கிழவனும் கடலும் - நூல் அறிமுகம்.
வாசிப்பனுபவப் பகிரல்:-
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம்
நூல் தலைப்பு: கிழவனும் கடலும் நூலாசிரியர்: எர்னெஸ்ட் ஹெமிங்வே.
காலச்சுவடு பதிப்பகம்.
விலை ரூபாய் :95.
பக்கங்கள் 104.
நூல் அறிமுகம்: சிவம் முனுசாமி.
நேற்று நீதிமன்றத்தினுள் ஒரு கொடுமையான காத்திருப்பு நேரத்தில் இந்த புத்தகத்தை வாசிக்க எடுத்தேன். ஒரே மூச்சில் வாசித்தும் முடித்தேன்.
நூலாசிரியரின் நோபல் பரிசு பெற்ற நாவல் இது. சதாம் உசேன் தூக்கிலிடப்படும் முன் வாசிக்க கேட்ட புத்தகம் என்பது கூடுதல் தகவல்.
ஆசிரியர் அமெரிக்காவில் பிறந்தவர். செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் உலகப் போர்களில் பணியாற்றியவர். செய்தி நிருபராகவும் இருந்தவர். 1961இல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Google மென்பொருளை பயன்படுத்தி மொழிமாற்றம் செய்து பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்ளும் சமகால மொழிபெயர்ப்பு நூல்களைப் போல் இல்லாமல் சிரத்தை எடுத்து நாவலை அதே உயிர்ப்போடு மொழிபெயர்த்து இருக்கிறார் எம்.எஸ் என்னும் சிவசுப்பிரமணியன்.
நாவல் ஒரு கிழவனுக்கும் மீனுக்கும் இடையே நடைபெறும் உயிர் போராட்டத்தை விவரிக்கிறது.
இன்னொரு முகத்தில் பார்த்தால் இயற்கைக்கும் மனிதனுக்குமான போராட்டமாக தெரிகிறது.
சாந்தியாகோ என்கிற ஒரு கிழவனும் அவன் பிடித்து ஒரு மீனும் மட்டும்தான் நாவல் முழுக்க வியாபித்திருக்கிறது. துணைக் கதா பத்திரமாக ஒரு சிறுவன்.
85 வயது அடைந்த கிழவன் தனித்து வாழ்கிறான். ஒரு குடிசையும், ஒரு மீன்பிடி சிறு படகும்தான் அவனது வாழ்வாதாரம்.
தொடர்ந்து 85 நாட்களாக கடலுக்குச் சென்று வெறுங்கையுடன் கிழவன் திரும்புகிறான். அதனால் அவனுக்கு உதவியாக இருந்த ஒரே ஒரு சிறுவனையும் கிழவன் அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று கூறி வேறு படகுக்கு மாற்றி விடுகிறார்கள் சிறுவனின் பெற்றோர்.
கிழவனின் திறமை மீது சிறுவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை ஆனாலும் பெற்றோரின் பேச்சை மறுக்க முடியாமல் அரைமனதுடன் வேறு படகுக்கு போகிறான். இருந்தாலும் அந்த கிழவனை நேசிக்கும் ஒரே ஜீவனாக அந்த சிறுவன் இருக்கிறான்.
தள்ளாத வயதிலும் தளரா நம்பிக்கையோடு தனித்து படகோடு கிளம்பும் கிழவன் ஒரு நாளில் ஒரு மிகப்பெரிய மீனையும் பிடித்து விடுகிறான் ஆனால் அதை கரைக்கு கொண்டு வருவதற்குள் அசாத்திய போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டி வருகிறது. அத்தனையும் வெளிப்படுத்தி கரைக்கு வந்தானா? அவன் திறமையை ஊர் மெச்சியதா? என்பதே புத்தகத்தின் மீதிக் கதை.
இந்த நாவலை ஒரு விதத்தில் சூழலியல் நூல் என்று கூட சொல்லலாம். கடலும் கடல் சார்ந்த வாழ்வியலையும் அத்தனை தெளிவாக எடுத்துரைக்கிறது.
"மனிதனை வீழ்த்திவிட முடியும் ஆனால் தோற்கடிக்க முடியாது" என்ற கிழவனின் வார்த்தையும், அவரின் வாழ்வும் ஆயிரம் தன்னம்பிக்கை புத்தகங்களுக்கு சமம்.
வாசித்துப் பயன்பெறுங்கள்.
#சிமு 🖤
Comments
Post a Comment