ஹைக்கூ வாசிக்கிறார் புத்தர் - நூல் அறிமுகம்.
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் -32
நாள்: 2 .10. 2024.
நூல்: ஹைக்கூ வாசிக்கிறார் புத்தர்
நூலாசிரியர் : செ. தமிழ் ராஜ்
நூல் அறிமுகம் : கா. பாண்டிச்செல்வி
( செம்மலர் மாத இதழ்)
மானுட சிந்தனைப் பதிப்பகம், வண்டியூர், மதுரை -20
விலை: ரூ100.
மானுட சிந்தனைப் பதிப்பகம் வெளியிட்ட கவிஞர் தமிழ் ராஜ் அவர்களின் ஹைக்கூ வாசிக்கிறார் புத்தர் கவிதை நூல் வித்தியாசமான வாசிக்கத் துண்டும் தலைப்பு. பொதுவாகவே ஹைக்கூ கவிஞர்கள், இயற்கை சார்ந்த கவிதைகளைத்தான் அதிகம் படைக்கிறார்கள். இதற்கு நமது கவிஞர் தமிழ் ராஜா அவர்களும் விதிவிலக்கல்ல. பெரும்பாலான கவிதைகள் இயற்கையைப் பாடுகின்றன.
நதியினில் தள்ளாடும் படகு
சிறகுகளால் துடுப்பிசைக்கும் பறவைகள்
தலைகீழாய் நேரில் ஆடுகிறது பனை காட்சிப் பிழை
படகோட்டியிடம் பாடல் ஒன்றை இசைத்து மீன்களைக் கைப்பற்றும் பறவைகள்
அழகியழைப் பேசும் இக்கவிதைகள். வாசிக்கும் போதே அந்தக் காட்சியில் ஒன்றிப் போகும் மனசு. இதுவே பாடு பொருளுக்கும் கவிஞருக்கும் கிடைத்த வெற்றி.
மூன்று வரிகளே நியதி என்பதால்தானோ ஹைக்கூ கவிஞர்கள் பறவை, மரம், மீன், கடல், ஆகாயமென எழுதுகிறார்கள். அதற்கு ஒரு சிந்தனை, லயிப்பு, ரசிப்பு வேண்டும். அது என் நூலாசிரியரிடம் நிறைவே கிடக்கு.
சொல்லப்படும் மூன்று வரிகளில் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் சிதையாமல் கவி படைக்க மெனக்கெட்டுள்ளார். அதிலிருந்து மானுட சமூக அவலங்களையும் பாடுகிறார் நூலாசிரியர்.
வாடகை வீட்டில்
வசித்துச் சாகின்ற ஏழைக்கு
கொடுங்கனவாய் குருவிக்கூடு
வனமிழந்த கோபம்
யானையிடம் மிதிப்படுகிறது
மானுட வாழ்வு
அரசு அலுவலகங்களில்
கொடி காசுகளில்
தலைக் கவிழ்கிறார் காந்தி
இவையெல்லாம் நாம் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் அவஸ்தைகள் தான். நாம் புலம்பி விட்டு புலம்பெயர்வோம். ஆனால் ஒரு படைப்பு மனம் சும்மா இருக்காது. தமிழ் ராஜ் போன்ற படைப்பாளிகள் சிக்குண்ட வாழ்வில் இருந்த போதிலும் அதையும் படைப்பிலக்கியத்தில் கொண்டு வருவது அவரின் ஆளுமை.
இவரது படைப்புலகம் இயற்கையைத் தாண்டி மானுட வாழ்வியலின் புறம், அகம் சமூக சீர்கேடுகள் மீதான கோவதாபங்களை மூன்று வரிகளில் பார்க்க முடிகின்றது. உயிரற்றவைக்கும் உயிர் கொடுக்கும் இவரது எழுத்துக்கள் வாசிப்பவரையும் உணர்ச்சி வசப்படச் செய்கிறது.
இறந்த காலத்தை பேசுகிறார்...
மூதாட்டி உணர்ச்சியற்றுக் கேட்கிறது
ஊன்றுகோல்
இதுபோன்ற தெறிப்பு மிக்க கவிதைகள் இருந்தாலும் சில கவிதைகள் விடுகதையாக, உரையாடலாக உலா வருகின்றன. வடிவமைப்பில் இன்னும் சிரத்தை எடுத்திருக்கலாம். இருபதாண்டுகள் கழித்து மீண்டும் ஹைக்கூ பெருங்கடலில் மூழ்கியுள்ள கவிஞர் தமிழ் ராஜா அவர்கள் எத்தனை முத்துக்கள் எடுக்கின்றார், புத்தர் எந்தக் கவிதையை வாசிக்கிறார் என்று புத்தகம் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Comments
Post a Comment