பாலைவனப் பூ - நூல் அறிமுகம்.

தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம்: 29
நாள்: 29.09.2024.
நூல் : பாலைவனப் பூ
ஆங்கிலத்தில் வாரிஸ் டைரி காத்திலின் மில்லர்
தமிழில்: எஸ் .ஆர்ஷியா
நூல் அறிமுகம்: மா.பூங்குன்றன்

  இந்நூல்  ஆப்பிரிக்காவின் 27 நாடுகளில் வாழும் முஸ்லிம் பழங்குடிகளிடையே,  குறிப்பாக பெண்களிடையே கடைபிடிக்கப்பட்டு வரும் மிக மோசமான மூடநம்பிக்கை ஒன்றைப் பற்றியது.  ஆப்பிரிக்க கண்டத்தில் சோமாலிய பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் பழங்குடியின நாடோடியான வாரீஸ் என்ற பெண்ணுக்கு ஐந்து வயதில்  மதத்தின் பெயரால் நடைபெற்ற ஒரு சடங்கு, அப் பெண்ணின் முழு வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது. அந்த ஒரு பெண் மட்டுமல்ல,  ஆப்பிரிக்கக் கண்டத்தின் 28 நாடுகளிலுள்ள 13 கோடிப் பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ள தாக ஐ.நா -வின் சுகாதாரத்துறை மதிப்பிட்டுள்ளது. சோமாலிய நாட்டைச் சேர்ந்த பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் ஒரு பழங்குடியின குடும்பத்தில் பிறந்தவர் வாரிஸ். அவளுடைய ஐந்தாவது வயதில் அவளது பெற்றோர்  ஒரு பழங்குடியினக் கிழவியை அழைத்து வருகின்றனர். அக் கிழவி அந்த ஐந்து வயதுக் குழந்தை வாரிஸுக்கு பழங்குடி இனத்தவரால் பின்பற்றப்படும் கொடிய சடங்கை செய்ய முற்படுகிறார். அது வேறொன்றுமில்லை,  இந்தியாவில் முஸ்லிம் ஆண்களுக்கு செய்வதைப் போன்று அங்கு பெண்களுக்கு செய்யப்படும் பெண் உறுப்பு சிதைப்பு எனப்படும் விருத்த சேதனம் எனும் சடங்கு ஆகும். இதை பாலுறுப்பு சிதைப்பு என்றும் கூறுவர்.

       ஆப்பிரிக்கக் கண்டத்தின் சோமாலிய பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் பழங்குடியின நாடோடியான வாரீஸ் தனது ஐந்து வயதில்  சடங்கின் பெயரால் பால் உறுப்பு சிதைப்புக்கு உள்ளானவர். பெண்ணின் அந்தரங்க இச்சையை மட்டுப்படுத்தி பாலியல் உரிமையை சிறுவயதிலேயே இழக்கச் செய்யும் பின் விளைவாக எண்பது சதவிகித பெண்கள் புணர்ச்சி இன்பம் பெறுவது தடுக்கப்படுவதுடன் உறுப்பு சிதைப்புக்கு பின்பு  சிறுநீர்ப்பாதை சிதைப்பு, ஆறாத வடுக்கள், மரணம் என்று நீண்டு  விடுகின்றது. ஐந்து வயதில் இந்த நரக வேதனைக்கு ஆளான வாரிஸ் தமது 13 வயதில்  63 வயது முதியவருக்கு 4 ஒட்டகத்துக்காக திருமணம் செய்துவைக்க ஏற்பாடாகிறது. இச் செய்தியை அறிந்த வாரிஸ் தன் குடும்பத்திலிருந்து தப்பித்து பின் தாயின் அனுமதியுடன் பல்வேறு இடர்ப்பாடுகளைக் கடந்து மொகாதிஷு என்ற பெரிய நகரத்தில் வாழும் தன் தமக்கை வீட்டிற்கு வந்து சேருகின்றாள். அங்கு சில காலம் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்துகிறார். 

