கடைசி பெஞ்ச் - நூல் அறிமுகம்.
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் -34.
நாள்: 05.10.24
நூல்: கடைசி பெஞ்ச்
ஆசிரியர்: தமிழ் மகன் ப.இளங்கோ.
பக்கம் 129, விலை ரூ.200.
அறிமுகம்: கூத்தப்பாடி மா பழனி
கடைசிபெஞ்ச் என்ற வார்த்தையை படித்ததும் பள்ளி கல்லூரிகள்
நினைவுக்கு வருகிறது. கடைசி பெஞ்சு என்ற இந்த சிறுகதை நூலில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற எதிர்பார்ப்போடு படிக்க துவங்கினால் ஒவ்வொரு சிறுகதையிலும் ஓர் அறக்கருத்துக்கள் இடம்பெற்றிருக்கிறது.
கடைசி பெஞ்ச் என்ற இந்த நூலில் 12 சிறுகதைகள் இடம் பெற்றிருக்கிறது.
நூலாசிரியர் தமிழ்மகன் ப. இளங்கோ ஐயா அவர்கள் மிக அற்புதமாக சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.
இவரது ஒவ்வொரு சிறுகதை படைப்பும் படிப்பவர்கள் மனதை கொள்ளைக் கொள்ளும் விதமாக நீதி போதனைகளையும், நன்னெறி கருத்துக்களையும் எடுத்துச் சொல்லும் விதமாக கதைக்களம் அமைந்திருப்பது மிகச் சிறப்பான ஒன்றாகும்.
தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்ற சிறுகதையில் இன்றைய குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களை நினைத்துப் பார்க்க வைக்கிறது.
பழைய காலங்களில் நம்முடைய குடும்ப உறவுகள் சுற்றம்சூழ எவ்வளவு மகிழ்ச்சியோடு இருந்தார்கள் என்பதை நினைவுபடுத்துகிறது. இன்றைய தலைமுறையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பெற்றோர்களையும் உறவுகளையும் விட்டுவிட்டு தனித்தனியாக வாழ்ந்து வருவது வேதனையான ஒன்று. உறவுகளின் உன்னதத்தை உணர வைத்து உறவுகளோடு சேர்ந்து வாழவேண்டும் என்னும் சிந்தனையை இந்த சிறுகதையை படிப்பவர்கள் மனதில் உண்டாக்குகிறது.
ஏப்ரல் பூல் - சிறுகதையை படித்ததும் பள்ளி பருவத்தில் படிப்பவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்தும் விதமாக ஏப்ரல் பூல் சிறுகதை உள்ளது. இந்தச் சிறுகதையில் வளவன் நேர்மையாக இருந்த போதும் நண்பர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாணவிகளை
ஏமாற்றியதும் பிறகு அது ஆசிரியர் வரையும் சென்று நண்பர்களின் சூழ்ச்சியால் தண்டிக்கப்பட்டதும் கூடா நட்பு கேடாய் முடியும் என்ற
உண்மையை வளவனுக்கு உணர வைத்தது. இப்படி பலருடைய வாழ்க்கையிலும் பலவிதமான
அனுபவங்கள் இருப்பதைச் இச்சிறுகதை நினைவுபடுத்துகிறது.
பயிரை மேய்ந்த வேலி என்ற
கதையைப் படித்ததும் ஆத்திரமும் ஆவேசமும் ஒரு சேர பொங்கி எழுகிறது. ஆசிரியர் பணியின் மேன்மையையும், சிறப்பையும் செடுக்கின்ற விதமாக ஒரு சில ஆசிரியர்கள் செய்கின்ற தவறாசெயல் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்துக்கும் கெட்டப் பெயர் உண்டாக்கி விடுகிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது.
கடைசி பெஞ்சு
இந்த சிறுகதை தான் புத்தகத்தின் தலைப்பாக இடம் பெற்றிருக்கிறது கதையில் என்னதான் இருக்கிறது என்பதை படிக்க படிக்க ஆர்வம் மேலோங்குகிறது. பெரும்பாலும் கடைசி பெஞ்ச் மாணவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை இச்சமுகம்
ஒரு தவறான கண்ணோட்டத்துடன் கடைசி பெஞ்ச் மாணவர்களை பார்க்கிறது.
ஆனால் இங்கே கதையில் இடம் பெற்றிருக்கும் அதியன் என்ற கடைசி பெஞ்ச் மாணவன் இச்சமூகம் கடைசி பெஞ்ச் மாணவர்கள் மீது கொண்டிருக்கும் அவநம்பிக்கையை
தூள் தூளாக்கும் விதமாக அனைத்து
விதமான செயல்பாடுகளிலும்
சிறப்பாக செயல்படுவதன் மூலம் சமூகம் கடைசி பெஞ்ச் மாணவர்கள் மீது கொண்டிருக்கும் அவ நம்பிக்கையை துடைத்தெறிகிறார்.
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் சிறுகதையில் கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புறங்களுக்கு செல்லும்போது எவ்வளவு உற்சாகம் அடைகிறார்கள் என்பதையும் அவர்களின் ஆர்வத்துக்கும் மகிழ்ச்சிக்கும்
உற்றத் துணையாக ஆசிரியர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பதை
படிக்கும் போது நல்ல ஆசிரியர்கள் மாணவர்களின் வழிகாட்டிகளாக எப்போதும் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
பெற்றால்தான் பிள்ளையா சிறுகதையை படித்து முடிக்கும் போது இப்படியும் ஆசிரியர்கள் தன்னிடம்
படிக்கின்ற மாணவர்கள் மீது
ஆர்வமும் அக்கறையும் செலுத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது?
