தமிழ் இனிது - நூல் அறிமுகம்.

 தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம்- 15
 நாள்: 15 .9 .24 

நூல்: தமிழ் இனிது
 நூலாசிரியர் : நா. முத்து நிலவன்
 நூல் அறிமுகம்:  செ.தமிழ் ராஜ்
 (செம்மலர் மாத இதழ்) 
வெளியீடு: தி இந்து தமிழ் திசை
விலை: ரூ 160.

   நமது தாய்மொழி தமிழை உயர்த்தனிச் செம்மொழி என்கிறோம். மரபார்ந்த தமிழ் மொழியில் வளமார்ந்த இலக்கண இலக்கிய நூல்கள் ஏராளம் இருப்பினும் எளிய முறையில் கற்றுக்கொள்ள ஓர் இலக்கணம் சார்ந்த நூல் இல்லை என்ற குறை இந்நூலால் தீர்ந்தது என்று நம்பிக்கையோடு சொல்லலாம். 

     நவீன உலகம் தமிழை மெல்ல அல்ல விரைவாகவே கை கழுவிக் கொண்டிருக்கையில் எழுதவோ பேசவோ திண்டாட்டமாய் இருக்கையில் இலக்கணத்திற்கு என்ன இடம் இருக்கப் போகின்றது? கல்வியறிவற்ற ஒரு கிராமத்து பெண் தன்னுடைய உரையாடலில் 60 விழுக்காடு ஆங்கில சொற்கள் கலந்து பேசுகிறார் என்பது ஒரு புள்ளியியல் தகவல். உயர்கல்வி கற்றவர் கூட பிழையின்றி எழுதவும் வாசிக்கவும் தடுமாறிக் கொண்டிருக்கும் அவலமான தமிழ்ச் சூழலில் தமிழ் மொழியின் இலக்கண விளக்கேந்தி எளிய முறையில் சரியாக சொல்லிக் கொடுத்தால் யாவரும் கற்றுக்கொண்டு இனிது தமிழ் என்று சுவைக்கலாம் என்கிறார் இந்நூல் ஆசிரியர் முத்து நிலவன். 

   சமகாலத்திய இளைஞர்களை நல்ல தமிழ் கற்க வைக்கும் அரிய முயற்சி இது. கடினமான சொற்கள் இல்லை, பண்டிதத்தனமான சொற்பிரயோகம் இல்லை.  நவீன உலகில் புழக்கத்தில் உள்ள சொற்களை அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களி லிருந்தே எடுத்து கிளிப்பிள்ளைக்கு சொல்வதைப் போல எளிய முறையில் சொல்லியுள்ளார். சமூக வலைதளச் சொற்கள், திரைப்பட தலைப்புகள்,  பாடல்கள் என கண்ணில் படும் எளிய ஆனால் வலிமையாக மனதில் உட்காரும் உதாரணங்கள் அளித்துள்ளார். 

    கடினமான இலக்கணக் கட்டுரைகளில் கூட மெல்லிய நகைச்சுவை தூவிச்சென்றுள்ளார் இது அவரது எழுத்தாற்றலை,  செய் நேர்த்தியைக் காட்டுகிறது. நாம் பயன்படுத்தும் சொற்களை எடுத்து வைத்து அவற்றில் எது சரி எது தவறு என்று தக்க உதாரணங்களுடன் நிறுவி தவறான சொற்களை கைகழுவச் செய்கிறார். 

    அய்யா, ஐயா சொற்களில் எதைப் பயன்படுத்துவது,  பாகற்காய், ஊழல்  சொற்களுக்கான விளக்கம், திருக்குறளில் தமிழ் என்ற சொல் இடம் பெறவில்லை என்பது போலவே,  ஔ என்ற எழுத்தும் இல்லை என்பதை போன்ற நிறைய தகவல்கள் நூல் முழுவதும் உள்ளன. எழுத்துப் பிழைகளைத் திருத்த நீச்சல்காரன் எனும் இணையதள முகவரியையும் இருக்கிறார். 

    தமிழன் அறிவியல் ரீதியாக வளர வேண்டிய தேவை இருப்பதைச் சுட்டிக் காண்பிக்கிறார். தொல்காப்பியர் கால இலக்கணம் சமகால தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட வேண்டும்,  அது குறித்த அறிஞர் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறார். தமிழைச் சரியாக எழுத,  பேச வேண்டும் என்ற எண்ணுவோர் வாங்கி வாசிக்க வேண்டிய நூல். தமிழ் கூறு நல்லுலகில் சமகாலத்தில் இலக்கணத்தை இவ்வளவு அழகாக யாவருக்கும் புரியும் வண்ணம் எடுத்துரைத்த ஆசிரியர் முத்து நிலவன் அவர்களை அவர் சுட்டிக்காட்டிய சொல்லெடுத்து உளமார வாழ்த்துவோம்.

Comments

Popular posts from this blog

Smoke and Ashes - நூல் அறிமுகம்.

உணவு சுற்றுலா - நூல் அறிமுகம்.

கற்பது உலகளவு - நூல் அறிமுகம்.