என்ன பேசுவது? எப்படிப் பேசுவது? - நூல் அறிமுகம்.
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம்-18
நாள் : 18.09.24
நூல் : என்ன பேசுவது? எப்படிப் பேசுவது?
நூலாசிரியர் : முதுமுனைவர் இறையன்பு.
நூல் அறிமுகம்: தகடூர். ப. அறிவொளி
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பக்கங்கள் : 818. விலை உரூபாய்.1000/
***************
மனிதன் ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்திருக்கலாம். அவை அனைத்திற்கும் அடிப்படையான கண்டுபிடிப்பு மொழி. இன்னும் சொல்லப்போனால் எல்லா கண்டுபிடிப்புகளை விடவும் முதன்மையான கண்டுபிடிப்பும், முக்கியமான கண்டுபிடிப்பும் மொழியே.
மொழியின் வழியாகவே அறிவும் சிந்தனையும் அனுபவங்களும் காலந்தோறும் கடத்தி வரப்படுகிறது. இந்த உலகத்தின் தலைமைப் பொறுப்புக்கு மனிதன் வருவதற்கு காரணம் அவனுடைய கண்டுபிடிப்பான மொழியே.
நமக்குத் தோன்றும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், பதிவு செய்யவும், மற்றவருடைய எண்ணங்களைத் தெரிந்து கொள்ளவும் உதவுகின்ற மாபெரும் சாதனம் மொழி.
ஒருவனை வாழ்விக்கவும் தாழ்விக்கவும் வல்லமை படைத்தது மொழியே. அந்த மொழியின் வழியான பேச்சினை எப்படிப் பேசுவது? எங்கே- யாரிடத்தில் எவ்வாறு பேசுவது? என்பதை பற்றி ஆதி முதல் ஏறத்தாழ அந்தம் வரை அனைத்தையும் நம்மை ஆற்றுப்படுத்துவதற்காக முதுமுனைவர் இறையன்பு அவர்கள் வழங்கி உள்ள அற்புதமான நூலே என்ன பேசுவது? எப்படிப் பேசுவது? என்ற இந்த நூல்.
****************
உறவினர்களோடு பேசுவது எப்படி?
உடன் பிறந்தவர்களோடு பேசுவது எப்படி?
நண்பர்களோடு பேசுவது எப்படி?
அலுவலகத்தில் பேசுவது எப்படி?
பணியாளராக பேசுவது எப்படி?
அதிகாரியாக பேசுவது எப்படி?
கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகப் பேசுவது எப்படி?
பயிற்சி வழங்கும் நெறியாளராக பேசுவது எப்படி?
முகம் காட்டாமல் வானொலியில் பேசுவது எப்படி?
நேரடியாகத் தோன்றி தெரியும்போது பேசுவது எப்படி?
அரசியல்வாதியாக பேசுவது எப்படி?
ஆன்மீகவாதியாக பேசுவது எப்படி?
எடுத்துக் கொண்ட தலைப்பில் இலக்கிய சொற்பொழிவை ஆற்றுவது எப்படி?
கருத்தரங்கில் நம்முடைய கருதுகோள்களை நிறுவும் வகையில் பேசுவது எப்படி?
என்றவாறு எல்லா வகையான பேச்சுத் தளங்களிலும் ஒருவர் சிறந்த பேச்சாளராக விளங்குவதற்கு உறுதுணையாக இந்நூல் அமைந்துள்ளது.
எதையெல்லாம் பேச வேண்டும்;
அதை எப்படி பேச வேண்டும்?
அதை யாரிடத்தில் பேச வேண்டும்? என்பதைப் பற்றி மட்டும் கூறாமல்
எதையெல்லாம் பேசக்கூடாது? எந்த இடத்தில் - எவரிடத்தில் - எவ்வாறெல்லாம் பேசக்கூடாது என்பதையும் இந்நூல் தெளிவுபடுத்துகிறது.
தொடக்க நிலையிலே இருக்கும் பேச்சாளர் ஒருவரை கையைப்பிடித்து அடைத்துச் செல்லும் வழிகாட்டியாக அமைந்துள்ள இந்நூல் ஏற்கனவே பேச்சாளர்களாக இருப்பவர்களுக்கு அவர்கள் திறமையை மேலும் மெருகேற்றி, பட்டைதீட்டிக்கொள்ளும் கட்டளைக்கல்லாகவும் விளங்குகிறது.
