மிளகாய்ப்பழச் சாமியாரும் வாழைப்பழச் சாமியாரும் - நூல் அறிமுகம்.
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம்.
நூல்: மிளகாய்ப்பழச் சாமியாரும் வாழைப்பழச் சாமியாரும்.
நூல் அறிமுகம்: நூலகர் சி சரவணன்.
மகாகவி பாரதியார் இவ்வளவு அருமையாக நகைச்சுவைக் கதை எழுதுவார் என்று இந்தக் கதையைப் படித்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது.
பழனியப்பா பிரதர்ஸ் மாணவர்களுக்காக வெளியிட்ட பாரதியார் கதைகளின் சிறிய தொகுப்புதான் இந்த நூல். இதில் பல கதைகள் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தக் கதை - பேய்க் கூட்டம்.
பாரதியார் கதையை இவ்வாறு தொடங்குகிறார்:
இரவு 12 மணிக்கு நான் எந்த காரணத்தினாலோ தூக்கம் வராமல் பாயிலே படுத்துக் கொண்டு இருந்தேன். ‘தூக்கம் வராது போனால் அருவியை நினைத்துக் கொண்டு, அது சலசலவென்று விழும் ஓசையிலே மானசீகமாக செவியை செலுத்திக் கொண்டிருந்தால் சிறிது நேரத்திற்குள் தூக்கம் வந்துவிடும்’ என்று நான் குழந்தையாய் இருந்தபோது ஒரு புஸ்த்தகத்தில் படித்திருந்தேன். அந்தப்படி அருவியை நினைத்தால், பாதி இரவில் அந்த ஞாபகத்தில் இருந்து குளிர் அதிகப்படுகிறதே ஒழிய, தூக்கம் வருகிற பாட்டைக் காணோம்.
நான்கு சாளரங்களையும் சாத்தினேன்; பிறகு காற்றோட்டம் இல்லாத அறையில் படுத்து தூங்கக் கூடாது என்று ஜன்னலைத் திறந்தேன். வாசலில் காந்த விளக்கு (மின்விளக்கு) போட்டு இருக்கிறது. அதைச் சுற்றி விளையாடும் பூச்சிக் கூட்டங்கள் என் அறைக்குள்ளே பிரவேசித்து விடுகின்றன. அறைக்குள் விளக்கை அவித்து போடுவோமா? என்று யோசித்தாலோ தூக்கமும் வராமல், இருளில் கிடப்பது மிகவும் சிரமம்.
என் மனம் பல பல விஷயங்களை யோசித்துக் கொண்டிருந்தது.
கண்ணை மூடினால் எனக்கு ருஷ்யாவின் நிலைமை ஞாபகம் வந்து கொண்டிருந்தது. அதற்குக் காரணம் என்ன தெரியுமா? ஒரு மனுஷன் காலையில் கண்ணை விழிக்கும்போது 'அவன் முன் ஒரு குரங்கை கொண்டு நிறுத்தினால் அன்று முழுவதும் அவன் அந்த குரங்கை மறப்பது மிகவும் சிரமம்'. அதுபோலவே, இன்று காலையில் நான் கண்ணை விழிக்கும் முன்பே என் பத்தினி ‘சுதேசிமித்ரன்’ பத்திரிக்கையை தலையணை அருகே கொண்டு போட்டிருந்தாள். திறந்து பார்த்தேன். முதலாவது என் கண்ணில் ‘ருஷ்யாவில் உள்நாட்டுக் கழகம். சச்சரவு அதிகரிக்கிறது.’ என்ற பகுதி தென்பட்டது. இது என்னடா விசேஷம் என்று வாசித்துப் பார்த்தேன்.
இரவில் தூக்கம் இல்லாது படுத்துக் கொண்டிருக்கும்போது காலையில் படித்த விஷயங்கள் எல்லாம் மற்றொரு முறை மன வீதியிலே உலாவி வரலாயான. மாஸ்கோ நகரத்தில் கலகம் - ஸ்திரீகளும் குழந்தைகளும் உட்பட 200 பேர் கொலையுண்டனர். துப்பாக்கி பிரயோகங்கள் மிதவாதிகளும் அமிதவாதிகளும் பரஸ்பரம் செய்து கொண்டனர். செல்வர்களிடமிருந்து பொருளை எல்லாம் பிடுங்கி ஏழை ஜனங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொடுக்க ஒரு கமிட்டி! முதலிய பல செய்திகள்.
