மகத்: இன்று - அன்றாடம் அரங்கேறும் யாத்திரை - நூல் அறிமுகம்.

தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் -30.
நாள்: 30.09.2024.

நூல்: மகத்: இன்று- அன்றாடம் அரங்கேறும் யாத்திரை
அறிமுகம்: வெ.இராஜன்
 வெளியீடு: திருவள்ளுவர் பொத்தக இல்லம். விலை 65 ரூபாய்.
பிறப்பின் அடிப்படையில் உயர்வு,  தாழ்வு ,தொழில், கல்வி ,சமூக உயர்வு, இழிவு இருப்பிடம் ஆகியவற்றை முழுமையாக நிர்ணயித்து அதன் மூலம் ஒரு மனிதன் தன் பிறப்பிலிருந்து, இறப்பு வரை தான் எந்த வகையிலும் சம்பந்தப்படாத ஒன்றினை சுமக்க வேண்டிய அல்லது அனுபவிக்க வேண்டிய வழிமுறைகளை உருவாக்கியது என்பது உலகத்திலேயே வேறு எங்கும் இல்லாத  மிக மோசமான விஷம் போன்ற ஒரு தத்துவம். சாதிய சமுதாயத்தை இந்தியா உருவாக்கி உருப்பெற்று, ஆலமரமாக நிறுத்தியது.

இதனைப் பல்வேறு தலைவர்கள், இயக்கங்கள் , கட்சிகள் ,அரசுகள் ஆகியவை தங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து  சமத்துவ சமூகத்தை, அனைவரும் சமம் என்ற அடிப்படையில் அமைந்த ஒரு உயரிய சமூகத்தை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

அந்த முயற்சியின்  பிதாமகர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், கடந்த நூற்றாண்டின் இருபதுகளில் மகத் நகர் குளத்தில் தண்ணீர் எடுக்க அனைவரையும் அனுமதிக்கக் கோரி நடத்திய போராட்டம், இந்த சமூக அமைப்பை ஒழுங்கு படுத்தும் முயற்சியில் ஒரு மிகப்பெரிய நிகழ்வாகும்.

அந்தப் போராட்டம் பற்றியும், அந்தக் காலம், சூழ்நிலை பற்றியும் இப்புத்தகத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பாக அதே சமயத்தில் நமது நாட்டின் தந்தை மகாத்மா காந்தியடிகள் நடத்திய தண்டி யாத்திரையோடு  ஒப்புமைப்படுத்தி கூறப்பட்டுள்ளது.

புத்தகத்தில் இருந்து... 
"ஒரு அடிமை நாட்டில் அரசியல் விடுதலைக்காகவும், அரசியல் யாத்திரைக்காகவும் கிளர்ச்சியில் ஈடுபடுவது பெரும்பாலும் எளிது. மக்கள் தங்களின் அரசியல் தலைவர்களை பன்னீர் தெளித்து வரவேற்க வாய்ப்பு உள்ளது.

 சமூகத்தை அதன் இழி நிலைகள், மூடநம்பிக்கைகள், பத்தாம் பசலித் தனங்கள் தீய வழக்கங்கள் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறச் செய்வதற்காக ஈவிரக்கமற்ற தாக்குதல் தொடுப்பவரின் நிலை இதற்கு நேர் மாறானது. பெரும்பாலும் பழமைவாதங்களில் ஊறித்திளைத்து  வருகிற, நடைமுறை வழங்கங்களுடன் இரண்டறக் கலந்து நிற்கிறவர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒட்டுமொத்த சமூகத்தின் நம்பிக்கைக்கு எதிராக அவர்களது செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் அமைந்திருந்தன.

இவ்வாறு தீண்டத்தகாதவர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டுவதற் காக வரலாற்றில் முதல்முறையாக தங்களது மகத்தான தலைவரின் கீழ் அணி திரண்டனர்...

வர்ணனை இவ்வாறு தொடருகிறது...
தற்போது அம்பேத்கர் குளத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார். அறிவாளிகளிலும் அறிவாளியான, இப்புவியில் வாழும் எத்தனை அறிவாளி மனிதனுக்கும் இணையான உயரிய விருப்பங்களைக் கொண்ட ஒரு இந்துவாக இருந்தும் ஒரு பொது  நீர் நிலையிலிருந்து நீர் எடுக்கவோ , இந்தியாவின் பொது நூலகத்தில் வாசிக்கவோ இயலாத,  தான் பிறந்த, தான் நேசித்த மண்ணில் இருந்து கொடுங்கோன்மையின் ஆணவத்தைத் தகர்த்தெறிந்து உள்ளார்.

 தங்களின் மதம் விலங்குகளைக்  கூட சகிப்புத்தன்மையுடன் நடத்தியதாக பெருமை பேசியவர்கள் கூட சக மதத்தினரை பூனைகளையும், நாய்களையும் விடக் கேவலமாக நடத்தியதை அம்பலப்படுத்தினார்..

டாக்டர் அம்பேத்கர் குளத்திலிருந்து நீரை அள்ளிப் பருகினார் .அதைத் தொடர்ந்து ஏராளமான மக்கள் இவ்வாறு நீரைப் பருகி தங்களது உரிமையை நிலை நாட்டினர். பிறவி போராட்டக்காரர்கள் பந்தலுக்கு திரும்பினர்.

    சிறப்பான நூல். அனைவரும் வாசிக்க வேண்டுகிறோம்.

Comments

Popular posts from this blog

Smoke and Ashes - நூல் அறிமுகம்.

உணவு சுற்றுலா - நூல் அறிமுகம்.

கற்பது உலகளவு - நூல் அறிமுகம்.