வந்தாரங்குடி - நூல் அறிமுகம்

தகடூர் புத்தகப் பேரவை, நூல் அறிமுகம் -2

நூல் : வந்தாரங்குடி
நூலாசிரியர்:
கண்மணி குணசேகரன். 
நூல் அறிமுகம்:
சிவம் முனுசாமி

மண்ணுக்காகவும், ஏர்குடி மக்களின் வாழ்வுரிமைக்காகவும் போராடிய மக்களது உணர்வுகளின் உயிரோவியம் இந்த நாவல். 
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலத்தை கொடுத்துவிட்டு இன்றுவரை சரியான இழப்பீடும் வேலையும் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் பல ஊர்களில் ஒன்றான  #வேப்பங்குறிச்சி என்ற ஊரே கதைக்களம்.
கதை மூன்று தளங்களில் பயணிக்கிறது.
1.சுரங்க நிர்வாகத்திடமிருந்து மண்ணை மீட்கவும்/ மீட்க முடியாவிட்டால் நியாயமான உரிமைகளை பெறவும் தொடரும் போராட்டம்,
2.அந்த காலகட்டத்தில் நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டம்,
3.ஈழப்போரட்டம்.
அத்தனையும் அரசியல் சார்ந்த போராட்டங்களாக இருந்தும் இது அரசியல் நாவலா என்றால் ஒட்டுமொத்தமாக ஆமாம் என்று சொல்லிவிட முடியாது. 
நாவலில், வாழ்ந்த மண்ணை பறிகொடுத்துவிட்டு அகதிகளாய், வந்தாரங்குடிகளாய் வாழும் மக்களின் வலியை உணர்த்தியிருக்கிறார் ஆசிரியர்.  மண்ணை நேசித்த மனிதர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி வேறு இடத்தில் குடியூன்றுகையில்  வேர் விடமுடியாமல் தடுமாறும் மனிதனாக இராசோக்கியம்- பாஞ்சாலை குடும்பம். அவர்களது பிள்ளைகளாக சதாசிவமும், பூமாவும். 
இதில் பூமாதேவி (எ) பூமா கதாபாத்தரம் பெயருக்கேற்றார் போல பூமியை நேசிக்கிறாள், அந்த மண்ணை , வாழ்வை அனுபவித்து கொண்டாடும் பெண்ணாய் மிளிர்கிறாள்.
ஊருக்காகவும், உரிமைக்காகவும் போராடி மற்றவர்களின் உரிமையை பெறக் காரணமாக இருந்தும், தங்களது வாழ்வை வலியாக சுமந்து வாழும் அறிவழகன் சிகாமணி போன்றவர்களின் தியாகம் சிலிர்க்க வைக்கிறது. இவர்களைப் போன்றவர்களின் வாழ்க்கையை உரமாக கொண்டுதான் சமூகம் என்னும் மரம் கிளை பரப்புகிறது என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.
ரங்கநாது, செங்கல்ராவு, கரிபடாச்சி, வடிவேல், கணேசண், என வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் வெள்ளந்தி மனிதர்களான கிராமத்து  ஜனங்களின் நடுவே ஊரே மாண்டாலும் தான் வாழ்ந்தால் போதும் என பெரிய மனிதர்கள் வேடத்தில் வாழும் தனபால் கதாபாத்திரம் எல்லா ஊரையும் போல வேப்பங்குறிச்சியிலும்.
நாவலின் மிகவும் அழகான பகுதி பகை குடும்பங்களான  இராசோக்கியம்- செங்கல் ராவு குடும்பங்களின் இளசுகளான சிகாமணி- பூமா இடையே மலரும் கண்ணியமிகு காதலே. இத்தனைக்கும் நாவலின் கடைசிவரை இந்த இருவரும் ஒரு வார்த்தைகூட பேசிக்கொள்வதில்லலை, இருந்தும் அவர்களுக்குள் பறக்கும் சிட்டுக்குருவிகள் நமக்குள்ளும் பறக்கின்றன.
அட்சயப்பாத்திரமாய் இருந்த நிலத்தைக் கொடுத்து விட்டு வந்த காசை வாங்கிக்கொண்டு முற்றிலும் நகர வாழ்க்கைக்கு மாறி இருந்த பணத்தை வேகவேகமாக செலவு செய்துவிட்டு வறுமையை நிரந்தரமாக்கிக்கொள்ளும் மனிதர்களின் நடுவே விவசாயத்தை விட்டால் நமக்கென்ன தெரியுமென மண் சார்ந்த வாழ்வை தேடி அலைந்த  இராசோக்கியத்தின் மனைவி பாஞ்சாலையின் மரணத்தின் மூலம் வந்தாரங்குடிகளின் வாழ்க்கை எத்தனை பாதுகாப்பற்றதாக மாறிப்போகிறது என்பது உணர்த்தி விடுகிறது நாவல். "கடைசியில் சுடுகாட்டிற்கு கூட வழியில்லாமல் இரவல் சுடுகாடு தேடி அலைய வேண்டிதாய்டுச்சே" என்ற அந்த மக்களின் கதறல் அதல பாதளமான சுரங்கத்தில் ஓடி அமிழ்ந்து அடையாளமற்று போய்விடுவது துயரமான முடிவு. 
சுமார் 700 பக்கங்களைக் கொண்ட புத்தகம். 
எளிய மனிதர்களை நேசிக்கும் எல்லோரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்..

 தமிழினி பதிப்பக வெளியீடு. 
விலை. ரூ.500.
சலுகை விலையில் ரூ.100 க்கும் வெளியிடப்பட்டது.
 நாள் : 2.9.24

Comments

Popular posts from this blog

Smoke and Ashes - நூல் அறிமுகம்.

உணவு சுற்றுலா - நூல் அறிமுகம்.

கற்பது உலகளவு - நூல் அறிமுகம்.