தோணி (சிறுகதைகள்) - நூல் அறிமுகம்.
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் - 20.
நாள்: 20.09.2024
நூல் : தோணி (சிறுகதைகள்)
நூலாசிரியர் : பொறி. சிவசக்திவேல்
நூல் அறிமுகம் : தமிழ்மகன் ப.இளங்கோ, ஆசிரியர்.
வெளியீடு : கவித்தேடல் பதிப்பகம்
பக்கங்கள் : 265
விலை : உரூபாய் 180 /-
தோணி என்ற இந்த நூல் 9 சிறுகதைகளைக் கொண்ட ஒரு நூலாகும். நூலாசிரியர் எழுதியிருக்கும் ஒவ்வொரு கதையிலும் கதைக் களமானது வெவ்வேறாக இருப்பதால் அவர்கள் வாழ்கின்ற வட்டார மொழிகளை மிக நேர்த்தியாகக் கையாண்டு இருக்கிறார். அதே போல வட்டார வழக்கு மொழிகளையும் அவ்வப்போது இணைத்துக் கொண்டாலும் பொது மொழியிலேயே கதைப் போக்கினைக் கொண்டு போகிறார். இது நூலினை வாசிப்போருக்கு எளிதாகவும், சலிப்பின்றியும் இருக்கின்ற ஒரு எழுத்து நடையாக அமைந்துள்ளமை சிறப்பாகும்.
தோணி எனும் கதையிலே பிச்சமுத்து அங்கம்மாள் என்ற தம்பதியினரின் எளிய வாழ்க்கையை, அவர்களது உயரிய அன்பை, ஒருவர் மீது ஒருவர் கொண்ட ஈடில்லா அக்கறையை சிறப்பாக எடுத்துச் சொல்கிறார். தனது மனைவி தங்கம்மாள் சொல்வதை ஒரு வார்த்தையும் தட்டாத அன்பு மிகுந்த கணவனாக பிச்சமுத்து இருப்பதும், அவர்களுக்குள் இருக்கும் பிணைப்பும் வாசகனை வியக்க வைப்பதாக இருக்கிறது. இப்படி மனைவியைச் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்த பிச்சமுத்து மனைவி தங்கம்மாவின் மறைவையடுத்து அவர் படுகின்ற வேதனைகள், அவரது மனம் படும்பாடு, படிப்பவருடைய நெஞ்சை கனத்து போகச் செய்கிறது.
துணையை இழந்த ஒரு மனிதன் படும் வேதனையின் அதிகபட்ச அளவையும், அவரது உணர்வுகளையும் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. பெற்றோர் மீது அன்பும் அக்கறையும் இல்லாத பிள்ளைகளைப் பற்றியும், மருமகள்கள் செய்கின்ற அவமரியாதை பற்றியும் உள்ளது உள்ளபடி எடுத்துரைக்கிறார் கதையாசிரியர். சுயமரியாதை உணர்வு மேலோங்க இல்லத்தை விட்டுச் சென்ற இவர் உழைப்பின் மீது மிகவும் நாட்டம் கொண்டவர் ஆவார். நம்மாழ்வார் பேசுகின்ற பேச்சுக்களைக் கேட்டு இயற்கை ஆர்வலராக மாறி அவர் சென்றடைந்த கிராமத்திற்கு மிகப்பெரிய சேவை செய்பவராகவும், அந்த கிராமத்து சூழ்நிலையையே மாற்றி அமைக்கக்கூடியவராகவும் மாறிவிடுகிறார். இயற்கை ஆர்வலர்கள் போற்றக்கூடிய ஒரு அற்புதமான கதையாக இதை வடிவமைத்திருக்கிறார்.
