அறியப்படாத தமிழகம் - நூல் அறிமுகம்.

தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் -14
நாள்: 14.09.24
நூலின் பெயர்: அறியப்படாத தமிழகம்
எழுதியவர்: தொ. பரமசிவன்
அறிமுகம்: நாகா
(நூல் வழிச்சாலை)

கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்நாட்டிலுள்ள அதிகமான ஊர்கள்/இடங்களை சுற்றி வந்ததின் விளைவு தொடர்ந்து தமிழ்நாடு குறித்த பல புத்தகங்களை நாம் நமது நூல் வழிச்சாலையில் வாசித்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழகம் - ஊரும் பேரும், தமிழ்நாட்டின் பெரும் புள்ளிகள், தமிழக கடற்கரைகள் குறித்த நீர் நிலம் வனம் கடல் போன்றவற்றை வாசித்த அனுபவம் நண்பர்களான உங்களின் நினைவில் நிற்கும் என்று நம்புகிறேன். 

பெருமை மிகு தமிழ்நாடு
தமிழக மண்ணை எவ்வளவு போற்றினாலும் தகும்!
தமிழகத்தை நாம் முழுமையாக அறிந்திருக்கிறோமா என்று கேள்வி எழுப்பினால், இன்னமும் அறிந்து கொள்ள வேண்டியது கடலளவு என்பதை உறுதியாக கூறலாம்.

அந்த வரிசையில் தமிழக வேர்களைப் பற்றிய இந்த நூல் மறைந்த தொ. பரமசிவன் அவர்கள் எழுதிய 'அறியப்படாத தமிழகம்'. 

இது பழைமை பாராட்டும் நூலன்று!
இளைஞர்களுக்கு புதிய வாசல்களை திறக்கும் ஓர் வழிகாட்டி!

இந்நூல் குறித்து தமிழ் நல்லுலகில் பெரிதும் பேசப்பட்டது. எழுதிய தொ. பரமசிவன் அவர்கள் தமிழறிஞர். மானுடவியல் ஆய்வாளர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார்.

தமிழ்ப் பண்பாடு குறித்து பல்வேறு தகவல்களை ஆய்வறிந்து எழுதியுள்ளார்.

இவர் முனைவர் பட்டம் பெற செய்த ஆய்வு  'அழகர் கோயில்' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்து பெரும் புகழ் பெற்றது. 

இன்றைய பல தமிழ் எழுத்தாளர்கள் பலர் இவரை போற்றியும் உள்ளனர். அதேசமயம், இவர் குறிப்பிடும் சில தகவல்களில் உறுதியான ஆதாரங்கள் குறித்த தகவல்கள் இல்லை என்ற  விமர்சனத்துக்கும் உள்ளானவர். 

நம்மைப் பொறுத்தவரையில் இவர் கூறியிருக்கும் கருத்துக்கள் என்ன என்பதை அறிந்து கொள்வோம் என்பதே நமது பார்வையாக உள்ளது. 

பலரும் அறிந்திராத தமிழ் நாட்டின் பின்புலம் குறித்த தகவல்கள் இவரது கட்டுரைகளில் காணக்கிடைக்கிறது. பரந்த வாசிப்பும், ஆய்வும்,தான் கண்டும் கேட்டும் பெற்ற பட்டறிவே எனது நூல்கள் என்கிறார் ஆசிரியர் தொ.பரமசிவன்.

தமிழகத்தின் தென் மாவட்டக் காரரான இவர் நாட்டாரியல் குறித்த பல ஆய்வுகள் செய்து தமிழறிஞர்களிடையே பெரும் புகழை பெற்றவர்.

இந்த "அறியப்படாத தமிழகம்" என்ற நூலில் ஏழு பிரிவுகளாக தகவல்களை அடுக்குகிறார்.

தமிழ், வீடும் வாழ்வும், தைப்பூசம், பல்லாங்குழி, தமிழக பெளத்தம்: எச்சங்கள், பேச்சு வழக்கும் இலக்கண வழக்கும், கறுப்பு என்ற தலைப்புகளில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

'தமிழின் சிறப்பு':
தமிழ் என்ற சொல் தமிழர்க்கு இனிமையானது.