'ருஷ்யா விஷயம், எக்கேடு கெட்டால் எனக்கென்ன?' என்று தூங்க முயற்சி செய்தால் மனம் இணங்கவில்லை. தூக்கம் வரப்போகிற அல்லது வராமல் இருக்கிற பாதி இரவு நேரத்தில் 'மனம், புத்தி சொன்னபடி கேட்கவே கேட்காது!' இப்போதும் மனத்தை கட்டியாள்வது சிரமம். படுக்கையிலேயே படுத்துக் கொண்டு மனத்தைக் கட்ட விசுவாமித்திரராலே கூட முடியாது.
பிறகு, எனக்கு ருஷ்ய குடியரசின் தலைவராகிய லெனின் என்பவரின் ஞாபகம் வந்தது.
'உரலுக்கு ஒரு பக்கம் இடி. மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி. லெனினுக்கு லட்சம் பக்கத்திலே!'
‘தள்ளடா! லெனினும் ஆயிற்று; வெங்காயமும் ஆயிற்று. தூங்குவோம்’ என்று நினைத்தால் கொசு வந்து காதில் 'ஙொய்' என்று ரீங்காரம் பண்ணுகிறது.
சரி, புத்தகம் எடுத்துப் படிக்கலாம் என்று மேஜை அருகில் அமர்ந்தேன். கந்தபுராணம் படிக்கத் தொடங்கினேன். நூற்று முப்பத்தி ஏழு பேய்கள் சேர்ந்து ஏக காலத்தில் கதவை இடிப்பது போல் வாயிற் கதவில் பட படா! பட படா! என்று சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்து சாரை வெளியே “யார் கதவைத் தட்டுவது?” என்று கேட்டேன்.
“நான்தான், வேணு முதலி! என்னுடன் கடோர்கஜனும் இன்னும் மூன்று சினேகதர்களும்” என்றது.
“வேணு முதலி, இந்த நேரத்தில் பேய்கள் எல்லாம் சந்தியா வந்தனம் பண்ணப் போகிற சமயத்தில் வந்து கதவைத் தட்டுகிறாயே? உனக்கு என்ன பைத்தியமா?” என்று கேட்டு, கதவைத் திறந்தேன்.
பளிச்சென்று ஒருவன் என் வாய்க்குள்ளே துணியைச் செலுத்தினான். ஒருவன் கையைக் கட்டினான். என் கண்களில் எவனோ துணியை வரிந்து கட்டினான். மற்றொருவன் காலை கட்டினான். கண்மூடித் திறக்கும் முன்னே, என்னை குண்டுக் கட்டாக் கட்டி குதிரை வண்டியில் போட்டார்கள். குதிரை வண்டி வாயு வேகத்தில் பறந்தது.
"ஐயோ, என்ன செய்வோம்! வேணு முதலியின் குரலைப் போல் தானே இருந்தது! அவன் நமக்கு தீங்கு செய்ய மாட்டானே! ஒன்னும் தெரியவில்லையே! கண்களை அடைத்து விட்டார்களே! வாய் பேச முடியவில்லையே! நான் அசைய முடியாமல் நெஞ்சில் அழுத்துகிறார்களே! என்ன செய்வேன்! நம்மை எங்கே கொண்டு போகிறார்களோ!
தெய்வமே! நம்மை இவர்கள் கொன்று போடுவார்களோ?
போனால் போகிறது போடா… செத்தால் செத்துப் போவோம்.
எங்கேயும் கொண்டு போய் அடைத்து வைப்பார்களோ என்னவோ?
ஐயோ அடைத்து வைத்தால் என்ன செய்வோம்?
அட போடா… என்ன செய்வது? என்ன, சும்மா இருப்போம். நல்லது தானே! சோறு அவன் போடுவான். நமது பாடு மஜா. பாட்டு பாடிக்கொண்டு யாதொரு வேலையும் செய்யாமல் ஷோக்காக இருக்கலாம்!
சித்திரவதை பண்ணுவார்களோ என்னவோ?
ஏனடா… நம்மை அப்படி செய்வார்கள்? நம்மை யாரும் ஒன்றும் செய்ய மாட்டார்கள். நாம் எவனுக்காவது தீங்கு நினைத்தாலன்றோ நமக்கு ஒருவன் தீங்கு செய்வான்! நாம் சும்மா இருக்கும்போது நமக்கு ஏன் பிறர் தீங்கு செய்வார்கள்?
சரி, கல்யாணத்துக்காவது இப்படி அழைத்துக் கொண்டு போவார்களா?" என்று பலவிதமாக எண்ணினேன். அப்பொழுது திடீரென்று வண்டி நின்றது…..
…..இவரை தூக்கிக் கொண்டு போன பேய்கள் என்ன செய்தன என்பதை சுவாரசியமாக விளக்குகிறார் பாரதியார்.
கதை அருமை.
நீங்களும் படித்துப் பாருங்களேன்!
நன்றி.
Comments
Post a Comment