லவ் யூ சென்னை - நூல் அறிமுகம்.
தகடூர் புத்தகப் பேரவை நூல் அறிமுகம்.
நூல் தலைப்பு: லவ் யூ சென்னை
ஆசிரியர்: டாக்டர் கோ. ஒளி வண்ணன்.
பதிப்பு: எழிலினி பதிப்பகம்.
பக்கம்: 144
விலை: ரூ.300
நூல் அறிமுகம்: நூலகர் சி. சரவணன்.
எம்ராய்ட், எழிலினி பதிப்பக உரிமையாளர் திரு. கோ.ஒளிவண்ணன் அவர்கள் எழுதிய குறுநாவல் இது. இது இந்த ஆண்டு சென்னை புத்தக திருவிழாவில் வெளியிடப்பட்டது. இந்த நூலின் சிறப்பு சமகாலத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள கதையாகும். குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல நூறு உயிர்கள் காணாமல் போனதும், லட்சக்கணக்கான வாகனங்கள் பழுதானதும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் நாசமானதும் அனைவரும் அறிவோம். இந்த அவலத்தை நம் கண்ணுக்கு படம் பிடித்து காட்டுகிறார். அரசு நிர்வாக செயல்படாமல், முடங்கி இருந்தால் இது போன்ற சீரழிவுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த பேரழிவில் தன் பெற்றோர்களை இழந்த ஒரு மாணவியின் கண்ணீர் கதையை விவரிக்கிறார் நூலாசிரியர். கோவையில் படித்து வரும் அந்த மாணவி, தன் தந்தையிடம் வெள்ளப்பெருக்கு பற்றி தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது, தாயும் தந்தையும் தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கி இறக்கும் நிகழ்வை விவரிப்பது நம்மையெல்லாம் கலங்க வைக்கிறது. இதை படிக்கும் போது, இது போன்ற ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் துன்பத்திற்கும் பெரும் இழப்பிற்கும் ஆளாகி இருப்பார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது.
அண்மைக்காலமாக டிஜிட்டல் வடிவிலான பண மோசடிகள் பற்றி நாம் படித்து வருகிறோம். கண்ணுக்கு புலப்படாத நபர்கள் ஒன்றும் அறியாத மக்களை எவ்வாறெல்லாம் ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள் என்பதை தத்ரூபமான குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.
அதுவும் நன்கு படித்த, கணினி அறிவு பெற்ற மூன்று இளைஞர்கள் தங்களுடைய பணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு பெரும் துயரம் அடைகின்றனர். காவல்துறையை நாடுகின்றனர். இதை அறிந்த மோசடி கும்பல் ‘காவல்துறைக்கு செல்லாமல் இருந்தால் உங்கள் பணம் உங்கள் உங்களைத் தேடி வரும்’ என்று குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள். அந்த குறுஞ்செய்தியை நம்பி புகாரை திரும்பப் பெறுகிறார்கள். அந்த மோசடி கும்பலை சுற்றி வளைக்க காவல் துறை எப்படியெல்லாம் திட்டம் தீட்டி அவர்களை பிடிக்கிறது என்பதை விறுவிறுப்பாக எளிய நடையில் எழுதியுள்ளார் நூலாசிரியர்.
சமகாலத்தில் நடைபெறும் இதுபோன்ற டிஜிட்டல் அரெஸ்ட் சம்பவங்களை நாம் படிக்கும் பொழுது ஏதோவொரு இடத்தில், யாரோ ஒருவர் பணம் இழப்பதாக நாம் நினைக்கிறோம். அதே நேரத்தில் நமக்கும் இப்படியான ஒரு நிலை நடந்து விட்டால் என்ன செய்வது என்ற ஒரு அச்சமும் வருகிறது.
நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. இந்த தொழில்நுட்பங்கள் எல்லாம் மனிதனுடைய வேலையை குறைக்கவும், உடல் உழைப்பை குறைக்கவும், சொகுசான வாழ்க்கை வாழவும் பயன்படுகின்றன. நிலைமை இவ்வாறு இருந்த போதிலும், தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்கள், குறிப்பாக அப்பாவி மக்கள் எவ்வாறெல்லாம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதை படம் பிடித்து எடுத்துக்காட்டுகிறார் நூலாசிரியர். இந்தக் காலகட்டத்தில் இந்த நூலை அனைவரும் வாசிக்க வேண்டியது அவசியம்.
நன்றி.
Comments
Post a Comment