மேடை வசப்படும் - நூல் அறிமுகம்.
நூல் பெயர்: மேடை வசப்படும்
நூல் ஆசிரியர் - திரு.க.சிவகுருநாதன்,
நூல் பதிப்பகம் - வாலி பதிப்பகம்,
பக்கம்: 116, விலை: ரூ.150.
நூல் அறிமுகம்: பொறிஞர்.ப.நரசிம்மன், தருமபுரி, கைபேசி : 9443771590.
நாள்: 21.9.2024.
மேடையில் நிற்பதற்கு, மன உறுதி வேண்டும். அதுவும், பெருந்திரளாக கூடியிருக்கும் மேடையில் பேச, நாவண்மையுடன், சொல்வண்மை வேண்டும். நடுக்கமில்லா நிலையில் இருக்க வேண்டும். பேச வந்ததை நினைவில் வைக்க மேலும், நினைவில் உள்ளதை நேரில் பேசிட வேண்டும். நேரில் பேசுவதை நிறைந்திருப்போர் நினைவலையில் கலந்திடச் செய்ய வேண்டும்.
‘மேடை வசப்படும்” என்ற நூலின் ஆசிரியர் திரு.க.சிவகுருநாதன் அவர்கள் திருச்சிராப்பள்ளி நகைச்சுவை மன்றத்தின் ஆணிவேராகத் திகழ்பவர் மற்றும் தமிழ்கூறும் நல்லோர்களால் நன்கு அறியப்பட்டவர். தனது மேடை அனுபவங்களின் அடிப்படையில், பொதுவான மேடைக் கோட்பாடுகளின் விளக்கங்களை கையடக்க நூலில், கடலளவு சாரத்தை கையில் எடுத்து கொடுத்துள்ளார்.
நூலைப் படிக்க எடுப்பவர், படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாதபடி, அடுத்தடுத்த பக்கங்களுக்கு அழைத்துச் செல்வது அற்புதமான அனுபவமாக உள்ளது.
புத்தகம் படிப்பது பொழுது போக்கல்ல, அது நம்மைப் பழுது பார்க்கும் கருவி என்பதை நூலசிரியர் சொல்லாமல் சொல்கிறார். தமது எழுத்துக்களின் வாயிலாக இந்நூலுக்கான வாழ்த்துரையில் நாடாளுமன்ற மாநிலங்கலவை உறுப்பினர் திரு.திருச்சி சிவா அவர்கள் ‘கடந்து போன நாள், வில்லிலிருந்து விடுப்பட்ட அம்பு, வாயிலிருந்து வெளிவந்த சொல்” இம்மூன்றும் திரும்பப் பெற முடியாதவை எனக்கூறி மேடைப் பேச்சின் சிறப்பை விளக்கியுள்ளார்.
நூலின் அட்டைப்படத்தைப் பார்த்தவுடன் நம்மை ஈர்த்து விடும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. பொருளடக்கத்தில் உள்ள தலைப்புகள் மேடைப் பேச்சின் LKG முதல் Phd வரை மேலோங்கி உள்ளதால், படிப்போருக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமைந்துள்ளது.
உள்நாடு மட்டுமல்லாது உலக அளவில் மேடைப் பேச்சின் மூலம் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் மகத்துவம் பற்றி பேசப்படும் நூலாக நம் கையில் புரள்கிறது.
நூலில் இடம் பெற்றிருக்கும் செய்திகளும், தகவல்களும் நூலாசிரியரின் மேடைப் பேச்சின் ஆளுமைப் பெருக்கை பறைசாற்றும் வகiயில் அமைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது.
மேடைப் பேச்சில் இவ்வளவு நுணுக்கங்கள் இருக்கிறதா, அவ்வளவையும், இந்த கையடக்க புத்தகத்தில் கொடுக்க முடியுமா என நம்மை ஆச்சிரியத்தில் ஆழ்த்துகிறார் நூலாசிரியர்.
‘வாங்க பேசலாம்” என முதல் அத்தியாயத்தில் நமது கையைப் பிடித்து, யார் சிறந்த பேச்சாளர் என்பதற்கு இலக்கணம் வகுத்திருக்கும் அவ்வையார் பாடல் மூலம் இட்டுச் செல்கிறார்.
கற்றோர் சபையில் இருக்கத் தக்கோர் நூறுபேரில் ஒருவர், ஆயிரம் பேரில் ஒருவர் கவித்திறம் பெற்றவர், பத்தாயிரம்; பேரில் ஒருவர் தான் பேச்சாற்றலில் சிறப்பர்.