***************
மலையைக் குடைந்து சுரங்கம் வெட்டி மண்ணை எடுத்து சலித்துப் பார்த்து தங்கம் இருக்கிறதா என்று தேடுவதைப் போல ஒரு நூலிலே பயன் தரக்கூடிய செய்திகள் ஏதும் இருக்கின்றனவா என்ற சல்லடையிடும் நிலையிலே பல நூல்கள் இருக்கும்.
ஆனால், முதுமுனைவர் இறையன்பு அவர்களின் இந்நூலிலோ தோண்டத் தோண்ட கருத்து வைரங்கள்; படிக்கப் படிக்க தகவல் தங்கங்கள்; சிந்திக்க சிந்திக்க ஒளி வீசும் நவமணிகள் என்றவாறு பெருநிதியின் குவியலே அமைந்துள்ளது.
இறையன்பு அவர்கள் பத்திகளை நிரப்புவதற்காக வார்த்தைகளை பயன்படுத்துபவர் அல்லர்.
பக்கங்களை நிரப்புவதற்காக தேவையற்ற வர்ணனைகளை செய்பவரும் அல்லர்.
அவருடைய சொற்பொழிவுகளில் - உரைவீச்சுகளில் எவ்வாறு "பயனில சொல்லாமை" உள்ளதோ அதைப் போலவே அவருடைய நூல்களிலும் "பயனில எழுதாமை" கடைபிடிக்கப்பட்டிருக்கும்.
***************
திருக்குறளின் முப்பாலை போல இந்த நூலும்
1) தகவல் பரிமாற்ற வரலாறு
2) தகவல் தொடர்பில் சிறக்க
3) மேடையில் முழங்கு
என்று மூன்று பாகங்களாக அமைந்துள்ளது.
அது மட்டுமல்ல. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களைப் போல இந்த நூலிலும் சரியாக 133 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
மொழியின் தோற்றம், மொழியின் பரிணாம வளர்ச்சி, மொழியின் செயல்பாடு, தாய்மொழியின் தனித்துவம், பேச்சு மொழியிலிருந்து எழுத்து மொழி, எழுத்து மொழியில் இருந்து அச்சுக்கலை, குறியீடுகளில் அமைந்த மொழிகள், காலந்தோறும் தகவல் பரிமாற்றம் வளர்ந்த விதம், தமிழ்நாட்டு இலக்கியங்கள் - வெளிநாட்டு இலக்கியங்களில் அமைந்துள்ள சிறந்த தகவல் தொடர்பு நுட்பங்கள், புகழ்பெற்ற சொற்பொழிவுகள், வரலாற்றில் நிலைத்து நிற்கும் சொற்பொழிவுகள் ஆகிய அனைத்தும் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன.
தகவல் பரிமாற்றத்தில் அமைந்துள்ள கூறுகள், தனிப்பட்ட நபர்களிடையே அல்லது சிறு குழுக்களுக்கு இடையே சிறப்பான உரையாடல், பேசுவதை நுட்பமாக கவனித்தல், நேர்முகத் தேர்வில் பேசும் தன்மை, அலுவலகக் கூட்டங்களில் பேசுகின்ற நிலை, விற்பனை துறையில் வியாபார நிலையில் பேசுகின்ற தன்மை, தலைமை பொறுப்பில் இருப்பவர் பேச வேண்டிய பாங்கு, கலந்தாலோசனை கூறுபவர் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், உடல் மொழி இலக்கணம் ஆகியவை இரண்டாவது பாகத்தில் அமைந்துள்ளன.
சிறந்த சொற்பொழிவுக்கான நற்கூறுகள், மேடைப் பேச்சில் நகைச்சுவைக்கான முக்கிய இடம், பல்வேறு வகையான கதைகளை - சம்பவங்களை பொருத்தமான இடத்தில் சுருக்கமாக கூறுதல், மேடை சொற்பொழிவில் எந்த பொறுப்பில் எவ்வாறு பேச வேண்டுமென்ற தன்மை, சிறந்த மேடைப் பேச்சாளராக விளங்குவதற்கான முன்னேற்பாட்டு நடைமுறைகள், பேசுகின்ற நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய கண்ணியங்கள், பேச்சு வெற்றியடைய காரணிகள், தோல்வி அடையும் இடங்கள் ஆகியவை மூன்றாவது பாகத்தில் அமைந்துள்ளன.
