அகம் புறம் அந்தப்புரம் - நூல் அறிமுகம்
நூல் அறிமுகம் : மா.பூங்குன்றன்
சமஸ்தானங்களின் இணைப்புக்கு முன் இந்தியாவின் வரைபடத்தில் ஏறக்குறைய 24 சமஸ்தானங்கள் இடம்பெற்றுள்ள இந்திய வரைபடம் இந்த நூலின் முதலில் கொடுக்கப்பட்டுள் ளது. அதில் 16 சமஸ்தானங்களை யும், அதை ஆண்ட அரசர்கள், அவர்கள் ஆட்சி செய்த விதம், அவர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்புகள், அவர்கள் செய்த போர்கள், செய்துகொண்ட ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள், அவர்களின் அந்தப்புர வாழ்க்கை, கிறுக்குத்தனங்கள் ,
ஆங்கிலேயர்களோடு அவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தங்கள், வாரிசு உரிமைக்கான போராட்டங்கள், அவர்களுடைய ஐரோப்பிய பயணங்கள், படாடோபமான வாழ்க்கை பற்றி விரிவாக, நகைச்சுவையாக கூறியுள்ளார். சமஸ்தானங்கள் சுதந்திர இந்தியாவோடு இணைக்கப்படும் போது அந்த மகாராஜாக்களின் நிலை பற்றி இந்தப் புத்தகத்தில் மிகவும் சுவாரசியமாக கூறப்பட்டுள்ளது. இணைப்புக்கு பின் அவர்களுக்கு ராஜ் பிரமுக் என்ற பட்டம் மட்டுமே அவர்களிடம் மீதமிருந்தது. பின்னர் மன்னர் மானியம் வழங்கப்பட்டது. இறுதியில் மானியமும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றை எழுதும்போது சமஸ்தானங்களைப் புறக்கணித்துவிட்டு வரலாற்றை எழுத முடியாது என்பது இந்த நூலின் மூலம் விளங்குகிறது. ஆங்கிலேயர்களோடு எப்படியெல்லாம் இவர்கள் ஒத்துப் போனார்கள், எப்படியெல்லாம் கூனிக்குறுகி அடிபணிந்து சென்று பல பட்டங்களையும், பல சலுகைகளையும் பெற்றார்கள் என்ற காரண, காரியங்களையும் இந்நூல் எடுத்துக் கூறுகிறது.
சமஸ்தானங்களின் சுவாரஸ்யமான தகவல்கள் இந்த நூலில் கொட்டிக் கிடக்கிறது. காலப்போக்கில் மன்னர் மானியம் ஒழிப்பு சட்டத்தின் மூலம் மகாராஜாவுக்கு வழங்கப்பட்ட மானியம் பிரதமர் இந்திரா அவர்களால் பறிக்கப்பட்டது. அப்போது இந்தியாவிலேயே அதிக மானியம் பெற்றவர் மைசூர் மகாராஜா ஜெய சாம ராஜேந்திர உடையார். அவர் பெற்ற மானியம் மாதம் ரூபாய் 26 லட்சம். மிகக்குறைந்த மானியம் பெற்ற சமஸ்தான மகாராஜா சௌராஷ்ட்ராவில் இருந்த கட்டோடியாவின் ராஜா. அவர் பெற்ற மானியம் ரூ192. மன்னர் மானியம் ஒழிக்கப்பட்ட பின் அவர் சோற்றுக்கு வழியில்லாமல் ஒரு அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணியில் சேர்ந்தார். ஒரு ஓட்டை சைக்கிளில் செல்லும்போது அவருக்கு யாரும் வணக்கம் கூட வைக்கவில்லை என்ற கருத்துடன் இந்த புத்தகத்தை முடிக்கிறார். ஒரு சிறப்பான புத்தகத்தைப் படித்த சந்தோசம் மனதில் தோன்றும் அளவுக்கு இந்நூல் உள்ளது. ஏராளமான வரலாற்றுத் தரவுகளைப் படித்து இந்நூலை ஆசிரியர் சிறப்பாக எழுதியுள்ளார். நூலின் விலை ரூ 1333 .
நாள்:4.9.24
Comments
Post a Comment