எனது இந்தியா - நூல் அறிமுகம்.

தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் -24
நாள்: 24.09.24

நூலின் பெயர்: எனது இந்தியா 
எழுதியவர்: எஸ். ராமகிருஷ்ணன்*
நூல் அறிமுகம்: நாகா ( நூல் வழிச்சாலை)

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் கடந்து விட்டன. மிகச்சிறப்பான முறையில் இந்த கொண்டாட்டத்தை இந்த வருடம் இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடினார்கள். 

சுதந்திர இந்தியாவில் பிறந்த, மற்றும் இன்றைய இளைஞர் பெருமக்களுக்கு இந்திய தேசத்தின் பல பெருமைகள் முழுவதுமாக தெரியுமா என்றால் சந்தேகமே!?

இளைஞர்களுக்கு தேசத்தின் மீது மிகுந்த பற்று உள்ளது. அதில் சந்தேகம் இல்லை. ஆனால், நம் இந்திய தேசம் எவ்வளவு பெருமை வாய்ந்தது என்பது குறித்த புரிதலும் தேவை. அதுகுறித்த வரலாற்றை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். மிக மிக முக்கியம். 

அதற்கு பெரிதும் துணை நிற்பது எனது இந்தியா என்ற இந்நூல்!
எழுதியவர் எஸ். ராமகிருஷ்ணன். இவர் எழுதிய இன்னொரு நூல் மறைக்கப்பட்ட இந்தியா வை சில வாரங்களுக்கு முன் வாசித்தது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

இந்தியா ஒரு காலத்தில் ஜாதிய ஒடுக்குமுறை, அதிகார துஷ்பிரயோகம், மதச்சண்டை ஆகியவற்றால் பிளவுபட்டு இருந்தது.  

மிளகு மற்றும் சந்தனம் போன்ற பொருட்களுக்காக தொடங்கி, கடைசியாக நாடு பிடிக்கும் சண்டையாக மாறியதுதான் வரலாறு.  300 ஆண்டுகளுக்கும் மேலாக பிரெஞ்சு, போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் இயற்கை வளங்களை, தங்கம், வெள்ளி, வைரங்கள் மற்றும் ஏராளமான சொத்துகளை கொள்ளையடித்து கப்பல்கள் மூலம் கொண்டு சென்றனர். இந்திய நாட்டின் வளம் சுரண்டப்பட்டது.

இந்தியாவின் வளம் எப்போதும் அன்னியர்கள் அனுபவிப்பதற்காக மட்டுமே கொள்ளை போய்க்கொண்டு இருக்கிறது என்பது கசப்பான உண்மை! இன்றும் அந்த நிலை தொடர்வது சாபக்கேடு!

ஆனாலும், பழைய இந்தியாவின் பெருமைகள் சொல்லி மாளாது. இந்தப் புத்தகத்தில் அவ்வாறான பல பழம் பெருமைகளை சுவைபட விவரமாக தந்திருக்கிறார் நூலாசிரியர் எஸ். ராமகிருஷ்ணன்.

பல வரலாற்றுச் சம்பவங்களை பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்தும், ஆவணங்களின் ஆதாரங்களோடும், நாம் கேள்விப்பட்டிராத பல தகவல்கள் இந்நூலில்  நிரம்பியுள்ளன
450 பக்கங்களுக்கு மேலாக எழுதப்பட்ட இந்நூல் ஒரு பொக்கிஷம்!

மியூசியம்

உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை  ஒருவன் திருடிக்கொண்டு போய் தனது வீட்டில் வைத்துக் கொண்டு போவோர் வருவோரிடம் தம்பட்டம் அடித்துக் கொண்டு இருந்தால் அவனைப்பற்றி என்ன நினைப்பீர்கள்? களவாணிப்பயல் என்று தானே?! நினைத்து துச்சமென புறம் தள்ளுவீர்கள். அப்படித்தான் நானும் என் நண்பர் திரு.மணிவாசகம் (திருப்பூர்) அவர்களும் சில வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டன் மாநகருக்கு சென்றிருந்த போது அந்நாட்டை களவாணிப்பயல் என்று நினைத்தோம்.

காரணம், லண்டனில் உடன் வந்த பல நண்பர்கள் ஊரைச் சுற்றிப் பார்க்க கிளம்பிய போது நாங்கள் இருவர் மட்டும் லண்டன் மியூசியம் சென்றோம். இரண்டு நாட்கள் அங்கேயே செலவழித்தோம். கண்ணீர் விட்டோம். காரணம், நம் இந்திய நாட்டிலிருந்து திருடிக்கொண்டு, கொள்ளையடித்துக் கொண்டுபோன ஏராளமான பொருட்களை ராணி எலிசபெத் பெயரில் அங்கே அமைக்கப்பட்ட மியூசியத்தில் காட்சிப்படுத்தியிருந்தார்கள். நம் நாட்டின் வளங்கள் அவர்களின் சொத்துகளாக  அங்கு வரிசையில் அமர்ந்திருந்தன. உண்மையில் வயிறு எரிந்தது.

