உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர் - நூல் அறிமுகம்.
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் -26.
நாள்: 26.09.2024.
நூலின் பெயர்: உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர்
ஆசிரியர் : எடி ஜேக்கூ
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நூல் அறிமுகம்: சிவம் முனுசாமி
பதிப்பகம்: மஞ்சுள் பப்ளிகேஷன்.
மொத்த பக்கங்கள் 206,
விலை : ரூ.299/-
நூலாசிரியர் பற்றி: ஆபிரகாம் சாலமன் ஜேக்கூபோவிச் என்ற இயற்பெயர் கொண்ட எடி ஜேக்கூ ஒரு ஜெர்மானிய யூதர். நாஜிப் படைகளின் வதை முகாம்களில் சிக்கி உயிர் பிழைத்தவர்.
1945 ஆம் ஆண்டில் வதை முகாம் கைதிகள் கொடூரமாக மைல் கணக்கில் நடத்தி அழைத்துச் செல்லப்பட்ட மரணப் பேரணியில் இவரும் இடம் பெற்றிருந்தார். தனது 100 - ஆவது வயதில் வெளியிடப்பட்ட இந்த நூல் இவருடைய சுயசரிதை நூல்.
மொழிப்பெயர்ப்பாளர் பற்றி:
நாகலட்சுமி சண்முகம்.
இல்லத்தரசியான இவர் 10 ஆண்டுகளில் சுமார் 100 புத்தகங்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இவர் ஒரு தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட.
இவரது கணவரும் புத்தக மொழிபெயர்ப்பாளர். இவர்கள் மும்பையில் வசிக்கிறார்.
நாகலட்சுமி தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது உள்ளிட்ட நிறைய விருதுகள் பெற்றுள்ளார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதையான TKS குடும்பத்தில் வந்த திரு. முத்துசாமி அவர்களின் பேத்தி இவர்.
இவர் "எடி"யின் எழுத்தை மட்டும் மொழி பெயர்க்கவில்லை, அவரின் வாழ்வையும் வலியையும் அது தரும் தன்னம்பிக்கையையும் நம் மண்ணின் மொழிக்கு மாற்றியதில் வெற்றி கண்டிருக்கிறார்.
புத்தகம் பற்றி:
"எனக்கு பின்னால் நடக்காதீர்கள் - நான் உங்களை வழிநடத்தாமல் போகக்கூடும். எனக்கு முன்னால் நடக்காதீர்கள் - நான் உங்களை பின்தொடராமல் போகக்கூடும்.
வெறுமனே எனக்கு பக்கத்தில் நடந்து வந்து என்னுடைய நண்பராக இருங்கள்". என்னும் தத்துவ வரிகளோடு தொடங்கும் இந்தப் புத்தகத்தை வாசிக்க, வாசிக்க உண்மையில் நம்மையும் எந்த நெருடலும் இல்லாமல் எடி எனும் அற்புத மனிதரின் நண்பராக இணைந்து கொள்ள வைக்கிறது இவரது வாழ்க்கை.
'வாழ்க்கையில் என்னைப்போல
வேதனைகளும் வலிகளும் அனுபவித்தவர்கள் யாருமே இருக்கமுடியாது' என்று சதா புலம்பிக்கொண்டு தவிக்கும் நம்மில் யாருமே எடி என்ற இந்த மனிதர் அனுபவித்த துயரங்களில் ஒரு சதவீதத்தை கூட தொட்டுப் பார்த்திருக்க மாட்டோம்...
இந்த உலக நாடுகளின் மதங்கள் அனைத்தும் அன்பைத்தான் வெளிப்படையாக போதிக்கின்றன. ஆனாலும், சில உள்நோக்கம் கொண்ட மனிதம் தொலைத்த தலைவர்களின் கரங்களில் அதிகாரம் சிக்கிக்கொள்ளும்போது உலக சமநிலை கெட்டுப் போகிறது.
ஒருங்கிணைக்கப்பட்ட ஜெர்மனியின் முதல் அதிபராக இருந்த பிஸ்மார்க் ஒருமுறை ஜெர்மனியர்களை உன்னிப்பாக அவதானிக்குமாறு உலகிற்கு எச்சரிக்கை விடுத்தார். ஒரு நல்ல தலைவர் வாய்க்கும் பட்சத்தில் உலகிலேயே தலைசிறந்த நாடாக ஜெர்மனி திகழும். ஆனால், ஒரு மோசமான தலைவர் அவர்களை வழிநடத்தினால் அவர்கள் அரக்கர்களாக மாறிவிடுவர். அந்த மோசமான தலைவனாக வந்து உதித்தவன்தான் ஹிட்லர்.
