படி விளைவித்தால், ஓப்பியம் மிகக் குறைந்த விலையில் விளைவிக்கப்படமுடியும் என்னும் இரகசியம் அனைவருக்கும் தெரிந்து விடும். எனவே, அந்த ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. ஓப்பியம் வணிகம் டச்சுக்காரர்களுக்கு பொன் முட்டையிடும் வாத்தாக இருந்தது. 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஒரு டச்சு கவர்னர் ஜெனரல் 10 மில்லியன் டச்சு கில்டர்கள் செல்வம் சேர்த்தார் (இன்றைய கணக்கில் பில் கேட்ஸ் அளவு) எனச் சொல்லப்படுகிறது. இந்த வணிகர்களின் நிறுவனத்தில் டச்சு அரசர்களும் பங்குகளைப் பெற்றுப் பெரும் செல்வம் சேர்த்தார்கள். 19ஆம் நூற்றாண்டில், டச்சு இளவரசர், வில்லியம் ஃப்ரெடெரிக் என்பவர், ‘ராயல் டச்சு வணிக நிறுவனம்’, என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். மிகக் கொடூரமான வணிக வழக்கங்களுக்குப் பேர் போன இந்த நிறுவனம் இன்றில்லை. ஆனால், இதன் வழியே ராயல் டச்சு /ஷெல் என்னும் பெயரில் பெட்ரோலிய நிறுவனங்கள் தோன்றின. இதே போல, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், சுமத்திரா தீவில், தகரத்தைத் தோண்டியெடுக்க பிஹெச்பி பில்லிட்டன் என்னும் ஒரு நிறுவனம் டச்சு அரச குடும்பத்தின் பங்கேற்போடு தொடங்கப்பட்டது. ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் தோற்றம் என்பதே அரசமைப்பின் ஆதாரவோடு உருவான ஒட்டுண்ணி முதலாளித்துவமும், போதைப் பொருள் வணிகமும்தான்.
காலனிய ஆதிக்கத்தை வலுவான போதைப் பொருள் வணிகத்தின் மூலம் தொடங்கி வைத்தது டச்சுக்காரர்கள் எனில், அந்தக் கட்டமைப்பை வலுவாக்கியது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிதான்.
சென்னையில் நுழைந்து, பின்னர் மும்பையை வரதட்சிணையாகப் பெற்ற ஆங்கிலேயர், பின்னர் கல்கத்தாவைத் தம் தலைமையகமாக மாற்றினர். பூர்வாஞ்சல் என அழைக்கப்பட்ட பீஹாரின் கங்கைச் சமவெளி, வேளாண்மை, தொழில்நுட்பம், கலைகள் எனப் பரந்து பட்ட வளர்ச்சியை அடைந்திருந்தது. நாம் சோழப் பேரரசை, ஒரு வலுவான அரசு எனக் கொண்டாடுகிறோம். அதை விடப் பல மடங்கு வலுவான பேரரசு கங்கைச் சமவெளியில் உருவான மௌரியப் பேரரசாகும். இந்தியாவின் மிகத் தொன்மையான அரசு அது
அதைத் தாண்டி, பூர்வாஞ்சல் பகுதியில் பெரும் உபரி மக்கள் தொகை இருந்தது. இந்தியாவின் பல அரசுகளுக்கும் இங்கிருந்து மக்கள் போர்ப்படை வீரர்களாகச் சென்று பணிபுரிவது வழக்கமாக இருந்தது. இப்பகுதியின் 25% மக்கள் இப்படியான ஒரு வாழ்க்கை முறையில் இருந்தார்கள் என தரவுகள் சொல்கின்றன.
இப்பகுதியில் இருந்து, சென்னை, மும்பை, கொல்கத்தா என மூன்று பகுதிகளுக்கும் இங்கிருந்து வீரர்களை ஆங்கிலேயர் பணியமர்த்திக் கொண்டனர். இந்த வீரர்கள் பெரும்பாலும் பிராமணர், ராஜ்புத்திரர்கள் என்னும் உயர் சாதியைச் சார்ந்தவர்கள்.
இந்தப் படையைக் கொண்டு, மெல்ல மெல்ல பெங்கால், பீஹார் பகுதிகளை கிழக்கிந்தியக் கம்பெபி, தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். இதன் மூலம், இந்தியாவில் போர்ப்படை வீரர்கள் மற்றும் ஒப்பியம் விளையும் பீஹார்ப் பகுதி ஆங்கிலேயரின் கீழ் வந்தது.
பாட்னாவில் ஒப்பியம் பதனிடும் தொழிற்சாலையை நிறுவினார்கள். இதன் விளைவாக, ஒப்பியம் பயிரிடும் பரப்பளவு வெகுவாக அதிகரித்தது. ஓப்பியம் வணிகத்தில் உள்ள பெரும் லாபத்தைக் கண்ட கிழக்கிந்தியக் கம்பெனி, பூர்வாஞ்சல் பகுதியில் உள்ள ஓப்பியம் உற்பத்தியைத் தன் முழு ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தது.
பாட்னாவின் ஒப்பியத் தொழிற்சாலை
ஓப்பியம் உற்பத்திக்கு மிகக் குறைந்த விலையே தரப்பட்டது. அந்த விலை உற்பத்தி விலையை விட மிகக் குறைவு. ஓப்பியம் தவிர வேறு பயிர்களைச் செய்யக் கூடாது என உழவர்கள் மிரட்டப்பட்டனர். நஷ்டம் விளைவிக்கும் ப்யிராகையால், அதைத் தவிர்க்க உழவர்கள் பல்வேறு குறுக்கு வழிகளைக் கண்டறிந்தனர். ஓப்பியத்துக்கு கள்ளச் சந்தை உருவாயிற்று. எனவே அதைக் கண்காணிக்க, உள்ளூர் ரகசிய காவலர்கள் நியமிக்கப்பட்டனர். உள்ளூர் நிலச்சுவாந்தாரர்களுக்கு அளவற்ற அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன.