‘ ஆர்த்தகனது நூற்றொருபர்
ஆயிரத்தொன் றாம்புலவர்
வார்த்தை பதினாயிரத்தொருவர்”
- என்னும் பாடல் மூலம் மேடைப் பேச்சாளரின் பெருமையை உணரச் செய்கிறார்.
அடுத்து, மேடைப் பேச்சின் இலக்கணமாக விளங்கும் ‘அறிவித்தல், அறிவுறுத்தல், மகிழ்வித்தல்” என்ற மூன்று கோட்பாடுகளை எளிதில் புரியும்படி பதித்துள்ளார். யார்யாரெலாம் சொற்பொழிவாலர்களாக ஆகலாம், எப்படி சிறந்த சொற்பொழிவாளராகலாம், மேடை சொற்பொழிவுக்கான இலக்கணம் முதலானவற்றை, திருக்குறள் மூலமும், பிரபல இலக்கிய மேடைப் பேச்சாளர்கள் மூலமாகவும் நயம்பட நமக்கு எடுத்துரைக்கிறார்.
'சொற்பொழிவுகளுக்கான குறிப்புகளை எப்படி எடுக்கலாம்' என்னும் பகுதியில், மூத்தப் பெருமைமிகுப் பேச்சாளர்களான சொல்வேந்தர் சுகிசிவம், புலவர் திருவாரூர் இரா.சண்முக வடிவேல், தமிழறிஞர் ஞானசமபந்தன் அவர்கள் மூலம் நமக்கு வழிகாட்டுகிறார்.
‘தோற்றப் பொலிவு” பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றுப் பின்னனியுடன் நம் மனதில் பதிய வைக்கிறார்.
‘மெய்ப்பாடுகள்” பற்றிய அங்க அசைவுகள் எவ்வாறு மேடைப் பேச்சாளரின் பேச்சுக்கு அணிகலனாக அமைந்து, மேலும் பலம் சேர்க்கிறது என்பதை உதாரணங்களுடன் விளக்கியுள்ளார்.
‘அவையஞ்சாமை”யின் முக்கியத்துவம் பற்றி மகாத்மா காந்தி, பெர்னாட்ஷா, விவேகானந்தர், முனைவர் கு.ஞானசம்பந்தன் ஆகியோர் வாழ்வின் ஊடே சென்று நமக்கு வழிகாட்டுகிறார்.
'தலைப்புக்குள் பேசுதல்,
எந்தத் தலைப்பிலும் பேசுதல்,
நிகழ்கால நிகழ்வுடன் உரையாற்றுதல்,
இடம் சார்ந்து பேசுதல்,
சஸ்பென்ஸில் தொடங்கி நகைச்சுவையுடன் முடித்தல்,
மேடையின் தன்மைக் கேற்ப பேசுதல்,
குறித்த நேர அளவில் பேசுதல்' -
என பலப்பலத் தகவல்களை உதாரணங்களுடன் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார்.
சொற்பொழிவால் ஏற்படும் சமூக மாற்றத்தையும் எடுத்துக்காட்டுடன் விளக்கி உள்ளார்.
உலகப் புகழ்பெற்ற சர் வின்ஸ்டன் சர்ச்சில் பேசிய ‘எப்போதும் விட்டுக் கொடுக்காதே (never give up )
ஆப்ரஹாம் லிங்கன் பேசிய ‘மக்கள். . . மக்களால். . . மக்களுக்காக . . . “ (of the people... By the people... for the people...)
மார்ட்டின் லூதர்கிங் ஜீனியரஸ் பேசிய ‘எனக்கு ஒரு கனவு இருக்கிறது” ஆகியவற்றை நம் கண்முன் நிறுத்துகிறார் நூலாசிரியர்.
மேடைப் பேச்சில், எதிர்கொள்ளும் சவால்கள், பட்டிமன்றத்தில் பேச்சாளர்களின் வரையறைகள் - போன்றவைகளை கூறி, அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகளையும் கூறியுள்ளார்.
ஒரு ‘மேடை சொற்பொழிவு விழா” எவ்வாறு சிறப்பாக அமைக்கலாம் என்பது பற்றிய விளக்கம் எளிதில் பின்பற்றக் கூடியதாக உள்ளது.
மொத்தத்தில் மேடைப் பேச்சு எளிதல்ல. ஆனால், அதற்கான பயிற்சியுடன் கூடிய முயற்சி இருந்தால், நாமும் சிறந்த மேடைப் பேச்சாளராக ஆக, இந்நூல் வழிகாட்டியாக உள்ளது.
மேடைப் பேச்சைப் பற்றி நினைப்போர் கையில் தவறாமல் இருக்க வேண்டிய புத்தகம் ‘மேடை வசப்படும்” என்றால் அது மிகையாகாது.
Comments
Post a Comment