ஹிட்லர் எனும் பாசிசவாதியின் நாஜி முகாம்களில் சிக்கிக்கொண்டு குறைந்தபட்சமாக உயிர் வாழ்ந்ததற்காகவே கஷ்டப்பட்ட எடி இன்று உலகிலேயே மகிழ்ச்சியான மனிதராக தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்றால், அவர் தன் வாழ்வின் மீதான "தன்னம்பிக்கை" ஒன்றே காரணமாக இருந்திருக்கிறது...
அந்த தன்னம்பிக்கை மனிதனின் கதைதான் இந்தப் புத்தகம்.
முதலில் தான் ஒரு ஜெர்மானியர், பிறகுதான் தான் ஒரு யூதர் என்று எடி ஜேக்கூ தன்னைப் பற்றி எப்போதுமே கருதி வந்திருந்தார். ஆனால் அந்த எண்ணம், 1938 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், நாஜிப் படையினர் அவரை அடித்து உதைத்துக் கைது செய்து வதை முகாமுக்கு இழுத்துச் சென்றபோது முற்றிலுமாக மாறியது.
அதற்கடுத்த ஏழு ஆண்டுகள்,
கற்பனையில்கூட யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத கொடூரங்களை எடி நாள்தோறும் அனுபவித்தார்,
யூதர் என்ற காரணத்தால் பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டு, தன் அடையாளத்தை மறைத்து இயந்திரவியல் பொறியியலில் தொழிற்பயிற்சி பயின்றார் எடி. பள்ளி படிப்பு முடிந்தது, சொந்த ஊருக்கு திரும்பியதும் யூதர் என்று அடையாளம் காணப்பட்டு வதை முகாமுக்கு அடித்து இழுத்துச் செல்லப்படுகிறார். நேற்று வரை நண்பர்களாக, சக ஊழியர்களாக, பக்கத்து வீட்டுக்காரர்களாக இருந்தவர்கள் வெறுப்பை உமிழ்ந்ததைக் கண்டு அதிர்ச்சியாகிறார்.
"நாஜிகள் பலவீனமானவர்களாக இருந்தனர்.அவர்களின் பலவீனமே வெறுப்பாக மாறியது" என்று எடி கூறுகிறார்.
யூத இனத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக பச்சிளம் குழந்தைகளையும் தரையில் அடித்துக் கொன்றுவிட்டு தங்கள் வீடுகளுக்கு போய் நாஜிக்கள் தங்கள் குழந்தைகளோடு எப்படி மகிழ்வாக இருந்து விட முடிகிறது என்று வியக்கிறார் எடி.
யூதர்களை விஷவாயு அறைக்கு அனுப்பி கொலை செய்யும் நடைமுறை அந்நாட்களில் நாஜிக்களால் பின்பற்றப்பட்டது. தொழில் திறமையுள்ளவர் என்ற காரணத்தால் எடி ஒவ்வொரு முறையும் விடுவிக்கப்பட்டார். தான் கற்ற கல்வியின் முக்கியத்துவத்தை பின்னாட்களில் பல தருணங்களில் உணர்கிறார்.
ஏழு ஆண்டுகளுக்கு பின் நாஜிகளிடம் இருந்து மீண்டபோது இனி ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என்று சத்தியம் செய்தார்.
இந்த புத்தகத்தின் மூலம் எடி அவரது வலியை நம்முடன் பகிர்ந்து கொள்ளவில்லை. மாறாக அவரது நம்பிக்கையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். நம்முடைய கஷ்டங்களுக்கு யார் மீதும் பழி போடவேண்டியதில்லை. வாழ்க்கையை நேசித்தால் அது எளிதாக இருக்கும் என்பதே எடி நமக்கு இப்புத்தகத்தின் மூலம் சொல்ல வரும் செய்தி.
யூதர்களின் மீதான வெறுப்பு, யூதர் இன எதிர்ப்பு, பயம், பொறாமை போன்ற காரணங்களினால் இந்த உலகம் எதிர் கொண்ட ஆபத்தினை யாரும் மறந்துவிடக் கூடாது... மக்கள் ஒருவருக்கொருவர் அன்பாகவும், இரக்கமுள்ளவர்களாகவும், உதவி செய்துக் கொள்பவர்களாகவும் இன்றைய தலைமுறையை வளர்த்தெடுக்க வேண்டும், வளர வேண்டும்! என்பதற்காகவே தன்னுடைய வரலாற்றை எடுத்துக்கூறி இருப்பதாக சொல்கிறார்... வெறுப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்தினை இந்த தலைமுறையினர் உணர்ந்து கொள்வது அவசியம் என்கிறார்...