அதே போல, பாட்னாவில், ஓப்பியம் பதனிடும் தொழிற்சாலை ஒரு கோட்டை போல உருவாக்கப்பட்டது. பலத்த காவல் போடப்பட்டது. பல மடங்கு கண்காணிப்புகள் உருவாக்கப்பட்டன. பணிபுரியும் தொழிலாளர்கள் மிகக் கடுமையான சோதனைக்குள்ளாக்கப்பட்டார்கள். பெருமளவு அதிகார துஷ்ப்ரயோகங்கள் நடந்தன.
மொத்தத்தில், பூர்வாஞ்சல் பகுதியில் ஓப்பியம் விளைவிக்க கிழக்கிந்தியக் கம்பெனி உருவாக்கிய உற்பத்தி, பதனிடுதல், கண்காணிப்பு என்னும் கட்டமைப்புக்கு பெரும் செலவு பிடித்தது. ஓப்பியம் வருமானத்தில் 1/3 அளவுக்கு அந்த செலவு இருந்தது.
இந்தக் கெடுபிடிகளின் விளைவாக, இந்தப் பகுதியில் பெருமளவு சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்பட்டன. இதன் அடிநாதம் என்பது ஓப்பியப் பயிருக்கு அரசு தரும் விலை என்பது உற்பத்தி விலையை விட மிகக் குறைவாக இருந்தது என்பதுதான். ஆனால், இதை மறைத்து, இங்கே நிலவும் சட்ட ஒழுங்குப் பிரச்சினைகளுக்கும், அதிகார துஷ்ப்ரயோகங்களுக்கும் காரணம் இந்தியர்கள் அடிப்படையிலேயே அறமற்றவர்கள். திருடுபவர்கள் எனக் கதைகள் புனையப்பட்டன. இன்றுவரை இந்தப் பகுதியில் இதன் சமூக விளைவுகள் உள்ளன என சமூகவியலாளர்கள் சொல்கிறார்கள்.
18 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் கிழக்கிந்தியா, வருடம் 200 பெட்டிகள் (Chests) அள்வுக்கு ஓப்பியத்தை சீனாவுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. கிழக்கிந்தியக் கம்பெனி, ஒப்பியத்துக்கெனவே ஒரு தனி துறையை ஏற்படுத்தி, தம் அதிகாரத்துக்குள் கொண்டு வந்த போது, (கி.பி 1800), ஏற்றுமதி 4500 பெட்டிகளாக உயர்ந்தது. 1830 க்குப் பின்னர் ஏற்றுமதி புயல் வேகத்தில் வளர்ந்தது. ‘1772 தொடங்கி, 1850 க்குள்ளாக, பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி, உலகின் முதல் போதைப் பொருள் வணிகக் குழுமத்தை (Drug Cartel) உருவாக்கியது’, என அமெரிக்க தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் குறிப்பு ஒன்று சொல்கிறது.
இந்த வரலாறு நமக்கு சொல்லித் தரப்படவேயில்லை.
இந்த வெற்றிகரமான வணிகம், காலனிய, இனவாத அடித்தளத்தின் மீது கட்டப்பட்டது. இதை செட்ரிக்.ஜே.ராபின்சன் என்பவர், ‘இனவாத முதலாளித்துவம்’, என அழைக்கிறார்.
ஓப்பிய உற்பத்திக்கெனவே இரண்டு பெரும் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. ஒன்று பாட்னாவிலும், இன்னொன்று காஸிப்பூரிலும். இந்த காஸிப்பூர் தொழிற்சாலையைப் பார்வையிட்டு, அதன் கிடங்குகள் எவ்வளவு பெரியவை என வியந்து எழுதியவர், ஆங்கிலத்தின் மிகப் பிரபலமான எழுத்தாளரான ருட்யார்ட் கிப்ளிங். ருட்யார்ட் கிப்ளிங்கின் அபாரமான அந்தக் கட்டுரை, காலனியாதிக்கக் கொடுமைகளுக்கு முலாம் பூசி, அவை ஆங்கிலேய அரசின் சாதனைகள் போலக் காண்பிக்க உதவின. குளிர்காலத்தின் தொடக்கத்தில், காஸிப்பூர் தொழிற்சாலையில் மட்டுமே 35 லட்சம் பவுண்டுகள் (இன்றைய மதிப்பில் 4300 கோடி)மதிப்புள்ள ஓப்பியம் இருந்திருக்கிறது என் எழுதியிருக்கிறார். சீனச் சந்தை காஸிப்பூர் உற்பத்தி செய்யும் ஓப்பியத்தை மிகவும் விரும்புகிறது எனத் தொழிற்சாலையின் மேலாளர் சொல்கிறார். ஆனால், ஓப்பியத்தின் உற்பத்தியின் பின்னால் இருக்கும் கொண்டுங்கோன்மை, இந்த ஓப்பியத்தை வாங்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் சீனச் சமூகம் – இவை எதுவுமே இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற கிப்ளிங் பெருமகனுக்கு உறைக்கவில்லை. தொழிற்சாலையின் சில பகுதிகளில் எழும் நாற்றத்தைத் தவிர வேறெதுவுமே அவருக்கு பொருட்டாக இல்லை.