எண்ணூறு பக்கங்களில் பன்னூறு செய்திகள் - படிக்கும் பொழுது சுவையைக் கூட்டுவதற்காக ஆங்காங்கே பெட்டிச் செய்திகள் - முக்கிய குறிப்புகளை சுட்டிக் காட்டுவதற்கு வண்ண படங்கள் - படிப்பவர்க்கு அயர்ச்சியையும் மயக்கத்தையும் ஏற்படுத்தாத பொருத்தமான அச்செழுத்தும் நூற்கட்டமைப்பும் என்றவாறு சிறந்த முறையில் இந்நூல் வெளிவந்துள்ளது.
ஒவ்வொரு கட்டுரையும் அதன் உள்ளடக்கத்தை புலப்படுத்தும் மிகச் சிறந்த பொன்மொழி ஒன்றுடன் தொடங்குவது அருமை.
திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள், நீதி நூல்கள் போன்ற இலக்கியங்களுக்குள்ளே நுழைந்து மறைந்துள்ள நுட்பங்களை எடுத்துக்காட்டும் தன்மை போற்றுதலுக்குரியது.
வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், தத்துவம், அரசியல் என்றவாறு பல்வேறு தளங்களில் உள்ள பயன் தரும் செய்திகள் தேவையான அளவில் உரிய இடங்களில் பயன்படுத்தியிருப்பதும் சிறப்பான தன்மையாகும்.
கேட்பவருக்கு குழப்பத்தையும் மயக்கத்தையும் ஏற்படுத்துகின்ற பேச்சினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கும், சொல்பனவற்றைத் தெளிவாக புரிந்து கொள்ளாததால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கும் சான்றுகள் பல இந்நூலிலே காட்டப்பட்டுள்ளன.
******************
# சிலப்பதிகாரத்தில் மாதவி கோவலனுக்கு ஒரு கடிதம் எழுதி கோசிகனிடம் கொடுத்து அனுப்பினாள். அந்தக் கடிதத்தைப் படித்த கோவலனோ அதை அப்படியே தன்னுடைய பெற்றோர்களிடம் கொண்டுபோய் சேர்க்குமாறு ஏன் கூறினான்?
# கம்பன் படைத்த ராமன் தலைமைப்பண்புகள் மிகுந்த தலைவனாக எப்படி மிளிர்ந்திருந்தான்?
# உதகையில் நடைபெற்ற சுயமரியாதை பிரச்சாரக் கூட்டத்தில் "கடவுள் இல்லை" என்ற தலைப்பில் இரண்டு மணி நேரம் பேசிய ஜீவாவின் பேச்சைக் கேட்டு கல்கி எழுதிய ஒருவரி என்ன?
# சார்பியல் கோட்பாட்டை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விளக்கியபோது அழகான பெண் அங்கே எதற்கு வந்தாள்?
# கண்ணதாசன் மாதிரி உங்களால் கவியரசு ஆக முடியாது என்று தன்னிடம் கூறிய நபருக்கு வாலி கூறிய அழகான விடை என்ன?
# என்ன வரைந்து கொண்டிருக்கிறாய்? கடவுளின் படத்தை! ஆனால் கடவுள் எப்படி இருப்பார் என்று யாருக்குமே தெரியாதே? என்று கூறிய ஆசிரியருக்கு சிறுமி தந்த பதில் என்ன?
# கேரளாவில் மல நாடா என்ற ஊரில் பொதுமக்கள் சேர்ந்து துரியோதனனுக்கு ஏன் கோவில் கட்டி கொண்டாடுகின்றனர்?
# தொழில் முறை பேச்சாளர்களுக்கும் நட்சத்திர பேச்சாளர்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
இவ்வாறு எண்ணற்ற வினாக்களுக்கு விடை வேண்டுமா?
இந்நூலினைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
நூல் அறிமுகம் அருமை. புத்தகத்தை உடன் படிக்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டும் வகையில் நூலின் சாராம்சம் பகுதி வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது நூல் அறிமுகம் செய்தவரின் வாசிப்பு அனுபவங்களை காட்டுகிறது. மேடை பேச்சாளர்கள் மட்டுமல்லாது அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. நூல் அறிமுகம் செய்பவர்கள் இது போன்று விரிவாக அறிமுகம் செய்தால் சிறப்பாக இருக்கும்.
ReplyDelete