ஓராயிரம் சிறகுகள் - நூல் அறிமுகம்

தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் 7: 
நூல்: ஓராயிரம் சிறகுகள்
எழுத்தாளர் - வெ. இறையன்பு
வெளியீடு - கற்பகம் புத்தகாலயம் 
விலை - 200
நூல் அறிமுகம் - செவ்வந்தி துரை.

ஓராயிரம் சிறகுகள் என்ற நூலில் நமக்கும் ஓராயிரம் புது சிறகுகளை முளைக்க வைக்கும் அளவுக்கான விசயங்கள் உள்ளன. வாழ்க்கையை வாழ்ந்து பார் என்பார்கள். ஆனால் எப்படி வாழ்வது என்பதைதான் கால ஓட்டத்தில் மறந்து விட்டோம். இந்த புத்தகம் நம் மறதியை சரி செய்யும் அளவுக்கானது. பத்து வகையான தலைப்புகள் மூலம் உலகையே சுற்றி காட்டுகிறார். மனித குணங்களையும் செயல்களையும் புரிய வைக்கிறார் 
எதெல்லாம் நமக்கு சரி, எதெல்லாம் தவறு என்று சொல்கிறார். பழக்கங்களை உருவாகும் முறை சொல்கிறார். எதற்கெல்லாம் உறுதி தேவை என்று விளங்க வைக்கிறார்.

கனவு, வாய்ப்பு, விழிப்புணர்வு, அத்துமீறல், எளிமை என்று அத்தியாவசியமான பல விசயங்களை பற்றி விரிவாக எழுதி இருக்கிறார். 
அடித்து உதைத்து சொல்லாமல் அழகிய வார்த்தைகளால் புரிய வைக்கும் ஓர் இனிய ஆசிரியராகவே மாறி விடுகிறது இப்புத்தகம். வாய்ப்புகள் அனைத்தும் தற்காலிகமே. அழகும் இளமையும் கூட வாய்ப்புகள். அந்த வாய்ப்பும் தற்காலிகமே. எண்ணங்களே பழக்கங்கள் ஆகின்றன. பழக்கங்களே நம் வாழ்வின் பாதைகளை தீர்மானிக்கின்றன என்று புத்தகம் உணர்த்துகிறது.
"விழிப்புணர்வு உள்ளவர்கள் ஒழுக்கத்துடன் மட்டுமல்ல சுயக்கட்டுப்பாட்டோ டும் இருப்பார்கள். சமூகத்தை மீறி அவர்கள் சிந்திக்க தொடங்குவார்கள். கையூட்டுக்காக அவர்கள் கையேந்த மாட்டார்கள். கலப்படம் செய்து பணம் சம்பாதிக்க நினைக்க மாட்டார்கள். கள்ள சந்தையில் பொருட்கள் விற்க மாட்டார்கள்." என்று புரிய வைக்கிறார்.

தப்பிப்பது வேறு. விடுதலை வேறு. ஒரு தீய பழக்கத்திலிருந்து தப்பிக்க நினைப்பதற்கு பதிலாக விடுதலை பெற நினைக்க வேண்டும். "தப்பிப்பது தவறான நண்பர்களால் சாத்தியம். ஆனால் விடுதலை அடைவதற்கு உண்மையான நண்பர்கள் அவசியம். தத்துவரீதியாக பார்த்தால் தப்பித்தல் அடுத்தவர்களிட மிருந்து நிகழ்கிறது. விடுதலை நம்மிடமிருந்தே நாம் பெறுவது." என்று விளக்கி சொல்கிறார்.

"மனைவியோடு சண்டை என்று சிறு பிரச்சனைக்கு மது அருந்த தொடங்கியவர்கள் கடன் தொல்லை, கல்லீரல் பிரச்சனை என்று பெரும் தொல்லைகளில் மாட்டிக் கொள்கிறார்கள்." பிரச்சனைகளை சரி செய்யாமல் தப்பிக்க முயன்றால் அது எவ்வளவு பெரிய தலைவலிகளை இழுத்து விடுகிறது என்று எளிமையான உதாரணங்கள் மூலம் அறிய வைக்கிறார்.
"உண்மையாக இருப்பவர்கள் தப்பிக்க வேண்டிய தேவையில்லை. மூகமூடிகளை அவர்கள் அணிவதில்லை." தாழ்வு மனப்பான்மைக்கு தெளிவான காரணம் சொல்கிறார். 

மொத்தத்தில் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வரிகளும் நமக்கு அவசியமானவைகளாவே இருக்கின்றன.
குறிப்பாக சமூகத்தையும் வாழ்க்கையையும் இன்னும் முழுமையாக படித்திராத, வருங்கால தலைமுறைக்கு இப்புத்தகத்தோடு சேர்த்து வெ.இறையன்பு ஐயாவின் மற்ற அனைத்து நூல்களையும் படிக்க சொல்லி பரிந்துரைக்கிறேன்.

 நன்றி.
 07.09.2024

Comments

Popular posts from this blog

Smoke and Ashes - நூல் அறிமுகம்.

உணவு சுற்றுலா - நூல் அறிமுகம்.

கற்பது உலகளவு - நூல் அறிமுகம்.