அதற்கு சில காலம் கழித்து, இந்தியாவிலிருந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற ரபீந்திரநாத் தாகூர், ‘ A whole nation, China has been forced by Great (!) Britain to accept the opium poison. When we read the history of unnatural and inhuman bloodshed in war, we have simply a feeling of horror mingled with that of wonder. But, in Indo-china opium traffic, human nature itself sinks down to such a depth of despicable meanness, that it is hateful even to follow the story to its conclusion’.
இதில் நகைமுரண் என்னவெனில், ரபீந்திரநாத் தாகூரின் தாத்தா, த்வாரகாநாத் தாகூர் ஒரு பெரும் ஓப்பிய வணிகர். ரபீந்திரநாத் தாகூரின் செல்வமும் அறமற்ற வழியில் சேர்ந்ததுதான்.
ஓப்பியம் கொண்டு வரும் சமூகச் சீரழிவைப் பல நாடுகளும் எதிர்த்தன. தாய்லாந்து, வியத்நாம் போன்ற நாடுகள், ஓப்பியத்துக்கு எதிராக மரண தண்டனையை கொண்டு வந்தார்கள். ஆனால், டச்சு, ஃப்ரெஞ்சு, ஆங்கிலேயக் கப்பல்கள், பிடிபடாமல், கடத்தல்காரர்களுக்குத் தொடர்ந்து ஓப்பியத்தை வெற்றிகரமாக விற்று வந்தார்கள்.
சீனமும், 1729 முதல், இரண்டு முறை ஓப்பியத்தைத் தட்சி செய்து சட்டம் இயற்றினார்கள். இதனால், கிழக்கிந்தியக் கம்பெனி, நேரடியாக ஓப்பிய வணிகத்தில் ஈடுபட முடியவில்லை. அப்படிச் செய்திருந்தால், சீனத்திலிருந்து தேநீர் இறக்குமதி செய்யும் உரிமைகளை இழந்திருப்பார்கள். எனவே, பாட்னா, காஸிப்பூர் தொழிற்சாலைகளில் இருந்தது கடும் பாதுகாப்புடன் வரும் ஓப்பியத்தை, கல்கத்தாவில் தனியார் வணிகர்களுக்கு ஏலத்தில் விற்றுவிடுவார்கள். அதன் பின்னர், கம்பெனிக்கும், ஒப்பியத்துக்கு எந்தவித தொடர்புமில்லை. ஓப்பியத்தை வாங்கும் வணிகர்கள், பியர்ல் நதியில் உள்ள வாம்புவா நகருக்குக் கொண்டு சேர்ப்பார்கள். அது சீன அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுங்கச் சாவடி அல்ல. அதற்கு பல மைல்கள் முன்பாகவே, வாம்புவாவில் இருக்கும் ஒரு சட்டத்துக்குப் புறம்பான தளம். கள்ளக்கடத்தல்காரர்கள், ஒப்பியத்தைக் கப்பலில் இருந்து இறக்கிக் கொண்டு, அதற்கான வெள்ளியைக் கொடுத்து விட்டுச் செல்வார்கள்.
சீனச் சுங்கச் சாவடியை அடையும் கப்பல், சுங்கத்தைக் கடந்து, தன்னிடத்தில் ஒப்பியம் எதுவுமில்லை என நிரூபித்து விட்டு, க்வாங்ஸூ நகரின் ஃபாரின் என்க்ளேவ் பகுதியை அடைந்து, தன்னிடம் உள்ள வெள்ளிகளை, கிழக்கிந்தியக் கம்பெனியிடம் ஒப்படைத்து விட்டு, அங்கிருந்து தேயிலைப் பொதியை ஏற்றிக் கொண்டு இங்கிலாந்து செல்வார்கள். இது ஒரு வகையான மும்முனை வணிகம். இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படும் ஓப்பியம் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு, அதற்கு ஈடாகப் பெற்ற வெள்ளியை வைத்து, இங்கிலாந்துக்கான தேயிலை கொள்முதல் செய்யப்பட்டு கொண்டு செல்லும் முறை. இதில், ஒப்பியம் வணிக லாபத்துடன், தேநீர் வணிகத்திலும் லாபம் பெற்றுக் கொள்ளும் அதே சமயத்தில், இங்கிலாந்து நாட்டின் அந்நியச் செலாவணிப் பிரச்சினையும் தீர்க்கப்பட்டது. இதில் நஷ்டப்பட்டது சீன நாடும், சமூகமும்தான்.
சீன அரசு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துகையில், நாங்கள் சீனத்துக்கு ஒரு போதும் ஓப்பியம் ஏற்றுமதி செய்வதில்லை எனப் பசப்பும் கிழக்கிந்தியக் கம்பெனி, காஸிப்பூர் ஆலைக்கு வருகை தரும் இங்கிலாந்து நாட்டின் அரசியல்வாதிகள், அறிவாளிகள் முதலியோருக்கு, இங்கே தயாராகும் ஓப்பியம் சீனத்துக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது எனச் சொல்லி வந்தது.
இப்படி, அரசாங்கமே புனையும் பொய்க்கு ஆங்கிலத்தில், ‘Orwellian’, என்பது பெயர். இது ஜார்ஜ் ஆர்வெல் என்னும் ஆங்கில எழுத்தாளர் எழுதிய, ‘1984’, என்னும் புகழ் பெற்ற நூலில் இருந்து உருவான சொல். இதிலும் அவலம் என்னவென்றால், ஜார்ஜ் ஆர்வெல்லின் தந்தை ஒரு ஓப்பியம் ஏஜெண்ட். ஜார்ஜ் ஆர்வெல் ஆங்கில அரசின் காவல் அதிகாரி.