இதில் உலகின் பல நாடுகளிலிருந்து கொள்ளையடித்து கொண்டுவரப்பட்ட பொருட்கள் அனைத்தும் நாடுவாரியாக பெயர் எழுதி வரிசைப் படுத்தி வைக்கப்பட்டிருந்தன.

என்ன அநியாயம் பாருங்கள்? இவர்கள் தான் இன்று உலகின் முக்கிய பல நிகழ்வுகளுக்கு பொறுப்பேற்று நடத்துகிறார்கள் . எல்லாம் காலத்தின் கோலம். 

சரி! நம் வாசிப்புக்கு வருவோம்! ஆகச்சிறந்த வரலாற்று நிகழ்வுகள் பல  இந்நூலில் சுவைபட உள்ளது. அவற்றை வரிசையாக சுருக்கமாக பார்ப்போம்.

மகாத்மா காந்தியின் படுகொலையில் ஆரம்பிக்கிறது இதன் முதல் அத்தியாயம்.

தீர்ப்பில் காந்தி போன்ற அகிம்சாவாதியைக்கூட ஒருவன் கொன்று விட்டு, தண்டனையிலிருந்து தப்பிவிடக்கூடாது என்பதற்காகவே, கோட்சேவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையில் அரசு குறுக்கிடவேயில்லை. கவனிக்கப்பட வேண்டிய விஷயம் இது!

தூக்குதண்டனை நாளின் முந்தைய இரவில் இரண்டு நபர்கள் சிறை வளாகத்திற்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே செல்ல முயன்றனர். விசாரணையில் அவர்கள் இருவரும் தென்னிந்தியாவைச் சேர்ந்த இரண்டு பத்திரிக்கையாளர்கள் என்று தெரிந்தது. கோட்சே தூக்கிலிடப்பட்டான்.

இந்த வழக்கு சுட்டிக்காட்டும் உண்மைகள் கசப்பான நிஜங்கள் என்கிறார் நூலாசிரியர்.
பிரிவினையின் பெயரால் நடைபெற்ற கலவரத்துக்கு யார் காரணம்? உள்துறை அமைச்சகத்துக்கு தெரிந்திருந்தும் ஏன் காந்திக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை?
காந்தியை கொன்றது ஒரு முஸ்லீமாகத்தான் இருக்கக்கூடும்  என்ற கசப்புணர்வில் நிறைய வன்முறைகள் நடைபெற்றது. அந்த துவேஷத்தின் விதை எப்படி உருவானது? அதுதான் இன்றும் முற்றி வளர்ந்திருக்கிறதா? என்று கேள்வி எழுப்புகிறார் நூலாசிரியர்.

நீதி விசாரணையில் எந்த அரசியலும் இருக்கக் கூடாது என்பதை காந்தி படுகொலை விசாரணை முன்னுதாரணமாக அமைந்தது.
இன்று ஏன் அந்த அறத்தை நாம் இழந்து விட்டோம்?
- இப்படி முடிகிறது முதல் அத்தியாயம்.

காந்தியின் செயல், நடவடிக்கைகள், கொள்கைகள் இவற்றைக் குறித்து பலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனால், இப்படி பச்சை படுகொலையை ஆதரித்து சில கட்சிகளும், அமைப்புகளும் இன்றும் சார்ந்து குரல் கொடுப்பதை நமது மனம் ஏற்றுக்கொள்ள இயலவில்லை!

நமது கொள்கைகளுக்கு எதிரானவர் என்று ஒருவருக்கொருவர் சுட்டு வீழ்த்திக் கொண்டிருந்தால் பின் எவர் வாழ்ந்து விட முடியும், இம்மண்ணில்!
வன்முறை எப்போதும், எதற்கும் தீர்வாகாது என்பதே நமது புரிதல்!

இந்த நூலின் மற்றுமொரு சிறப்பு ஒவ்வொரு அத்தியாயத்திலும் அதைக் குறித்த வேறு நூல்களின் பெயர்கள் வாசிக்கவென்று குறிப்புகள் தந்திருக்கிறார் நூலாசிரியர்.

Comments

Popular posts from this blog

Smoke and Ashes - நூல் அறிமுகம்.

உணவு சுற்றுலா - நூல் அறிமுகம்.

கற்பது உலகளவு - நூல் அறிமுகம்.