தீராப்பெருவெளி - நூல் அறிமுகம்.

தீராப்பெருவெளி 
(கவிதை தொகுப்பு)
த. பொன்னரசன்
மகிழினி பதிப்பகம் 
90951 67007
நூல் அறிமுகம்: இ.தங்கமணி.

உனக்கான காத்திருப்பில் வனாந்திரப் பெருமழையில் முழுவதும் நனைந்துவிட்டேன்

ஆங்கே தலைதுவட்ட தேவையோர் வண்ணத்துப்பூச்சி...


மிச்சமற்று எரித்துவிடு சகியே நம்
மீகாமம் சாகட்டும்

நடுநிசியில் நீரிறைக்கும் சப்தம் விழிகளில் தொங்கும் நிறைகுடங்களில் தளும்பும் மனம்...

உனக்கும் எனக்குமான ஆயத்தொலைவு - 
ஒரு கற்பனை நகர்தலுடன் சுழியமாகிறது...

என்னைத் திறப்பதற்கான கடவுச்சொல் 
என்னில் வேர்களாய் வியாபித்திருக்கும் நீயேயறிவாய் அந்த வேர்ச்சொல் உன் பெயர்ச்சொல் என்றறிய 
ஏனிந்த தாமதம்...

கையை விட்டு நழுவிய
 கண்ணாடிச் சில்லுகளிலிருந்து பிறப்பெடுக்கும் எனக்கான பிம்பத்தில்
ஓராயிரம் முறை
உன்னையே குவிக்கிறது என் விழி...

வாழ்வின் எந்த விசையும் என்னை ஈர்த்துவிடவில்லை...

எனினும் இவ்வாழ்வு தட்டுப்படுமென தடவுகிறதென் கைகள்..


திசை வேறு
 பயணம் ஒன்று 
மனதிற்கு
 மைல்கற்களில்லை...

பட்டால் தெரியும் என்பது பட்டுப்போன பின்னே தெரிகிறது...
மரணம் மனிதனைத் திருத்துகிறது...


இருகைகளின் இணைவினை
இவ்விருக்கை இன்னமும் ஈரப்படுத்தி வைத்திருக்கிறது...
என்றைக்காவது அப்பூங்கா 
செல்ல நேரிட்டால் 
ஒருநிமிடம் 
அவ்விருக்கையில் அமர்ந்துவிட்டுப்போ... 
அதன் ஆயுளாவது நீளும்....


வெளியில் உலவும் யாவரின் மூச்சையும் பருகாமல் உயிர்வளர்ப்பதெங்கனம்?
பதில் வாய்க்காத ஒற்றைக்கேள்விதான் 
அறம் எனப்படுவது யாதெனில்?...

 தாவர வாழ்வு தன்னறம் போதித்தது எனக்கு...


மலர்தலின்
ஆழம் கூடக்கூட அழுத்தத்தைக் கூட்டுகிறது கடல்...

ஆழம் கூடக்கூட அழுத்தத்தைத் தணிக்கிறது காதல்...

குத்திக்கிழியுறும்
யுத்தியறியும்
கத்திதனைப்
பொத்திப் பொலிவுற
வைத்தெந்தன்
புறமுதுகில் புகுத்திவிட்டாய் எனினும் 
எனக்குக் கண்கள் பிடரியிலே...

மந்தையில் சேராத என்னை
சந்தையில் சேர்த்ததில்
 என்ன விந்தையுள்ளது தந்தையே?...


ஆவி பறக்க காத்திருக்கிறேன் நான்
பனிக்கூழென பனியாவியாய் கவிந்திருக்கிறாய் நீ
தட்ப வெப்பம்
 வேறு வேறாகிலும் 
நமக்கான ஆவி 
ஒன்று போலத்தானே பரவிக் கூடுகிறது


காற்றின் கரைசலினூடே உன் உயிரை உமிழ்நீரோடு குழைத்து தூதனுப்பினாய்...

வண்ண ஒளிர்வினில் பறந்துவரும் சோப்புக்குமிழ்களாக மெல்லத்தரையிறங்கும்
 "காற்றிட்ட முட்டைகளை" நான் கைகளில் ஏந்துகையில் ..

உடைந்து சிதறிய குமிழ்களில்
 உன் ஈரம் பூசியிருந்த என்னுயிர்க்கு உரையெழுத உன்னைவிட்டால் யாருமில்லை...

Comments

Popular posts from this blog

Smoke and Ashes - நூல் அறிமுகம்.

உணவு சுற்றுலா - நூல் அறிமுகம்.

கற்பது உலகளவு - நூல் அறிமுகம்.