இந்த வணிக விளையாட்டில் தாமதமாக நுழைந்து பெரும் பொருளீட்டியவர்கள் அமெரிக்கக் கொள்ளையர்கள். மிகக் குறுகிய காலத்திலேயே மிகப்பெரும் பொருளீட்டியவர்கள். ஆஸ்டர், கெபாட், பீபடி, ப்ரௌன், ஆர்ச்சர், ஹேத்வே, வெப்ஸ்டர், டிலானோ என்னும் வணிகர்கள், ஓப்பியத்தின் மூலம் பெரும் செல்வந்தர்களானார்கள். தெற்கு இத்தாலி மாஃபியா குழுக்களின் உறவின் வழி வந்த பெர்கின்ஸ், ஸ்டர்ஜிஸ், ரஸ்ஸல், ஃபோர்ப்ஸ் குடும்பங்கள் தங்கள் ஓப்பியம் வணிகத்தை இணைத்து அமெரிக்காவின் மிகப் பெரும் ஓப்பிய வணிகக் குழுமத்தை உருவாக்கினார்கள். இந்தப் பெயர்களில், பல இன்று பன்னாட்டு தொழில் நிறுவனங்கள். இவர்களைத்தான் வரலாற்றாசிரியர்கள், ‘பாஸ்டன் ப்ராமின்ஸ்’. என அழைக்கிறார்கள். மேற்சொன்ன ஓப்பியம் செல்வந்தர்களில் ஒருவரின் வாரிசுதான் ஃப்ராங்ளின் டி ரூஸ்வெல்ட் என்னும் ஃப்ராங்ளின் டிலானோ ரூஸ்வெல்ட். தாம் ஒரு ஓப்பியம் வணிகரின் வாரிசு என்பதைச் சொல்லாமல் விட்டுவிட்டார். இவர் அமெரிக்காவின் 32 ஆவது அதிபர்.
முதலாம் ஓப்பியப் போர்!
1729 ஆம் ஆண்டில் 15 டன்களாக இருந்த ஓப்பியம் ஏற்றுமதி, 1830 ஆம் ஆண்டில் 2310 டன்னாக உயர்ந்தது. 1840 ஆம் ஆண்டில், இது 3080 டன்னாக உயர்ந்தது. 1830 முதல் 1840 வரையிலான 10 ஆண்டுகளில், அதற்கு முந்தய 100 ஆண்டுகளில் இல்லாத அளவு ஓப்பியம் சீன தேசத்துக்குச் சென்றது எனில், இந்த ஏற்றுமதிகள் நிகழ்த்திய சீரழிவை நாம் யோசித்துக் கொள்ளலாம்.
1830 களின் இறுதியில், இந்தியாவில் இருந்து வெள்ளமெனப் பாயும் ஓப்பியத்தின் தாக்கம் தாளாமல், சீன அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. முதலில், ஓப்பியத்தைக் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. இது பெரும் பலனை அளிக்கவில்லை. எனவே சீன மன்னர், சீன நாட்டுக்குள் ஓப்பியம் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடிவெடுத்தார். தனது அரசில் இருந்த நேர்மையான அரசு நிர்வாகியான லின் ஸெசு (Lin Zexu) என்பவரை அனுப்பினார். 1839 ஆம் ஆண்டு, க்வாங்ஸூ வந்தடைந்த அவர், ஓப்பிய வணிகத்தை தடை செய்தார். அத்துடன் நில்லாமல், அனைத்து அந்நிய நாட்டு வணிக நிறுவனங்களும், தங்களது கிடங்குகளில் சட்டத்துக்குப் புறம்பாக வைக்கப்பட்டிருந்த ஓப்பியத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு ஆணையிட்டார். அந்த ஆணையை ஏற்றுக் கொள்ள மறுத்த அந்நிய வணிகர்களை வீட்டுக் காவலில் வைத்தார்.
வேறு வழியின்றி, கள்ளத்தனமாகப் பதுக்கப்பட்டிருந்த 1075 டன் ஓப்பியத்தை அவர்கள் லின் வசம் ஒப்படைத்தனர். மொத்த ஓப்பியத்தையும் லின் முன்னின்று அழித்தார்.
எங்களுக்கும், ஓப்பியம் வணிகத்துக்கும் கொஞ்சமும் தொடர்பில்லை என அன்றுவரை சீன அரசிடம் பொய் சொல்லி வந்த ஆங்கிலேயரின் முகமூடி கழன்று விழுந்தது. 1030 டன் ஓப்பியம் என்பது கிட்டத்தட்ட 60 லட்சம் பவுண்டுகள் மதிப்புள்ளது. அன்று அது சூரியன் மறையாப் பேரரசின் வருமானத்தில் 10%.
ஆசை வெட்கமறியாது அல்லவா.. முகமூடி கழன்று, உலகின் முன் அசிங்கப்பட்டு நிற்கிறோமே என்றெல்லாம் இங்கிலாந்து தயக்கம் காட்டவில்லை. சீனத்தின் மீது போர் தொடுத்தது.