'இனிமையும் நீர் மையும் தமிழெனல் ஆகும்' என்று பிங்கல நிகண்டு கூறுகிறதாம்.
நற்றமிழ், அழகும், மென்மையும் கொண்டது.

நாட்டார் வழக்கில் தமிழ் என்பது "செம்மையாக பேசப்படும் மொழி" என்பதாம்.

தேவாரத்தில் தமிழ் என்றால் 'பாட்டு' என்ற பொருளில் குறிக்கிறது. 
திருப்பாவையை ஆண்டாள் 'தமிழ் மாலை' என்றே குறிப்பிடுகிறார்.

குழாயடி, கிணற்றடி என்பது போல  'தமிழடி' என்றால் ஊர் மன்றத்தை குறிக்கும்!.

தமிழ், தமிழன் என்ற சொற்கள் ஊர்களின் பெயராகவும், மனிதர்களின் பெயராகவும் தொன்றுதொட்டு வழங்கி வருகிறது என்பதை நாமறிவோம்.(உ-ம். தமிழன்பன், தமிழ்ச்செல்வன் இன்னபிற...)

'தண்ணீர்'

தமிழ்ச் சமூகத்தில் நீர் குறித்த நம்பிக்கைகள் மிகவும் அதிகம்.

'இனிமையும், நீர் மையும் தமிழ் எனல் ஆகும்' என்றனர் பெரியோர்!

நீர் என்பது வானத்திலிருந்து வருவதால் வள்ளுவர் அதை 'அமிழ்தம்' என்கிறார்.

நீர்நிலைகளுக்கு தமிழர் வழங்கிவந்த பெயர்கள் பல.

சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன நீர், தானே கசிந்த நிலங்கள்.

குட்டை மழைநீரின் சிறிய தேக்கமாகும்.

குளி(ர்)ப்பதற்கு ஏற்ற பயன்படும் நீர்நிலை 'குளம்' எனப்படும்.

உண்பதற்கு பயன்படும் நீர்நிலை 'ஊருணி'.

ஏர் தொழிலுக்கு (விவசாயத்துக்கு) பயன்படும் நீர்நிலை 'ஏரி' எனப்படும்.

மழைநீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை 'ஏந்தல்' என்றும் 
கண்ணாறுகளை உடையது 'கண்மாய்' எனவும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தார்கள் என்பதை வாசிக்கும்போது காரணத்தோடு எதற்கும் பெயரிடுவதில் வல்லவர்கள் தமிழர்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது!

ஏந்தல் என்ற பெயரோடு இணைந்த ஊர்களும் தமிழ்நாட்டில் உண்டு!

'நெல்லியின் மகிமை'

நீரின் சுவையை மேம்படுத்த நெல்லியினை ஒரு மருந்தாக பயன்படுத்தினர் தமிழர்கள்.

கிணற்று நீர் உவர்ப்பாக இருந்தால் அதனுள் நெல்லி மரத்தின் வேர்களை போட்டு வைப்பதும், ஊருணிக் கரைகளில் நெல்லி மரங்களை நட்டு வைப்பதும் தமிழர் வழக்கம்.
நெல்லிக்காய் தின்று தண்ணீர் குடித்தால் இனிப்பு சுவையாக இருக்குமல்லவா?

இச்செய்தி சங்க இலக்கியத்தில் ஓர் உவமையாக எடுத்தாளப் பட்டுள்ளது சிறப்பு என்கிறார் தொ.ப.

நீராடுவது ஒரு சடங்கு என பரிபாடல், திருப்பாவையில் இலக்கியச் சான்றுகள் உள்ளன!

நீரடித்து நீர் விலகாது
நீர் மேல் எழுத்து
தண்ணீருக்குள் தடம் பிடிப்பவன்
போன்ற நீரை மையமாகக் கொண்ட பழமொழிகள் ஏராளம்!

Comments

Popular posts from this blog

Smoke and Ashes - நூல் அறிமுகம்.

உணவு சுற்றுலா - நூல் அறிமுகம்.

கற்பது உலகளவு - நூல் அறிமுகம்.