அதே போல, 'அப்பாடக்கர் பேண்ட் பார்ட்டி' என்ற ஒரு கதையிலே கிராமத்தில் நடக்கும் சிறு சிறு கலாட்டாக்கள், ஒருவர் மாற்றி ஒருவருக்கு வைக்கும் புனைப்பெயர்கள் பற்றியும், வாழ்வின் போக்கிலே நடந்திடும் நகைச்சுவை மிகு நிகழ்வுகள் பற்றியும் என நகைச்சுவை நிறைந்த கதையாக இது அமைந்திருக்கிறது. படிக்காத குறும்புக்காரச் சிறுவர்கள் செய்யும் அட்டகாசங்கள், பெரியவர்களை மதித்திடாமல் அவர்கள் செய்யும் குறும்புகள், குடித்துவிட்டு தனது மனைவிகளிடம் அடிவாங்கி வடிவேல் போல கலாட்டா செய்யும் குடிமக்கள் என அத்தனையையும் எடுத்துச் சொல்லிய பாங்கு சிறப்பினும் சிறப்பு. எல்லா கிராமங்களிலும் நடக்கக் கூடிய குடிகாரர்களின் வாழ்வுதனை வெளிப்படையாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
அடுத்த கதை 'சேனாதிபதி அபராஜிதன்' எனும் வரலாற்று கதையாகும், வரலாற்று களத்தையும் விட்டு வைக்கக் கூடாது என்ற நூலாசிரியரின் வேட்கை நமக்கு புரிகிறது. வெற்றி, தோல்வி யாருக்கானாலும் மன்னர்களின் மண்ணாசையால் பலியாகிக் கொண்டிருப்பது சாதாரண வீரர்கள் தானே என்ற கூர்நோக்கோடு துவங்கிய கதையிது. அபராஜிதன் என்ற வீரனின் பாசம், வெற்றி, வீரமரணம் என்று அனைத்தையும் தெளிவாகக் காட்டியுள்ளார். மரணத்தின் போதும் மகள், மனைவி நினைவு வருவது யதார்த்தம் என்பதை உணர்த்தக்கூடிய ஒரு சிறந்த கதைக்களம் இது. மகள் பாசத்தால் ஈர்க்கப்பட்ட அபராஜிதனை , அளப்பரிய வீர உணர்ச்சி கொண்டவனை வருணித்து எழுதிய வரிகள் தனிமுத்திரை பதித்துள்ளது.
'இன்னும் ஒருத்தி' என்ற கதையிலே நூலாசிரியர் சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டுகின்றார். இந்தக் கதையில் கள்ளம் கபடம் இல்லாத கிராமத்துப் பெண் தன்னைப் பற்றியும், தனது அழகைப் பற்றியும் கர்வம் கொள்வதையும் அதனால் ஏற்படும் பல அவலங்களையும் விளக்கும் கதையாகும். தந்தை நிலையில் இருக்க வேண்டிய ஆசான்கள் சிலர் செய்யும் அநியாயமான தவறுகளும் அதில் பலியாகும் விவரம் இல்லாத சிறுமிகளைப் பற்றியும் சமூக அக்கறையோடு இந்த கதையை படைத்திருக்கிறார். குழந்தைக்கு ஏங்கும் பெண், மாமுல் வாங்கும் காவலர், பெண்களைத் தேடுகின்ற கவிஞன், மனித நேயமிக்க திருநங்கை என அத்தனை பேரின் குணங்களையும் எடுத்துக்காட்டி உலக நடப்பை வெளிப்படுத்தக் கூடிய சமூக சிந்தனை மிகுந்த கதையாக இது அமைந்திருக்கிறது.