துரதிருஷ்டவசமாக, அந்தப் போரில் சீனம் தோல்வியுற்றது. இறுதியில், நாஞ்சிங் நகரில் 1842 அம் ஆண்டு ஒரு உடன்படிக்கை கையெழுத்தானது. அதன் படி, அழிக்கப்பட்ட ஓப்பியத்தின் மதிப்பான 60 லட்சம் பவுண்டுகளை சீனம் நஷ்ட ஈடாக கொடுத்தது. அதுமட்டுமின்றி, மேலும் 4 துறைமுகங்களில், அந்நிய நாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது. ஹாங்காங் தீவு ஆங்கிலேயர்களுக்கு நீண்ட கால குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது.
முதலாம் ஓப்பியப் போர்..
ஹாங்காங் வழியே, ஓப்பிய வணிகம் ஜாம் ஜாமென்று குதித்துக் கொண்டு ஓடத் தொடங்கியது. அடுத்த 25 ஆண்டுகளில், பீஹாரில் ஒப்பியம் உற்பத்தி செய்யும் நிலப்பரப்பு 600% அதிகரித்தது.
இதைத் தொடர்ந்து இரண்டாவது ஓப்பியப் போர் 1953 ஆம் ஆண்டு தொடங்கியது. அதில் இங்கிலாந்தும், ஃப்ரான்ஸும் இணைந்து சீனத்தைத் தோற்கடித்தன. 1840 ஆம் ஆண்டில் 3080 டன்னாக இருந்த ஓப்பியம் ஏற்றுமதி, 1880 ஆண்டில் 7000 டன்னாக உயர்ந்தது.
இந்த இரண்டு போர்களின் முடிவிலும் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைகள் சீனத்தைப் படுகுழியில் தள்ளின. இதிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு ஒரு நூற்றாண்டு பிடித்தது. நூறாண்டு கால இழிவு (Hundred years of Humiliation) என இதை அவர்கள் அழைக்கிறார்கள்.
மும்பையின் எழுச்சி!
மும்பையை முதன் முதலில் சுற்றிப் பார்க்கச் சென்ற போது, ஒரு வழிகாட்டியை அழைத்துச் சென்றேன். அவர் என்னை முதலில், மும்பை என்னும் பெயர்க்காரணத்தின் கடவுளாகிய மும்பா தேவி கோவிலுக்கு அழைத்துச் சென்றார். இந்த அன்னையின் அருளால்தான் மும்பை செல்வத்தின் உறைவிடமாக இருக்கிறது என்றொரு புனைகதையைச் சொன்னார்.
ஆனால், உண்மை அதுவல்ல. இரண்டாம் ஜார்ஜ் மன்னருக்கு வரதட்சிணையாக வந்த மும்பைத் தீவுகள் பல காலம் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வருமானம் தராத ஒரு இடமாக இருந்தது வந்தது. இதற்குக் காரணங்களும் இருந்தன. மும்பை நகரைத் தாண்டி, நாக்பூர், இந்தோர், பரோடா, க்வாலியர் போன்ற உள்நாட்டுப் பகுதிகள் யாவும் மராத்தியக் குறுநில மன்னர்கள் வசம் இருந்தன
கங்கைச் சமவெளியைக் கைப்பற்றிய பின்னர், ஆங்கிலேயர்கள் மேற்கு மற்றும் மத்திய இந்தியாவைக் கைப்பற்றும் முயற்சிகளில் இறங்கினார்கள். ஆனால், செயல் திறன் வாய்ந்த மராத்தியப் படைகளைத் தோற்கடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. பெரும் முயற்சிகளுக்குப் பின்னர் மராத்தியர் எதிர்ப்பு அடங்கிற்று. ஆனால், முற்றிலுமாக அடிமைப்பட வில்லை.
இதே காலகட்டத்தில், ஓப்பியத்துக்கான சீனம் மற்றும் கிழக்கிந்தியத் தீவுகளில் பெரும் தேவை காரணமாக மும்பை வழியேயும் ஓப்பியம் ஏற்றுமதியாகத் தொடங்கியது. 1800 முதல் 1803வரை மட்டுமே, மும்பைத் துறைமுகம் வழியாக 63.5 டன்கள் ஓப்பியம் ஏற்றுமதியான புள்ளி விவரம் ஆங்கிலேயரின் கண்களை உறுத்தியது.
ஆங்கிலேயர்கள் முதலில், கங்கைச் சமவெளியில் செய்தது போலவே ஓப்பியம் வணிகத்தைத் தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர முனைந்தார்கள். சில மன்னர்களிடம் ஓப்பியம் பயிர் செய்வதைத் தடை செய்வது தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்த கிழக்கிந்தியக் கம்பெனியிடம் போதிய நிர்வாக அமைப்புகள் இல்லாததனால், ஓப்பிய வணிகம் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரத்துக்குள் வரவில்லை.
அதற்கு இன்னொரு முக்கியக் காரணமும் இருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியின் அடக்குமுறை ஆட்சிக்குள் இல்லாததால், இந்தியாவின் மத்தியப் பகுதிகளில், ஓப்பியம் உள்ளிட்ட பல வேளாண் பொருட்களுக்கான வணிகச் சங்கிலிகள், அவற்றை இயக்கிய இந்தியப் பெரு வணிகர்கள், நிதிப் பரிமாற்ற அமைப்புகள் என ஒரு வணிக வலைப்பின்னல் மிக வலுவாக உருவாகியிருந்தது. இந்த வலைப்பின்னலில், இந்துக்கள், மார்வாரிகள், போரா முஸ்லீம்கள், பார்சிகள், பாக்தாதிகள் என வலுவான வணிகக் குழுமங்கள் முக்கியப் பங்கு வகித்தன.
