நானும் ஒரு பெண்தானே! நூல் அறிமுகம்.
தகடூர் புத்தகப் பேரவை நூல் அறிமுகம்:
நூல்: நானும் ஒரு பெண்தானே!ஆசிரியர்: நூலகர் சி சரவணன்
பக்கம்: 206.
விலை 200
பதிப்பு: பாரதி பதிப்பகம்
நூல் அறிமுகம்:
கூத்தப்பாடி மா.பழனி
செயலாளர்
தருமபுரி மாவட்டப் படைப்பாளர் - பதிப்பாளர் சங்கம்
பேச : 96265 87770
நூலகர் சி. சரவணன் அவர்கள் எழுதி இருக்கும் நானும் ஒரு பெண்தானே! என்னும் இந்த நாவலை நான் வாசிக்கத் தொடங்கியது முதல், படித்து முடிக்கும் வரை அடுத்து என்னவாக இருக்கும்? என்னும் எதிர்பார்ப்பு எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.
இது ஓர் அற்புதமான கதை. எளிய நடையில், நல்ல தமிழில், பிறமொழிச் சொற்கள் கலக்காமல் எழுதப்பட்டுள்ளது இந்த நூலின் சிறப்பு.
கதை நாயகன் சக்திவேல். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞன். கதை நாயகி உமா. சென்னையைச் சேர்ந்த படித்த இளம்பெண். இருவரும் கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் பணிபுரிகின்றனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே துறையில் பணிபுரிவதால் நெருங்கிப் பழகுகின்றனர். ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்ள மனதளவில் விரும்புகின்றனர். ஆனால், வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில்லை. காரணம், சமூகக் கட்டுபாடுகளும், குடும்பச் சூழலும்.
சக்திவேல் தன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொல்வார் என்று எதிர்பார்த்து ஏமாந்து போகிறாள் உமா. இதனால், உமா மனவேதனை அடைகிறாள். உமாவுக்குத் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுவதால், அவள் படும் மனக் குழப்பம், மனஉளைச்சல் இந்தக் கதையின் கருப்பொருள். இருவருக்கும் திருமணம் நடைபெறுமா? நடைபெறாதா? என்பதை அறிந்துகொள்ள ஆவலைத் தூண்டும் விறுவிறுப்பான கதையாக இது இருக்கிறது.
சமகால நிகழ்வுகளைக் கற்பனைகள் எதுவும் இல்லாமல் எதார்த்தமாக எழுதி உள்ளார் நூலாசிரியர். கதை நாயகி தன் வாழ்க்கையைத், தானே சொல்வதுபோல் கதாசிரியர் கதையை எழுதியிருப்பது அவரது எழுத்தாற்றலைக் காட்டுகிறது. இந்தக் கதையை வாசிக்கும்போது, கதை நாயகியோடு நாமும் பயணிப்பது போன்ற உணர்வு வருகிறது.
கதையின் முதல் பாதியில், தருமபுரி மாவட்டத்தில் நிகழும் இலக்கிய நிகழ்வுகள், புத்தகத் திருவிழா நிகழ்ச்சிகள், ஒகேனக்கல் சுற்றுலா போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சென்னையைச் சேர்ந்த கதை நாயகி, இந்த மாவட்ட மக்களுடன் பழகும்போது, அவள் பெறும் அனுபவங்களை வார்த்தைகளால் விவரிப்பதை நாம் படிக்கும்போது, நம்மை நெகிழ வைக்கிறது.
இந்தப் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் போதிய வேலை வாய்ப்பு இல்லாமல் படும் மன உளைச்சலையும், அதனால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளையும் படம் பிடித்துக் காட்டுகிறார் நூலாசிரியர்.
தமிழ் மக்களின் கலை, இலக்கிய, அரசியல், பண்பாடுகளைப் பற்றி ஆங்காங்கே கதையில் சேர்த்திருப்பது சிறப்பு. மாறிவரும் உணவுப் பழக்கங்கள், சமூக மாற்றங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறது இந்தக் கதை. கதையில் ஆங்காங்கே வரும் விவாதங்களுக்கு உரிய இலக்கிய ஆதாரங்களைச் சேர்த்திருப்பது நூலாசிரியரின் ஆளுமையையும் நடுநிலையையும் காட்டுகிறது.
சமகாலத்தில் தமிழ்ச் சமூகத்தில் நிலவும் வேலை வாய்ப்பின்மை, மதுவால் விளையும் தீமைகள், விவசாயிகள் படும் துன்பங்கள், கூலி தொழிலாளர்கள் படும் வேதனைகள், எளிய மக்கள் படும் வேதனைகள் போன்ற பல்வேறு சமூகப் பிரச்சனைகளை ஆங்காங்கே சேர்த்து நம்மை சிந்திக்க வைக்கிறார் நூலாசிரியர்.
படித்து நல்ல பதவி இருக்கும் அலுவலர்கள் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி மக்களை சுரண்டுவதையும், துன்புறுத்துவதையும் சிறப்பாக எழுதியுள்ளார். இவற்றையெல்லாம் படிக்கும் போது நம் மனத்தில் கோபமும் வேதனையும் வருகிறது.
அனைத்துக்கும் மேலாக முப்பது வயதை நெருங்கும் நன்கு படித்த பெண், தனக்குத் திருமணம் ஆவதில் ஏற்படும் காலத் தாமதத்தால் படும் மனப் போராட்டத்தையும், மன உளைச்சலையும் அவளே சொல்வதை நாம் படிக்கும்போது நம் நெஞ்சை உருக்குகிறது.
சமூகக் கட்டுப்பாடு, சுயக் கட்டுப்பாடு, குடும்பச் சூழல் போன்ற காரணங்களால் பெண்கள் எவ்வாறெல்லாம் மன உளைச்சலுக்கும், மன வேதனைக்கும் ஆளாகிறார்கள் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த கதை.
ஆண்களும் பெண்களும் சமம் என்று நாம் சொல்லிக் கொண்டு இருந்தாலும், உண்மையில் அவ்வாறு இல்லை என்பதை இந்தக் கதை நாயகி தன் வாழ்க்கை அனுபவம் மூலம் உருக்கமாகக் கூறுகிறார்.
ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய கதை இது. இந்தச் சமூகம் எப்படி இருக்கிறது என்பதைக் காட்டும் காலக் கண்ணாடிபோல் உள்ளது இந்தக் கதை. இந்தக் கதையை வாசிக்கும்போது, ஒரு திரைப்படத்தைக் காண்பது போன்ற உணர்வு வருகிறது.
அதேநேரத்தில் வாசிப்பு, நூலகம், புத்தகத் திருவிழா என வாசிப்பின் அவசியத்தைக் கதைக்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம் வாசிப்பின் மீது கதையாசிரியருக்கு இருக்கும் ஆர்வம் வெளிப்படுகிறது.
அற்புதமான கதையை வாசகர்களுக்குக் கொடுத்திருக்கும் நூலகர் சி. சரவணன் அவர்களின் எழுத்தாற்றல் மேலும் மேலும் சிறக்க வேண்டும். வாசகர்கள் இது போன்ற படைப்புகளை வாசித்து ஊக்கப்படுத்த வேண்டும்.
Comments
Post a Comment