தொல்லியல் நோக்கில் குருமன்ஸ் பழங்குடி - நூல் அறிமுகம்.
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் -22
நூல்: தொல்லியல் நோக்கில் குருமன்ஸ் பழங்குடி
நூலாசிரியர்: முனைவர் தி.சுப்பிரமணியன்
நூல் அறிமுகம்: ம.சிங்காரவேல்
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம் என பாட்டி சொன்ன கதையை நாம் நேரில் பார்க்கும் வாய்ப்பு நிஜமானால் எப்படி இருக்கும் என யோசித்தால்...
நிஜத்தை பார்க்க இந்த அருமையான புத்தகத்தை வாசிக்கலாம்.
தருமபுரி மாவட்டம் இந்திய வரலாற்றில் 4000 ஆண்டுகளாக நின்று நிலைப்பெற்று வருவது மட்டுமல்லாமல், தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் ஒவ்வொன்றிலும் நடுகல் வழிபாடு இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
ஒரு கேள்வி?
நாம் ஏன் நம்முடைய மூதாதையர்களை திருவிழா மற்றும் முக்கியமான நாட்களில் அவர்களுக்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபடுகிறோம்?
குலதெய்வம் எப்படி வந்தது? நமக்கென குலதெய்வம் ஏன் இருக்கின்றது?
நாம் ஏன் கிராமங்களில் திருவிழாக்களை கொண்டாடுகிறோம்?
அதன் பண்பாடு இன்றளவும் என் தொடர்கிறது?
இனக்குழு சமுதாயம் எப்படி இம்மண்ணில் இன்னும் உயிர்ப்புடன் தங்களின் பண்பாட்டுக் கூறுகளை கைக்கொள்கின்கின்றன - என்பதையும் தருமபுரி மாவட்டத்தில் சங்க காலம் தொட்டு இக்காலம் வரை உள்ள வரலாற்றினை கள ஆய்வு,
தொல்லியல் ஆய்வு மற்றும் சங்க இலக்கிய பாடலான அகநானூற்று பாடல் வழி இம்மண்ணின் 4000 ஆண்டு பழமையான வரலாற்றினை மிகச் சிறப்பான தன்னுடைய தொல்லியல் ஆய்வுமுறைமை மற்றும் இன வரவியல் மானுடவியல் நோக்கில் ஆவணப்படுத்தி இருக்கிறார் முனைவர் தி சுப்பிரமணியன் ஐயா அவர்கள்.
இந்நூலை வாசிப்பதன் மூலம் கர்நாடகம் தொடங்கி தருமபுரியில் இருந்து மீண்டும் உதகமண்டலம் வழியாக கர்நாடக வரை ஆதி இனக்குழுக்கள் நாடோடிகளாக இம் மண்ணில் தாங்கள் கற்றதை பெற்றதை இம்மண்ணில், வாழும் வரலாறாக, விட்டு சென்றிருக்கிறார்கள் என அறிந்து நமது அறிவெல்லையை விரிவாக்கிக் கொள்ளலாம்.
இம்மண்ணில் வாழ்ந்த பழங்குடி மக்களின் சமுதாய அமைப்பு ,கால்நடை வளர்ப்பு, தாய் வழி சமுதாயம், குலக்குறி வழிபாடு, நிர்வாக அமைப்பு, போன்றவற்றையெல்லாம் மிக சிறப்பாக ஆவணப்படுத்தி இருக்கிறார்.
தாய் மொழியின் மீதும் , இம்மண்ணின் வரலாற்றின் மீதும் நாம் எப்படி உருவானோம்? ஏன் இங்கு இருக்கிறோம்? என்பது குறித்து அறிய தெரிய விரும்புகிற வாசகர்கள் கட்டாயம் தங்களின் இல்லத்தில் வைத்திருக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு நூல் இது.
Comments
Post a Comment