‘if you can’t colonise them, try and dominate them. If you can’t dominate them, try and tax them’, என கிழக்கிந்தியக் கம்பெனி, இறங்கி வந்தது. மும்பைத் துறைமுகம் வழியே செய்யப்படும் ஓப்பிய ஏற்றுமதிக்கு, ஒரு சிறிய துறைமுக வரி விதித்தது. ஆனாலும், ஓப்பியம் கோவா, கராச்சி துறைமுகங்கள் வழியே ஏற்றுமதி தொடர்ந்தது. இதில் முக்கியமாக கராச்சி துறைமுகம் மும்பைத் துறைமுகத்துக்குப்பெரும் போட்டியாக இருந்து வந்தது. படையெடுப்பின் மூலம் கராச்சியைக் கைப்பற்றி, அந்தத் துறைமுகத்தையும் தன் அதிகாரத்துக்குள் கொண்டு வந்தது கிழக்கிந்தியக் கம்பெனி. இரண்டு முக்கியத் துறைமுகங்களும் தன் ஆதிக்கத்துக்குள் வந்தவுடன் துறைமுக வரிகளை 75% வரை உயர்த்திக் கொண்டது.
கிழக்கிந்தியாவின் ஓப்பிய வணிகத்துக்கும், மத்திய இந்தியாவின் ஓப்பிய வணிகத்துக்கும் பார தூரமான வேறுபாடுகள் இருந்தன. கிழக்கிந்தியாவின் ஒப்பிய வணிகள், பயிர் செய்தலை முழுக்க முழுக்க கம்பெனிக் கட்டுபாட்டுக்குள் வைத்திருந்தது. உற்பத்தியாளர்களுக்கு லாபமே இல்லாத விலையில் கொள்முதல் செய்தது. கொள்முதல் செய்யப்பட்ட ஓப்பியத்தை, பெரும் தொழிற்சாலைகளை எழுப்பி, கடுமையான கட்டுப்பாடுகளும், கண்காணிப்பும் கொண்டு பதப்படுத்தியது. இந்த நிர்வாகச் செலவுகள், ஒப்பியத்தின் விலையில் 30% வரை இருந்தன. இதில் லாபம் பார்த்தவர்கள் கிழக்கிந்தியக் கம்பெனி, அவர்களைச் சார்ந்திருந்த ஒட்டுண்ணி முதலாளிகள் மற்றும் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியினர் மட்டுமே
ஆனால், மால்வா (மத்திய இந்தியா) வின் ஓப்பியத் தொழில் வேறு மாதிரி இருந்தது. இங்கே ஓப்பியம் பயிர் செய்யும் கட்டாயம் இல்லை. நல்ல விலை கிடைத்ததால், உழவர்கள் ஓப்பியம் பயிர் செய்தார்கள். தங்கள் பயிருக்கு ஒரு வருடம் முன்பேயே முன் தொகையை வணிகர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்கள். ஓப்பியம் அறுவடை செய்யப்பட்டு, ஒரு ஆண்டு வரை உற்பத்தியாளர்களிடமே இருந்து வந்தது. பதப்படுத்துவது ஒரு குடிசைத் தொழில் போல நடந்து வந்தது. ஓரளவு சுதந்திரமாக நடந்து வந்ததால், உற்பத்தியாளர்கள், வணிகர்கள், ஏற்றுமதியாளர்கள், உள்ளூர் சிற்றரசர்கள், மும்பைத் துறைமுகத்தில் துறைமுக வரிகளை மட்டுமே வசூல் செய்து வந்த கிழக்கிந்தியக் கம்பெனி என அனைவருக்குமே லாபகரமாக இருந்தது.
மும்பையின் செல்வமும், தொழிலதிபர்களும் எனது சுற்றுலா வழிகாட்டி சொன்னது போல, மும்பா தேவியின் அருளால் உருவானதல்ல. ஓப்பியம் என்னும் மனித குலத்துக்கே எதிரான போதைப் பழக்கத்தில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டையும், அதையொட்டி இருந்த பல தெற்காசிய நாடுகளையும் வீழ்த்தி, பல நூற்றாண்டுகள் அவர்களின் நல்வாழ்வை நாசம் செய்ததில் கிடைத்த செல்வம் அது. அதே போல, மத்திய இந்தியாவின் அரசர்கள், 18/19 ஆம் நூற்றாண்டுகளில் அவர்கள் கட்டிய அரண்மணைகளும் ஒப்பிய வணிகத்தின் மூலம் கிடைத்த செல்வத்தால் உருவானவை.
வரலாற்றாசிரியர் ஃபரூக்கியின் வார்த்தைகளில் சொல்வதென்றால், ‘The destiny of Bombay as a great commercial and industrial center was born of its becoming an accomplice in drugging countless Chinese with opium, a venture in which Indian business class showed great zeal alongside the East India Company. This is the sordid underside of Bombay’s colonial past’.
இந்தியாவின் மான்செஸ்டர் என மும்பை அழைக்கப்படுவது ஒரு மோசடி. ஒரு காலத்தில், உலகின் மிகப் பெரும் போதைப் பொருள் வணிக நகரமாக இருந்தது என்பதே உண்மை. பின்னர் அவ்வணிகம் தளர்ந்து விட, அதில் ஈட்டிய செல்வம், ஜ்வுளித்துறையை நோக்கித் திரும்பியது. மும்பையின் கீழ்மையான சரித்திரத்துக்கு முலாம் பூசி, மும்பை இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கத் தொடங்கினார்கள்.
முன்னாள் போதைப் பொருள் வணிகர், பின்னாளில் வியாபார காந்தம்!
