விடுபட்ட கவிதைகள் - நூல் அறிமுகம்.
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம்.
நூல்; விடுபட்ட கவிதைகள்
நூலாசிரியர்: கவிஞர் கோகுல் காளியப்பன்.
நூல் அறிமுகம்: கூத்தப்பாடி மா. பழனி.
விடுப்பட்ட கவிதைகள் என்ற தலைப்பை படித்த உடனே இவர் ஏற்கனவே கவிதை நூல்களை எழுதி வெளியிட்டு இருக்கின்றவர் என்ற புரிதலை புத்தகத்தின் தலைப்பு நமக்கு உணர்த்துகிறது.
ஏற்கனவே இவர் எழுதி வெளியிட்ட இரண்டு படைப்புகளின் புத்தகங்களில் இடம்பெறாமல் போன தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான கவிதைகளை "விடுப்பட்ட கவிதைகள்"-
என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளிவருவது மிகப் பொருத்தமானதாகும்.
கவிஞர் கோகுல் காளியப்பன் அவர்களை பொறுத்த வரை எந்த ஒரு பணியையும் மிகவும் நேர்த்தியாகவும் சரியாகவும் செய்து முடிக்கும் அற்புதமான ஆற்றல் வாய்ந்த கவிஞர். தருமபுரி மாவட்டத் தமிழ்க் கவிஞர் மன்றத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் தவறாமல் கலந்து கொண்டு செயலாற்றி வருபவர். அத்தோடு மட்டுமல்லாமல் மன்றத்தின் அனைத்து விழாக்களுக்கான அழைப்பிதழ், நூல் திறனாய்வுக்கான அழைப்பிதழ் என அழகாக வடிவமைத்துக் கொடுத்துவருபவர்.
கவிஞர் கோகுல் காளியப்பனின் விடுபட்ட கவிதைகள் எனும் நூலில் "தாய்மை" எனும் கவிதையில்,
"எட்டுத்திக்கும்
எம்மவன் ஜெயிப்பானு "
- கம்பீரமாக சொல்லும் தாய்மையின் சிறப்பை முதலில் வைத்து அரியனை அமர்த்தி அழகு பார்த்த அன்னைக்கு
மணி மகுடம் சூட்டியுள்ளார்.
சங்கமம் கொண்டது மனம்
இந்த சாளர இடைவெளியோடு
- என்னும் வரிகளில் கவிஞர் தனது இன்பத் துன்பங்களை இயற்கையோடு
பகிர்ந்து கொண்டு ஆறுதல் நிலையை அடைய சாளர இடைவெளி சக தோழனாக விளங்குவதை விளக்கி படிக்கும் நமக்கும் புத்துணர்வை ஊட்டுகிறார். நாமும் சாளர இடைவெளியோடு சங்கமிப்போம் என்ற உணர்வு மேலோங்குகிறது.
ரோட்டினில் செல்கிறது பொதிகள் தந்த பொற்புதையல்...
என்னும் வரிகள் மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை உணராத மக்களின் அறியாமையை சொற்சுவையில் அடக்கி காட்சிப்படுத்தி காட்டியுள்ளார்.
உணவின்றி வாழும் என் தாய்க்கு உரமாக செல்வது என் பெரும் பாக்கியம்!
என்னும் வரிகளில் மரணிக்கும் தருவாயிலும் மட்கி தாயின் வறட்சிக்கு வளம் சேர்க்கும் இலையின் உன்னத குணத்தை "உவமையாக்கி " இயற்கையை போற்றும் கவிஞரின் கற்பனை "காவியத்தை" படைத்திருக்கிறது!
நம் நேரத்தை சிந்தனையை திருடும் கைப்பேசியிடம் கண்களை ஒப்படைக்காதீர்கள்! என்பதை
ஒருபோதும் ஒப்படைக்காதே! கைபேசி கயவனிடம் மட்டும் கண்களை
என்ற வரிகளில் கைபேசிக்கு அடிமையாகுபவர்களிடம் வேண்டிக் கேட்டுள்ளார் புத்தகத்தை கையில் எடுக்க தூண்டியுள்ளார் என்பது பாராட்டுக்குரிய செயலாகவே பார்க்கப்படுகிறது.
மண்ணில் பிறந்த மானுடப்பண்போடு நாமிருந்தால் (ஆண்கள்) பெண்ணுக்கு எதற்கு பாதுகாப்பு!
-என்னும் வரிகளில் ஆண்கள் மானுட பண்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறி சில ஆண்களின் மிருகக் குணத்தை "சிலேடையாக " சாடியுள்ளார்.
தாலாட்டு பாடியவனுக்கு
தாய்நாட்டின் மேல் பற்றாம்
பாரதம் பாடினான்!
-என்னும் வரிகளில் மொழிப்பற்றும், நாட்டுப்பற்றும் கவிஞர் மனதில் மேலோங்கி இருப்பதையும் பாரதியாரின் மேல் உள்ள பற்றையும் ஒருசேர காண முடிகிறது.
" கவிக்கே கவி பாடியவன்" - என்னும் புகழுக்கு உரியவராகிறார் கவிஞர் கோகுல் காளியப்பன் அவர்கள்.
இலக்கணம் சொல்லும்
இலக்கியம் கோடி!
இனிவரும் உலகம் - எம்
இன்பத்தமிழை நாடி!
என்னும் வரிகளில் இவ்வையகத்தின் எதிர்காலமானது இன்பத் தமிழால் இன்புறும் என்பதை நெஞ்சை நிமிர்த்தி உரக்கச் சொல்லி மகிழ்கிறார், நம்மையும் மகிழ்விக்கிறார் கவிஞர்!
படைப்பாளியின் எண்ணம் படிப்பவனையும் ஆட்கொள்ளும் போது அதுவே சிறந்த படைப்பாகிறது. அதுபோல இக்கவிதை நூலில் உள்ள ஒவ்வொரு கவிதையும் படிப்பவனை படைப்பாளரிடம் கைகோர்க்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை!
இப்படி விடுபட்ட கவிதைகள் நூலில் அற்புதமான சமூக கருத்துக்களையும், சமூகச் சிந்தனைகளையும் முன்வைத்து கவிஞர் கோகுல் காளியப்பன் அவர்கள் படைத்திருக்கும் அனைத்து கவிதைகளும் அற்புதமாக உள்ளது.
கவிஞர் இது போன்று கவிதை நூல்களை தொடர்ந்து எழுத வேண்டும் இளைய தலைமுறையினர்
எழுச்சிக்கொள்ளும் விதமாக இன்னும் பல படைப்புகள் வெளிவர வேண்டுமாய்
கேட்டுக்கொள்கிறேன்.
கவிஞருக்கு என்னுடைய பாராட்டுகள் வாழ்த்துக்கள்.
தொடரட்டும் உங்கள் எழுத்து பணி!
நூல்வாழ்த்துகளுடன்....
கூத்தப்பாடி மா. பழனி, தருமபுரி
9626587770
Comments
Post a Comment