கிராமத்தில் வாழும் குடும்பங்களில் ஏற்படுகின்ற குழப்பங்களை எடுத்துச் சொல்லும் விதமாக 'காசி' என்ற கதையிலே இல்லத்தை விட்டு எங்கோ செல்லும் குடும்பத் தலைவர்கள் கிராமம், நகரம் என்று பல இடங்களிலே பிழைப்பைத் தேடி தேடி அலைந்து அனுபவித்த வேதனைகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது. பாசம், நேசம், பக்தி, முக்தியென வாழ்வின் பல பரிணாமங்களையும் காட்டுகின்ற கதையாக இது அமைந்திருக்கிறது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சுற்றி வாழுகின்ற மனிதர்களைப் பற்றிய ஒரு கதையாக 'ஒரு ஆடோட்டியின் கதை' அமைந்திருக்கிறது. இது நூலாசிரியரின் சொந்த மண் சார்ந்த படைப்பு என்றால் மிகையில்லை. காவிரியாற்றின் அழகையும் கட்டுச் சோறோடு ஆண்டுதோறும் மாதேஸ்வரன் கோயிலுக்கு செல்லக்கூடிய மனிதர்களைப் பற்றியும், நூற்றுக் கணக்கானோர் மொட்டைகளாக திரும்புவர் என்ற தமது இளமை நினைவுகளையும் பதிவிட்டிருக்கின்றார் . நடக்க மறந்து பரிசலில் பயணிக்கும் இன்றைய வாழ்வு முறையையும் விளக்கியுள்ளார்.
நல்ல உழைப்பாளியின் மகன் உழைக்காமல் வீணே தவறான பாதையில் வழிமாறிய கிராமத்து இளைஞர்களின் வாழ்வையும் தெளிவாக படம் பிடித்துக்காட்டுகிறது இக்கதை. கிராமங்களில் சூதும், குடியும், கூத்தியுமாக பழகியவன் எல்லா தவறுகளுக்கும் ஆளாகி விடுகிறான் என்பதை கதை ஊடாக நமக்குப் புரிய வைக்கின்றார். காட்டு வளம் மிகுந்த கிராமங்கள், கர்நாடகாவின் பகுதிகள் என பலவற்றை விளக்கும் நூலாசிரியர் வீரப்பன் பற்றி போகிற போக்கில் அவன் கொலைகாரன் அல்ல என்பதை பதிவிடுவது இம்மாவட்ட மக்களின் எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. இப்படி அவரது என்ன ஓட்டங்களை தருமபுரி மாவட்டத்தின் எண்ணங்களை, வாழ்வியலை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பது சிறப்பாகும்.
பொதுவாக இவரது கதையிலே வரக்கூடிய கதை மாந்தர்கள், கற்பனை பாத்திரங்கள் அல்ல வாழ்வில் உண்மையாக வாழக்கூடிய மனிதர்களைப் பற்றியது என்பதே உண்மை. மனிதர்களிடையே இருக்கக்கூடிய அன்பு, பாசம், பற்று, சோம்பல், வேடம், துரோகம் என அத்தனை தளங்களிலும் பயணித்து நம்மை நேரடியாக கதைக்களத்தோடு ஒன்றிணைத்து விடுகிறார். படிப்போரையும் கதைபாத்திரமாகவே மாற்றக்கூடிய ஆற்றல் படைத்த நூலாசிரியரின் படைப்புகள் மிகவும் பாராட்டுக்குரிய ஒன்றாகும்.
நூலாசிரியரின் கதைகள் ஒவ்வொன்றும் கிராமங்களில் நடக்கக்கூடிய வாழ்வினை, வாழ்வின் சிந்தனைகளை, மனிதர்களின் சிந்தனைப் போக்குகளை படம் பிடித்துக் காட்டும் கலைப்படங்கள் போலத்தான் படைக்கப்பட்டிருக்கின்றன. வாசகருக்கு கதையை மட்டுமல்லாமல் கதைக் களத்தையும் கண்முன்னே கொண்டு வந்து நம்மை முழுதாகக் கதையோடு கலந்துபோகச் செய்யக்கூடிய சிறந்த எழுத்து நடையினை ஆசிரியர் கைவரப் பெற்றிருக்கிறார்.
நூலினை வாங்கி படியுங்கள்! சுவையுங்கள்! பகிருங்கள்.!
Comments
Post a Comment