        அச்சமயத்தில் அவருடைய சித்தப்பா ஒருவருக்கு இங்கிலாந்தில் தூதர் பதவி  கிடைக்கிறது. அவரோடு வீட்டு வேலை செய்யும் பெண்ணாக இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப் படுகிறாள். அங்கு வீட்டு வேலை செய்து கொண்டே  மாடலிங் துறையில் கால் பதிக்க முயற்சி செய்கிறாள். கடும் சிரமத்துக்குப் பின் அவளுக்கு அத்துறையில் வெற்றி வாய்ப்பு  கிடைக்கிறது. சித்தப்பாவின் நான்கு வருட தூதர் பதவிக்காலம் நிறைவடையும் தருவாயில் வாரிஸ் சோமாலியா திரும்ப மறுக்கிறாள். பின்னர் பழகிய நண்பர்களின் உதவியுடன் லண்டனில் தங்குவதற்கான கடவுச்சீட்டை தவறான வழியில் பெற்று அங்கேயே தங்கி விடுகிறாள். கொஞ்சம் கொஞ்சமாக மாடலிங் துறையில் முன்னேறுகிறாள். என்னதான் வசதி வாய்ப்புகள் வந்தாலும் சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட கொடூரமான அனுபவத்தை மறக்க இயலாமல் தவிக்கிறாள். தன்னைப் போன்றே லட்சக்கணக்கான சோமாலியப் பெண்கள் வெளியில் சொல்ல முடியாத துயரத்துக்கு உள்ளாகிறார்கள். இதை எண்ணி வருந்துகிறாள். தொடர்ந்து விளம்பரப் படங்களிலும் பேஷன் ஷோக்களிலும் நடித்து ஓரளவு பொருளாதாரத்தை ஈட்டுக்கிறாள். 

     தனது பயணத்தில்  ஒரு கலைஞனைச் சந்தித்து அவனை விரும்பி மணம் முடிக்கிறாள். ஒரு குழந்தையும் பிறக்கிறது. ஆனால் ஒரு பெண்ணுக்குரிய எந்த சுகத்தையும் அவளால் அனுபவிக்க முடிவதில்லை. தனக்கு ஏற்பட்ட நிலை இனி எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என நினைக்கையில் ஐ.நா சபையிலிருந்து வாரிஸுக்கு ஒரு அழைப்பு வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் இத்தகைய மதச்சடங்கு காரணமாக பாதிப்படைந்த பெண்களுக்கு மறுவாழ்வு வழங்குவதற்கும் இந்த மதச்சடங்கை பழங்குடியின மக்களிடம் இருந்து நீக்குவதற்குமான செயலில் ஈடுபட தூதராக அழைக்கப்படுகிறார். மகிழ்ச்சியோடு இதை ஏற்றுக்கொண்ட வாரிஸ் தன்னுடைய நாட்டுக்கு பயணிக்க ஆசைப்படுகிறார். வாரிஸ் தன்னுடைய முப்பதாவது வயதில் குழந்தை பிறந்த பின் கூறியதாவது : 'எனக்கு நடந்த  விருத்தசேதனம் குறித்து இரண்டு காரணங்களுக்காக  பேச வேண்டிய தேவைகளைக் கொண்டிருந்தேன். முதலாவதாக அது என்னை மிகவும் ஆழமாக பாதித்தது. உடல்ரீதியான கோளாறுகளைத் தாண்டி நான் அதனுடன் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறேன். இபபோதும் நான் பாலியல் இன்பத்தை அறியாதவளாகவே  இருக்கின்றேன். அது எனக்கு மறுக்கப்பட்டிருக் கிறது' என கூறுகிறாள். நான் முழுமை அற்றவள் என்பதாக உணர்கிறேன் என்னிடம் ஏதோ குறைபாடு  இருக்கின்றது. என்னால் அதை சீர்படுத்திக் கொள்ள முடியாது என்பதை நான் உணரும் போது என் உணர்வுகள் எல்லாம் உணர்ச்சியற்று போய்விடுகின்றன எனக் கூறுகிறார். 

    இந்தச் சடங்கிற்கான காரணங்களை இன்றுவரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவரைப் பற்றி பிபிசி,  'நியூயார்க்கில் ஒரு நாடோடி' என்ற ஒரு ஆவணப் படத்தையும் எடுத்துள்ளது. 
  
       இப்படிப்பட்ட மூடநம்பிக்கையும் இன்னமும் உலகத்தில் உள்ளதா என கேள்வி கேட்க வைக்கிறது இந்நூல்.

Comments

Popular posts from this blog

Smoke and Ashes - நூல் அறிமுகம்.

உணவு சுற்றுலா - நூல் அறிமுகம்.

கற்பது உலகளவு - நூல் அறிமுகம்.