ஹிட்லர் என்ற கொடூரனின் நாஜிச நடவடிக்கையால் 60 இலட்சம் உயிர்கள் காவு வாங்கப்பட்டன.
யூதர்கள் மட்டுமல்ல அகதிகள், பொதுவுடமைவாதிகள், மாற்றுத்திறனாளிகள், கலைஞர்கள் மருத்துவர்கள் என எத்தனையோ பேர் அடக்கம்.
ஆனால் இத்தனை அடக்குமுறைகளை எதிர்கொண்ட ஒரு சமூகம் தன் கையில் அதிகாரம் கிடைக்கும் பொழுது அதையே திருப்பி மற்றவர்களுக்கு அதை விட வேகமாக செய்யும் என்பதையும் சமகாலம் நம் முன்னே காட்டிக் கொண்டிருப்பது வேதனையான உண்மை.
அனைத்தையும் கடந்து,
வாழ்வினை மேம்படுத்துவதற்கான ஏதாவது ஒரு பணியினை செய்து கொண்டே இருப்போம்.. பிடித்த வேலையோ பிடிக்காத ஒன்றோ நாம் இவ்வுலகத்திற்கான சிறிய பங்களிப்பை வழங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்கிறார் எடி...
வதை முகாமில் அத்தனை இன்னல்களை அனுபவித்த பிறகு வெளியேறிய எடி மீதம் இருக்கும் தன் வாழ்வின் நாட்கள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பது என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டது எவ்வளவு வலுவானது ஒரு தன்னம்பிக்கையை தருகிறது வாசகர்களுக்கு!
உங்களுடைய துரதிர்ஷ்டங்களுக்கு பிறர்மீது பழி போடாதீர்கள்.. வாழ்க்கை எளிதானது என்று எவரும் கூறவில்லை. ஆனால் நீங்கள் அதை நேசித்தால் அது எளிதானதாக இருக்கும்..உங்களுடைய வாழ்க்கையை வெறுத்தால் வாழ்வது சாத்தியமற்றதாக ஆகிவிடும்...
அந்த வகையில் நாஜிக்களிடமிருந்து தப்பி உயிர் பிழைத்த எடி ஆஸ்திரேலியாவுக்கு குடி பெயர்கிறார். அங்கு ஆஸ்திரேலியா அரசின் உயரிய விருதுகளை பெற்று சிறந்த குடிமகனாக நூறாண்டு காலம் வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
மதிப்பிற்குரிய நண்பர்களே... நமக்கு இந்த வாழ்வில் கிடைத்துள்ள ஒவ்வொரு சுவாசமும் ஒரு பரிசு. நீங்கள் அனுமதித்தால் வாழ்க்கை அழகானதாக இருக்கும். மகிழ்ச்சி என்பது உங்களுடைய கரங்களில்தான் இருக்கிறது. அது வானத்திலிருந்து குதிப்பதில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க மறக்காதீர்கள். மற்றவர்களை மகிழ்ச்சிபடுத்தவும் மறக்காதீர்கள். சாதி மதம் இனம் மொழி என எதன் பொருட்டும் வெறுப்பை விதைக்காதீர்கள்.
உங்களை இந்த உலகின் நண்பனாக ஆக்கிக் கொள்ளுங்கள். இதை நீங்கள் நம்முடைய புதிய நண்பன் எடிக்காக செய்யுங்கள்.
வாழ்வில் மிகவும் சோர்வுற்று இருக்கும் மனிதர்கள் இதுபோன்ற நம்பிக்கையூட்டக்கூடிய கதைகளைப் படிக்கும்போது தான் அனுபவிக்கும் கவலைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று எண்ணி ப்பூவென்று ஊதித்தள்ளிவிட்டு அடுத்து செய்யக்கூடிய வேலைகளின் நகர்வுகளில் ஈடுபட்டுவிடுவார்கள் என்பது நிச்சயம்!
வாழ்வின் இருண்ட காலங்களில் கூட மீண்டும் வந்து விட முடியும், அதன் பிறகு ஆனந்தமான ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை பெற அனைவரும் இந்த நூலை அவசியம் வாசியுங்கள்.
ok mara muyarchikkirom.
ReplyDeleteThank you.