இந்தியாவின் இவ்வணிகத்தை அன்றைய தேசியத் தலைவர்களான தாதாபாய் நவ்ரோஜி, பண்டித ரமாபாய், கோபால கிருஷ்ண கோகலே போன்றோர்கள் மிக வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள்.
கோகலேவின் வார்த்தைகளில் சொல்வதெனில், ‘I have always felt a sense of deep humiliation at the thought of this (opium) revenue, derived as it is practically from the de-gradation and moral ruin of the people of china’.
இதில் நஷ்டப்பட்டது சீனச் சமூகமும், தெற்காசியச் சமூகங்களும்தான். கிட்டத்தட்ட 2-3 நூற்றாண்டுகள் உலகின் மிகப் பெரும் சதவீத போதையடிமைகளைக் கொண்ட சமூகமாக, அவை சீரழிந்தன
ஓப்பியம் மீண்டெழுதல்:
ஓப்பியம் என்னும் போதைப்பொருள் உருவாக்கும் இன்பம் மற்றும் ஆபத்தின் விளைவாக, சமூகத்தில் அது புத்தாக்கங்களின் வழியே உருவாகும் புதிய போதைப் பொருள் அடிமையாக்கம், மீட்டுருவாக்கம் என மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருக்கிறது.
இந்த இடத்தில்தான் ஒரு புனை கதையாளரின் சாமர்த்தியத்துடன் அண்மைக் கால வரலாற்றைக் கொண்டு வந்து இணைக்கிறார் அமித்தாவ் கோஷ்.
’உங்களால் சந்தையில் போட்டியிட முடியாவிட்டால், உங்கள் பொருளுக்கான சந்தையை உருவாக்குங்கள்’, என்று சேக்லர் குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் சொல்கிறார். சேக்லர் குடும்பத்தினர் யார்? இவர்கள், பர்ட்யூ ஃபார்மா என்னும் மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர்கள்.
பர்ட்யூ ஃபார்மா, 1996 ஆம் ஆண்டு, ‘Oxycontin’, என்னும் ஒரு புதிய மருந்தை உருவாக்கினார்கள். இது ஒரு வலிநிவாரணியாக சந்தைப்படுத்தப்பட்டது.
ஆனால், உண்மையில் அது ஒரு போதைப் பொருள். இது ஒப்பியத்திலிருந்து தயாரிக்கப்பட்டது. பர்ட்யூ ஃபார்மா, இந்த மருந்து உட்கொண்டால், அடிமையாகும் சாத்தியங்கள் 1% கூட இல்லை என சந்தைப் படுத்துகிறார்கள். ஆனால், இந்த க்ளெய்முக்கு எந்த ஆதாரமுமில்லை. கடைந்தெடுத்த பொய்.
முதலாம் ஆண்டு இந்த மருந்து 400 கோடி விற்பனையாகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில், இதன் விற்பனை 10000 கோடியைத் தொடுகிறது. கிழக்கிந்தியக் கம்பெனி சீனாவில் செய்த சாதனையை இது முறியடிக்க வில்லையென்றாலும், பெரும் சாதனை.
தாமதமாக விழித்துக் கொண்ட அமெரிக்க அரசு, இதைத் தோண்டத் தொடங்கியதும் எலும்புக் கூடுகள் வெளியே வந்தன.
அமெரிக்க மருந்துகள் அனுமதிக்கும் நிர்வாகத்தில், இந்த மருந்தை அனுமதித்த இரு அதிகாரிகள், பின்னர் பர்ட்யூ ஃபார்மாவில் ஆலோசகர்களாகச் சேர்ந்தார்கள். (ரிலையன்ஸ் பெட்ரோலிய நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், ஆலோசகர்கள் பலரும் இந்தியப் பெட்ரோலிய நிறுவனங்களாகிய ஓ.என்.ஜி.சி, இந்தியன் ஆயில் போன்ற நிறுவனத்தில் பணிபுரிந்த உயர் அதிகாரிகள் என்பதை இங்கே குறிப்பிடுவது முக்கியம்).
மருத்துவர்களுக்கான அதீத ஊக்கத் தொகை, அவர்களை இந்த மருந்தை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்க வைத்தது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஊரக அமெரிக்கக் குடிமக்கள். அதில் கறுப்பினத்தவர்களே அதிகம்.
இன்று அந்தக் கம்பெனி திவாலாகிவிட, அதை உருவாக்கிய குடும்பம், அதிகாரிகள் எல்லாம் எஸ்கேப்.
சதுரங்க வேட்டை, ஈமுக் கோழி கேஸ்கள் இங்கு மட்டுமல்ல அமெரிக்காவிலும் உண்டு
ஓப்பிய வணிகம் எப்படி ஒடுக்கப்பட்டது?
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சீனம், இந்தியா என்னும் இரு நாடுகளும் ஒப்பிய வணிகத்துக்கு எதிரான மிகப் போரை நடத்தினார்கள். 1949 ஆம் ஆண்டு, தேசிய ஓப்பியம் மாநாட்டை இந்தியா நடத்தியது. அறிவியல் மற்றும் மருத்துவம் தவிர இதரப் பயன்பாடுகளுக்கு ஒப்பியம் பயன்படுத்துவதை அரசு முற்றிலுமாகத் தடை செய்தது. அடுத்த 17 ஆண்டுகளில், போதைக்காகப் பயன்படுத்தப்படும் ஓப்பியம் 150 டன்களில் இருந்தது 2 டன்னாகக் குறைந்தது. ஒப்பியப் பயன்பாடு 20 ஆண்டுகளில் வட இந்தியாவின் பொது சமூகத்தின் இயல்பான பயன்பாட்டில் இருந்து மறைந்து போனது.