அதையும்தாண்டி தன்னுடைய ஆசிரியர் மீது மாணவர் வைத்திருக்கும் மதிப்பு, மரியாதை என்பது சொல்ல முடியாத அளவிற்கு மிக உன்னதமாக உயர்வானதாக கதையில் எடுத்தாளப்பட்டுள்ளது. மானுடம் செழிக்க மனித நேயம் அவசியம் என்பதை உணர வைத்த சிறுகதையாக பார்க்கிறேன்.
அது ஒரு நிலாக்காலம் கதையில் இடம்பெற்று இருக்கும் சம்பவங்கள் அனைத்தும் கிராமப்புறங்களில் இன்றளவும் நடைபெறுகின்ற நிகழ்வாக உள்ளது.
அதேபோன்று சவுக்கு சந்திரன் என்ற கதையில் குடிக்கார குடும்பங்கள் எவ்வாறு சீரழிகிறது என்பதை நம் மனக்கண் முன் கொண்டு வரும் கதையாக உள்ளது. சேர்ந்து வாழ்வதில் ஏற்பட்ட சங்கடங்களை பிரிந்து வாழ்வதில் சரி செய்திருக்கிறது.
வாழ்க்கையின் அமைதிக்கும்
உயர்வுக்கும் வழிகாட்டி இருக்கிறது. பிரிவும் ஒரு விதத்தில் நன்மையே என்பதை குடிகார கணவனால் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கை நிகழ்வு படமாகவும் பாடமாகவும் கதையில் இடம் பெற்றிருக்கிறது.
கருப்பாய்யம்மா கதையில் நிறம், வர்ணம், சாதி, வயது எதுவும் பொருட்டல்ல என்பதை சொல்லும் கதையாக கருப்பாய்யம்மா இருக்கிறது.
யந்திரம் மந்திரம் தந்திரம் கதையை படிக்க்கும்போது மூடநம்பிக்கை வேரூன்றிக் கிடக்கும் சமூகம் எதையெல்லாம் நம்புகிறது என்பதை கதையின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
அந்த மூடநம்பிக்கையே சிலரின் வாழ்க்கைக்கு வரமாகவும் சிலருக்கு வாழ்க்கையாகவும் இருப்பதையும் கதையில் உணர முடிகிறது.
அன்பெனும் ஆலமரம் கதையில்
ஆசிரியருக்கும் மாணவருக்கும் உள்ள உறவு வகுப்பறையை தாண்டி குடும்ப உறவுகளாக எவ்வாறு இருக்கிறது என்பதை எடுத்து சொல்லும் கதையாக இருக்கிறது. அன்பை விதைத்தால் அது ஆலமரமாக வளர்ந்து பெருகும் என்பதை இக்கதை புரிய வைக்கிறது.
மரண வேதனை கதையை படிக்க படிக்க துப்பறியும் நாவலை படிக்கின்ற உணர்வு தான் எனக்கு ஏற்பட்டது.
இன்பச் சுற்றுலா-கல்விச் சுற்றுலாவாக சென்ற பள்ளி மாணவர்களில் ஒரு மாணவன் வழித் தவறி சென்றதால் சந்திக்கும் சிக்கல்களை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், குடும்ப உறவுகள் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை திரைப்படக் காட்சிகள் போல நகர்த்தி செல்வது இந்த கதையின் சிறப்பு அம்சமாகும். இந்தக் கதையில் சில இடங்களில் திகிலூட்டும்
வகையிலான நிகழ்வுகள் படிக்கின்ற போது வழித்தவறி சென்ற மாணவருக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்ற எண்ணம் படிப்பவர்கள் மனதிலும் உண்டாக்க செய்வது இந்தக் கதையின் சிறப்பு அம்சமாக பார்க்கிறேன்.
கடைசி பெஞ்ச் என்ற சிறுகதை புத்தகம் என்னுடைய மனதில் முதல் பெஞ்ச் என்ற வரிசைக்கான இடத்தை பெற்றிருக்கிறது என்று சொன்னால் ஒவ்வொரு கதையிலும் இடம்பெற்றிருக்கும் மிக அற்புதமான நீதி கருத்துக்கள் என்னை ஈர்த்துள்ளது.
அதேபோன்று எழுத்து நடையும் கருத்து செறிவும் மிக அற்புதமாக, அழமாக, கோர்வையாக கதையை நகர்த்தி செல்வது பாராட்டுக்குரியது.
இன்னும் இது போன்ற படைப்புகள் தமிழ் சமூகத்திற்கு கிடைக்க வேண்டும்.
வாசகர்கள் மத்தியில் இந்நூல் வரவேற்கப்பட வேண்டும்.
தமிழ் மகன் ப. இளங்கோ ஐயா
தன்னுடைய பணி ஓய்வு காலத்திற்குப் பிறகு எழுத்துப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பல படைப்புகளை வெளிக்கொண்டு வருகிறார்.
இவரது பேச்சாற்றல், எழுத்தாற்றல், படைப்பாற்றல் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
சிறப்பு ஐயா
ReplyDelete'கடைசி பெஞ்ச்' என்ற சிறுகதை நூல் அறிமுகத்தை கூத்தப்பாடி பழனி ஆசிரியர் அழகாக அறிமுகப்படுத்தி நூல் ஆசிரியரை பெருமைப்படுத்தி உள்ளார். படிப்பவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டுவதாக இந்த நூல் அறிமுகம் இருக்கிறது.
ReplyDelete