ஆங்கிலம் (குறுநாவல்) - நூல் அறிமுகம்.
நூல் ஆசிரியர்: சிவசக்திவேல்
நூல் அறிமுகம்: நூலகர் சி சரவணன்.
அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள், உயர் கல்வி பயிலும் போது, ஆங்கில மொழியை சரியாக படிக்க முடியாமல் படும் தவிப்பு, அதனால் அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல், வேதனைகள் - இந்த நூல் விவரிப்பதோடு அதற்கு ஒரு தீர்வும் சொல்கிறது. இந்தக் கதையில் வறுமையில் இருக்கும் கிராம குடும்பத்திலிருந்து ஒரு மாணவன் கோவை அரசு பொறியியல் கல்லூரியில் சேருகிறான். அந்தக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்து வந்தவர்கள். இவர் மட்டுமே தமிழ் வழியில் பள்ளியில் படித்ததால் ஆங்கில மொழியை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் கஷ்டப்படுகிறார். பிறகு, மனப்பாடம் செய்தாவது தேர்ச்சி பெற வேண்டும் எனும் நோக்கோடு பாடங்களை மனப்பாடம் செய்து தேர்ச்சி பெற்று வருகிறார். இவருடைய ஆங்கில உச்சரிப்புகள் கேலிக்குரியதாக இருப்பதாக சக மாணவர்கள் சொல்வதால், மிகுந்த வேதனை அடைகிறார். வகுப்பிலும், குழு கூட்டங்களிலும் ஆங்கிலம் சரியாக பேச முடியாததால் தற்கொலைக்கு போகும் அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகிறார். கல்லூரிக்கு வந்து, நேர்முகத் தேர்வு நடத்தும் நிறுவனங்கள் இவருக்கு ஆங்கில மொழி திறமை குறைவு என்பதால் பணி வாய்ப்பு வழங்குவதில்லை.
பிறகு சென்னையிலும் பெங்களூரிலும் வேலை தேடி அலைந்து ஒரு சிறிய வேலையில் சேருகிறார். பிறகு அதன் மூலம் அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அங்கு இவருடைய ஆங்கில உச்சரிப்புகள் மற்றும் புரிதல் குறைவு காரணமாக அவருக்கு உரிய பணி கிடைப்பதில்லை. கடைசியாக அமெரிக்காவில் ஆங்கிலம் கற்பிக்கும் நிறுவனம் ஒன்றில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்கிறார். அதன்பிறகு நேர்காணல்களில் சிறப்பாக செயல்படுகிறார். குழு கூட்டங்களில் சிறப்பாக ஆங்கிலத்தில் விவாதங்கள் செய்கிறார். இதன்மூலம் சிறந்த இடத்திற்கு செல்கிறார். அவருக்கு ஒரு தமிழ் குடும்பத்தின் ஆதரவு கிடைக்கிறது. அந்த நிறுவனத்திற்கு முதன்மை செயல் அலுவலராக அமர்த்தப்படுகிறார்.
பிறகு இந்திய அரசாங்கத்தின் இணைய வழி பண பரிமாற்றம் செய்ய உதவும் மென்பொருள் தயாரிப்பு தொடர்பாகவும் அவர் பெரிய நிலைக்கு வருகிறார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் தன்னைப் போன்ற கிராமப்புற மாணவர்கள் ஆங்கில மொழி புலமை இல்லாததால் அறிவும் திறமையும் இருந்தும் சரியான வேலை கிடைப்பதில்லை என்பதால் ஆங்கில புலமையை மேம்படுத்தும் கல்வி நிறுவனங்களை மாநிலம் முழுதும் தொடங்குகிறார். இவர் படித்த கல்லூரியை பலவகையில் நினைவு கூறுகிறார். இப்படியாக இந்த கதை முடிகிறது.
இந்த கதை தமிழ்நாட்டில் தற்பொழுது இருக்கும் கல்விக் கொள்கை பற்றிய கதையாக நான் பார்க்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் நன்றாக படித்து இருந்தாலும், அறிவில் உச்சத்தில் இருந்தாலும் அவர்களுக்கு ஆங்கில மொழியில் சரியான புலமை இல்லாதது பெரும் குறை.
மத்திய அரசு பணிகளில் போட்டியிட தமிழக மாணவர்கள் தங்குவதற்கு காரணம் தேசிய மொழியான ஹிந்தி எழுத படிக்க தெரியாதது தான். அத்துடன், சிவில் சர்வீஸ் உள்ளிட்ட தேர்வு கேள்விகள் தமிழில் இல்லாமல் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருப்பதும்தான்.
தமிழ்நாடு அரசாங்கம் தனது கல்விக் கொள்கையை கௌரவம் பார்க்காமல் மறு பரிசீலனை செய்ய வேண்டும். அதற்கு மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
நன்றி.
Comments
Post a Comment