அந்த மூன்று நாட்கள் - நூல் அறிமுகம்.
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம்.
நூல்: அந்த மூன்று நாட்கள்.
நூலாசிரியர்: தகடூர் மணிவண்ணன்.
வெளியீடு: திருவள்ளுவர் பொத்தக இல்லம்.
நூல் அறிமுகம்: கூத்தப்பாடி மா.பழனி.
" அந்த மூன்று நாட்கள்" என்ற இந்த புதினம் படித்து முடித்ததும் தகடூர் அ. மணிவண்ணன் ஐயாவிடம் இப்படியொரு எழுத்தாற்றல், கற்பனையாற்றல் இத்தனை ஆண்டுகளாக எங்கே இருந்தது என்ற கேள்வி என்னுள் எழுந்தது?
இவர் ஏற்கனவே எழுதியிருக்கும் "தோகைமலை தென்றல்" - என்ற இவரது நூலைப் படித்திருக்கின்றேன். அதைத் தொடர்ந்து "ஆபத்துக்கு பாவமில்லை" என்ற பெயரில் சிறுகதை நூல் ஒன்றையும் எழுதி இருக்கிறார்.
இந்த இரண்டு நூல்களும் சமீபத்தில் எழுதப்பட்ட நூல்கள். இந்த நூல்களை வாசகர்கள் படித்து முடிக்கும் முன்பாகவே 400 பக்கங்களுக்கு மேல் ஒரு புதினத்தை "அந்த மூன்று நாட்கள்" என்ற தலைப்பில் படைத்திருப்பதன் மூலம் இவரது எழுத்தாற்றல் என்னை வியக்க செய்கிறது.
புதினத்தை படிக்க தொடங்கியதும் "அந்த மூன்று நாட்கள்" என்ற பெயர் இந்த புதினத்திற்கு ஏன் வைத்திருக்கிறார்? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. புதினத்தை படித்து முடித்த பிறகுதான் தெரிந்தது மிகப் பொருத்தமான தலைப்பாக புதினத்திற்கு "அந்த மூன்று நாட்கள்" என்று பெயர் வைத்திருக்கிறார் என்பது புரிந்தது. காரணம் கதையின் நாயகன் லெமூரியனுக்கும் நாயகி அகிலாவுக்கும் மூன்று நாட்களுக்குள் ஏற்பட்ட அந்த அற்புதமான காதல் வர்ணனைகள், இவர்களுக்கு பிறந்த அழகான மூன்று ஆண் குழந்தைகள், ராணுவ பணியில் நாட்டிற்காக தனது இரு மகன்கள் மற்றும் கணவர் என மூன்று உயிர்கள் தியாகம் செய்தது,
அகிலாவின் வாழ்க்கையில் மூன்று நாட்கள் மருத்துவமனையில் உயிருக்காக போராடிய நிகழ்வு, திலகவதி என்ற இளம் விதவையை
தன் மகன் மகிழனுக்கு திருமணம்
செய்து வைக்க மேற்கொண்டு முயற்சிகளின் நாட்கள் மூன்று என
கதையின் நாயகி அகிலாவின் வாழ்க்கையில் அனைத்தும் மூன்று மூன்று நாட்களாக இருப்பதால் இந்த புதினத்திற்கு "அந்த மூன்று நாட்கள்" என்று தலைப்பிட்டிருக்கிறார் என்பதை படித்து முடித்ததும் தெரிந்து கொண்டேன்.
இந்தப் புதினத்தை மிக அற்புதமான எழுத்து நடையில் தகடூர் அ. மணிவண்ணன் அவர்கள் நகர்த்தி செல்கிறார். எங்கேயும் சோர்வும் அழுப்பும் தட்டிவிடாத வகையில் விறுவிறுப்பும், வேகமும் கூடிக் கொண்டே செல்வது புதினத்தின் சிறப்பு
என்பேன். ராணுவத்தில் பணி புரிபவர்கள் எவ்வளவு கடமை உணர்வோடு நாட்டுக்காக பணிபுரிகிறார்கள் என்பதை மிக நுட்பமாக பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.
ராணுவத்தின் அனைத்து நிலை பதவிகள், விருதுகள், ராணுவ தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஒரு ராணுவத்தில் பணி புரிந்தவர்கள் எப்படி அதை அணுகுவார்களோ அதே பாணியில்
இன்னும் சொல்லப்போனால் அதைவிட கூடுதலாகவே ராணுவம் பற்றிய தகவல்களை புதினத்தில் குறிப்பிட்டிருப்பது என்னை வியக்க வைக்கிறது.
இந்தப் புதினத்தில் இடம்பெற்றிருக்கும் பெயர்கள் அனைத்தும் தமிழ் பெயர்களாக சூட்டியிருப்பதன் மூலம் இவரது தமிழ் ஆர்வத்தை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
இயற்கையை வர்ணிப்பதிலும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் மலர்கள், மலைகள், காடுகள், ஆறுகள், விலங்குகள், பறவைகள், கிராமிய அழகு என அனைத்தையும் மிக அற்புதமான வர்ணனைகளோடு வர்ணித்திருப்பது படிப்பவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கிறது.
ராணுவம் மற்றும் மருத்துவம் தொடர்பான தகவல்கள் பற்றிய சொல்லாடல்கள் அனைத்தும் சரியாக கையாண்டு இருப்பதன் மூலம் இவரது தேடல் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
பிறந்து வளர்ந்து வாழ்ந்த பகுதி சார்ந்த மக்களின் வாழ்வியல் தன்மைகளையும், இயற்கையையும் ஒருங்கிணைத்து இந்த புதினத்தில் பிறந்த ஊருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
ராணுவத்தில் அதிகமாக பணிபுரியும் கிராமமான சிப்பாயூர் பற்றி சிலாகித்துக் கூறியிருப்பது பாராட்டுக்குரியது.
கைக்குழந்தையுடன் இருக்கும்
விதவைக்கு வாழ்வளிக்க
தனது மகனிடம் மன்றாடி தன் வாழ்நாளில் இறுதி ஆசையாக வெளிப்படுத்தி இருப்பது விதவை திருமணத்தை ஒரு சீர்திருத்த நிகழ்வாக காட்டியிருப்பது அற்புதம். இந்த புதினத்தில் காதல், இயற்கை,
வீரம், தியாகம், நாட்டுப்பற்று, மொழிப்பற்று, வாழ்வியல் முறைகள் என அனைத்து விதமான அம்சங்களையும் உள்ளடக்கி "அந்த மூன்று நாட்கள்" என்ற புதினம் படைத்திருப்பது பாராட்டுக்குரியது.
ஏற்கனவே இவரது இரண்டு நூல்களுக்கும் வாசகர்கள் கொடுத்த வரவேற்பு போலவே "அந்த மூன்று நாட்கள்" என்ற இந்த புதினத்திற்கும் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன்.
தகடூர் அ. மணிவண்ணன்
அவர்களின் எழுத்துப்பணி தொடரவேண்டுமென வாழ்த்துகின்றேன். பாராட்டுக்கள்.
மிகச் சிறந்த நூல் மதிப்புரை. உள்ளூர் படைப்பாளியின் புத்தகத்தை பகிர்ந்தமைக்கு நன்றியும், அன்பும் 💕
ReplyDelete