என் முதல் ஆசிரியர் - நூல் அறிமுகம்
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் -5
நூல்: என் முதல் ஆசிரியர்
நூலாசிரியர்: சிங்கிஸ் ஐத்மாத்தவ்
நூல் அறிமுகம்: ஆதி முதல்வன்
நூல்: என் முதல் ஆசிரியர்
நூலாசிரியர்: சிங்கிஸ் ஐத்மாத்தவ்
நூல் அறிமுகம்: ஆதி முதல்வன்
மத்திய ஆசிய சோவியத் குடியரசைச் சார்ந்த கிர்கீஸிய மக்கள் ருஷ்ய புரட்சிக்கு முன் எழுத்தறிவு பெற எவ்வாறு போராட வேண்டி இருந்தது என்பதை ஒரு மாணவியின் நிலையில் இருந்து கூறுவது போல இப்புனைவை சிங்கிஸ் ஐத்மாதவ் நாவலாக எழுதியிருக்கிறார்.
கதை மாந்தனாக வரும் தூய்ஷன் ஒரு ஓய்வுபெற்ற ராணுவ வீரர். அவர் இளம் கம்சமால் உறுப்பினரும் கூட.
தூய்ஷன் பெரிய அளவில் கல்வி அறிவைப் பெறாதவர்தான். ஆனாலும் ராணுவத்தில் தான் பெற்ற சொற்பக் கல்வி அறிவை குர்க்குரீ கிராம குழந்தைகளுக்கு வழங்க பேராவலோடு முயல்கிறார். தூய்ஷனுக்கு அது எளிதானதாக வாய்க்கவில்லை.
பல சவால்களையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு போராட வேண்டியிருந்தது.
அடிமைத்தனத்தை பெருமையாகக் கருதி பழமையின் கோரப்பிடியில் ஊறித் திளைத்த இம் மானுடம் அவ்வளவு எளிதாக அதிலிருந்து விடுபட்டு விடுவதில்லை. கல்வி அறிவு என்பது எங்களுக்கு தேவையற்ற ஒன்று எனக் கூறி தூய்ஷனுக்கு அம் மக்களிடமிருந்தே எதிர்ப்பு கிளம்புகிறது.
எஃகு போன்ற மன உறுதியுடன் அத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு லெனின் கூறியபடி எளிமையான மக்களை வலிமையாக்க வேண்டும் என்பது மட்டுமே அவருக்குக் குறிக்கோளாக இருந்தது.
அவரிடம் கல்வி பயில வரும் சிறுமி அல்டினாய் கதை நாயகி ஆவர்.
அல்டினாய் தன் அத்தையின் பராமரிப்பில் வளரும் சிறுமி. அவள் பள்ளிக்குச் செல்வது அத்தைக்கு பிடிப்பதில்லை. வீட்டு வேலைகளைச் செய்வது, வீட்டு விலங்குகளைப் பராமரிப்பது என அவளிடம் உழைப்பு சுரண்டலை மட்டுமே கோருகிறார் அத்தை. சுயநலமிக்க தன் அத்தையின் எதிர்ப்பையும் மீறி படிக்கச் செல்லும் அல்டினாய்க்கு அடியும் உதையும் அவமானங்களும் வாடிக்கையான நிகழ்வுகளில் ஒன்றாகிப் போனது.
அதே சமயம் வேசித்தனம் செய்யவே அவன் பெண் பிள்ளைகளைக் கூட்டி பள்ளிக்கூடம் நடத்துவதாக நாடகம் ஆடுகிறான் என்று தூய்ஷன் மீதும் அவதூறு பரப்புகிறார்.
ஒரு கட்டத்தில் அல்டினாய் வளர்ந்து குமரியானதும் அவளை முதலாளி ஒருவனுக்கு நல்ல விலைக்கு விற்கத் துணிகிறார் அவளது அத்தை. அல்டினாவைக் காப்பாற்ற முயலும் தூஷ்யன் அந்த முதலாளியின் அடியாட்களால் கொடுமையாக தாக்கப்படுகிறார்.
இனி பிழைக்க வாய்ப்பு இல்லை என்ற கட்டத்தில் விட்டு விட்டு அல்டினாவைக் கடத்திக் கொண்டு செல்கிறார்கள். அங்கு அல்டினாய் காமுகனான முதலாளியால் வேட்டையாடப்படுகிறாள் .
இறுதியில் தூய்ஷன் துப்பாக்கி முனையில் அல்டினாவை மீட்கிறார்.
அவள் உயர் கல்வி படிப்பதற்காக தொலைவிலுள்ள நகரத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறாள்.
முதல்முறையாக நகரத்தில் காலடி வைக்கும் அல்டினாய் தூய்ஷனின் கனவை நிறைவேற்றும் பொருட்டு மாஸ்கோவில் தமது ஆராய்ச்சிப் படிப்பை முடித்து உயர் பதவிக்கு செல்கிறாள்.
இறுதியில் தமது சொந்த கிராமமான குர்குரீ க்கு வரும் ஆல்டினாய் மூடப்பட்டு கிடந்த பள்ளிக்கூடத்தை பெரிய அளவில் புதுப்பித்து திறக்கிறாள்.இன்று அது " தூய்ஷனின் பள்ளி" எனும் பெயரில்
அவனின் லட்சியத்தைத் தாங்கி நிற்கிறது. இளமைக்காலத்தில்
தூய்ஷனும் அல்டினாவும் நட்டு வளர்த்த மாப்ளார் மரங்கள் அவர்களின் நினைவை முணுமுணுத்து அசை போடுகின்றன. தூய்ஷன் எங்கோ ஒரு கிராமத்தில் தபால் தந்தி வழங்கும் பணி செய்து பிழைக்கிறார்.
சேவையின் சின்னமாய் விளங்கும் தூய்ஷன் மற்றும் அல்டினாய் பாத்திரப்படைப்பு
அவர்களின் தூய்மையான
அன்பையும் தாங்கி நிற்கிறது.
ஆசிரியர்களும் மாணவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய அற்புத படைப்பு இது.
விலை: ரூ75.
வெளியீடு: என்சிபிஎச்
நாள்:5.9.24.
Comments
Post a Comment