அந்த நாள் - நூல் அறிமுகம்

தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் - 13.
13.9.2024
 நூல் தலைப்பு: அந்த நாள் 
ஆசிரியர்: டாக்டர் மு. வரதராசனார்.
நூல் வெளியீடு: பாரி நிலையம் 
நூல் அறிமுகம்: நூலகர் சி. சரவணன் 

டாக்டர் மு. வரதராசனார் எழுதிய நாவல் அந்த நாள்.  இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது, பர்மாவில் வாழ்ந்த தமிழர்கள் பட்ட பெரும் துன்பங்களை தெள்ளத் தெளிவாக, ஒரு திரைப்படம் போல், நம் கண் முன் காட்டுகிறார் நூலாசிரியர் டாக்டர் மு. வரதராசனார். 

போர் என்றால் போர் வீரர்களுக்கு இடையேதான் சேதாரம் இருக்க வேண்டும். நம் இந்திய வரலாற்றில் அரசர்களுக்கு இடையே நடைபெற்ற போர்கள் எல்லாம் அப்படித்தான் நடைபெற்றதாக படிக்கிறோம். அந்தப் போர்களில் போர் விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படும். 

ஆனால், இரண்டாம் உலகப்போர் அப்படி நடைபெறவில்லை. கோடிக்கணக்கான அப்பாவி மக்கள்மீது குண்டுகள் வீசப்பட்டன. தன் கண் முன்னே, குடும்ப உறுப்பினர்கள் குண்டுக்கு இறையாகி மாண்டு போன அவலங்கள் ஏராளம். இவர்கள் பெற்ற துயரங்களை வார்த்தைகளால் விவரிக்கிறார் நூலாசிரியர்.

பர்மாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கதை நாயகன் குடும்பத்தோடு தமிழகம் வர விரும்புகிறான். ஆனால், அவனது முதலாளி சில நாட்களுக்கான  வேலைகளை வைக்கிறார். அதனால் அவன், தன் மனைவியையும், வயதுக்கு வந்த பெண்ணையும்  தாய் நாட்டுக்கு  அனுப்புகிறான். ஆயிரக்கணக்கான தமிழர்கள் கால்நடையாக இந்தியாவை நோக்கி நடந்து வருகிறார்கள். அவர்களோடு இவர்களும் நடந்து வருகிறார்கள்.‌

இந்தக் கூட்டத்தில் பெரும் பணக்காரர் ஒருவர் ஒரு பெட்டி நிறைய பணமும் தங்கம் வெள்ளி பொருட்களையும் எடுத்து வருகிறார்.‌ அந்த பெட்டியை யாரிடமும் கொடுக்க மாட்டார். அவ்வளவு செல்வம் இருந்தும், உணவு கிடைக்காமல் அவர் படும் துயரத்தை நூலாசிரியர் விவரிக்கிறார். வரும் வழியிலேயே குண்டுக்கு இறையாகி இறந்தும் விடுகிறார்.

  பர்மாவில் இருந்து கால்நடையாக பல நாட்கள் நடந்து, மேற்கு வங்காளம் கொல்கத்தா வந்து சேருகிறது அந்த தமிழர் கூட்டம். வரும் வழியில் பலர் குண்டுக்கு பலியாகினர். பலர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்கள்.‌ சில நாட்கள் கழித்து கிளம்பி வந்த கதை நாயகன் தன் குடும்பத்தை சந்தித்துவிட முடியும் என்று நம்புகிறான். அவன் விரைவில் வந்து விடுவான் என்று அவன் மனைவியும் மகளும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அவன் வரும் வழியில் நோய் வாய்ப்பட்டு இறந்து போகிறான். இவன் இறந்து விட்ட செய்தி கேட்ட இவனது மனைவியும் மகளும் படும் வேதனையை விவரிக்கிறார் நூலாசிரியர்.

 இவர்கள் இருவரும் ஒரு வழியாக சென்னை வரும் ரயில் ஏறி விடுகிறார்கள். இரயில் இவர்களோடு வரும் தமிழக இளைஞன் ஒருவன், "போரால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. லட்சக்கணக்கான அப்பாவி மக்களை பலி வாங்கும் போரால் யாருக்கு என்ன பயன்? போரில்லாத உலகை உருவாக்க வேண்டும்" என்று பேசுகிறான். இந்த இளம் பெண்ணும் போரால் மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்று பேசுகிறாள். இதை ஒட்டு கேட்ட ஆங்கிலேய அரசின் உளவு காவல் துறையினர் இவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

தேச துரோக வழக்கு இவர்கள் மீது போடப்பட்டது. நீதிமன்ற விசாரணையில் நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் விடுதலை செய்வதாக கூறுகிறார். இந்த இளம் பெண்ணின் தாயார் இவளிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்க வற்புறுத்துகிறார். 

ஆனால், இவர்கள் இருவரும் தாங்கள் கொண்டுள்ள  கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், போர் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என்றும்  நீதிமன்றத்தில் கூறுகின்றனர். நீதிபதி இவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்குகிறார். தன்டனையை மகிழ்ச்சியாக ஏற்கின்றனர் இருவரும். தமிழக மக்கள் இவர்களை கொண்டாடுகிறார்கள்.

'அந்த நாள்' கதையைப் படிக்கும் போது எனக்கு ஞாபகம் வருவது, 'இந்த நாளில்' நடைபெறும் போர் தொடர்பான செய்திகள. 
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் போர், ரஷ்யா - உக்ரைன் போர் - 
போர் செய்திகள் நம் நெஞ்சை உருக்குகின்றன. போர் நடைபெரும் இடத்தில் வாழும் மக்களின் துயரத்தை அவர்களால் மட்டுமே உணர முடியும்.
"இந்த நவீன யுகத்தில் போரால் யாரும் எதையும் சாதிக்க முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்" - இது என் கருத்து.

நன்றி.

Comments

Post a Comment

Popular posts from this blog

Smoke and Ashes - நூல் அறிமுகம்.

உணவு சுற்றுலா - நூல் அறிமுகம்.

கற்பது உலகளவு - நூல் அறிமுகம்.