1906 ஆம் ஆண்டில் சீன மன்னர் qing ஓப்பியப் பயன்பாட்டை சட்ட விரோதமாக அறிவித்தார். மெல்ல மெல்ல இது ஆங்கிலேய நாட்டிலும் மாற்றங்களை உருவாக்கியது. அடுத்த பத்தாண்டுகளில், ஓப்பியப் பயனபாட்டை மெல்ல மெல்ல குறைப்போம் என சீனாவும், அதே காலகடத்தில், சீனாவுக்கு அனுப்பும் ஓப்பியத்தை மெல்ல மெல்லக் குறைத்து நிறுத்திக் கொள்வோம் இங்கிலாந்து நாடும் ஒப்புக்கொள்ள, ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. சீன சமூகத்தினால், ஓப்பியப் பயன்பாட்டை ஒருபோதும் நிறுத்த முடியாது என்பதால் இந்த ஒப்பந்தம் தோல்வியில் முடியும் என ரகசியமாக ஆங்கிலேயர்கள் நம்பினார்கள். ஆனால், சீனச் சமூகம் ஓப்பியப் பயன்பாட்டை சமரசமின்றி ஒழித்துக் கட்டியது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இந்தியா ஆங்கிலேயரிடம் இருந்தும், சீனம் ஓப்பியத்திடம் இருந்தும் விடுதலை பெற்றன.
அடுத்த 80 ஆண்டுகளில், உலகின் மிகப் பெரும் பொருளாதார, தொழில்நுட்ப, அறிவார்ந்த வல்லரசாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் சீனத்தின் கதை இன்னொரு நாளில் பேசப்பட வேண்டிய ஒன்று.
ஏன் இந்தப் புத்தகம் முக்கியமாகிறது?
முதல் காரணம், இந்தப் புத்தகம் வரலாற்றை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அணுகுகிறது. ஐரோப்பியரின் காலனியாதிக்கத்துக்கு பேராசை, என்பது காரணம் என்றாலும், அந்தக் காலனிய ஆதிக்கப் போர்களை நடத்த, தேநீர் மற்றும் ஓப்பியம் என்னும் இரண்டு தாவரங்கள் உதவின என்பது ஒரு புதிய பார்வை. மேலும், மேற்கத்த்திய காலனிய ஆதிக்கம், தெற்காசிய நாடுகளுக்கு பொருளாதாரக் கட்டமைப்பையும், நவ நாகரீகத்தையும் கொண்டு வந்தது எனக் கட்டமைக்கப்படும் ஒரு வரலாறு பெரும் பொய். பென்னி குய்க், தாமஸ் மன்றோ போன்ற சில விதிவிலக்குகளைத் தவிர, ஐரோப்பிய அணுகுமுறையின் பின்னால் இருந்த நோக்கம் கொள்ளைதான்.
ஆங்கிலேயர் இந்தியா வந்த போது, உலகின் மிகப் பெரும் பொருளாதாரம் இந்தியாதான். உலகின் 24% பொருளாதார உற்பத்தி இந்தியாவில் நடந்து வந்தது. 1947 ல், அவர்கள் வெளியேறுகையில், அது 4% ஆகச் சிறுத்துப் போனது. இந்தியப் பொருளாதாரத்தை 200 ஆண்டுகளில் சீரழித்தவர்கள் ஆங்கிலேயர்கள். இது உரத்துப் பேசப்பட வேண்டிய ஒன்று.
அதே போலத்தான் மும்பையின் வியாபார காந்தங்களின் வணிக சாம்ராஜ்யங்களும், வட இந்திய மகாராஜாக்களின் அரண்மனைகளும். அவை போதைப் பொருள் வணிகத்தினால் கட்டப்பட்டவை. 200 - 300 ஆண்டுகள் தெற்காசியாவின் ஆன்மாவை, எதிர்காலத்தை உறிஞ்சிய ஒட்டுண்ணிகள் இவர்கள்.
இரண்டாவது காரணம், ஒரு வரலாற்றுத் தகவல் வழியே எழுதப்பட்ட non-fiction புத்தகம் என்றாலும், இது புனைவின் அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் வரலாற்றின் மீது பெரும் ஆர்வம் கொண்டவராகவோ, ஆய்வாளாராகவோ இல்லாமல், ரொமீலா தாப்பர் போன்ற வரலாற்றாசிரியர்களின் புத்தகங்களைப் படிப்பது கடினம். ஆனால், இது துல்லியமான வரலாற்றுத் தகவலின் மீது புனைவின் அணுகுமுறையில் எழுதப்பட்ட புத்தகம். இதை நீங்கள் ஒரு நாவல் போலப் படித்துவிட முடியும்.
மூன்றாவது காரணம் – மொழியழகு. மிகப் பெரும் செவ்வியல் படைப்புகள் மிக எளியவையாகத் தெரியும். ஆனால் அது நம்மை ஏமாற்றக் கூடியது. தெள்ளத் தெளிந்த நீரில், உண்மையான ஆழம் என்பது நம் கண்ணுக்குத் தெரிவதல்ல. அது ஒரு மாயை மட்டுமே. நம் பாஷையில் சொல்ல வேண்டுமெனில் இளையாராஜாவின் இசை போல.
அமிதாவ் கோஷ், நம் சமூகத்தின் சொத்து. நவீன இந்தியாவின் பெருமைமிகு காவியகர்த்தா.
Comments
Post a Comment