ஒரு கலங்கரை விளக்கமும் ஒரு துறைமுகமுமான மிர்தாதின் புத்தகம் - நூல் அறிமுகம்

தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் -12
12.09.24

நூல்:  ஒரு கலங்கரை விளக்கமும்
ஒரு துறைமுகமுமான
மிர்தாதின் புத்தகம்
நூலாசிரியர்: மூலம்: மிகெய்ல் நைமி
தமிழில்: கவிஞர். புவியரசு.
நூல் அறிமுகம்: கௌரிலிங்கம்

 கண்ணதாசன் பதிப்பகம் மிக நேர்த்தியாக அச்சிட்டு வெளியிட்டுள்ள  நூல்தான் மிர்தாதின் புத்தகம். பக்கம் :272 விலை : 275
 "இந்த அயோக்கிய பயல் இதை எழுதியிருக்கா விட்டால் இதை நான் எழுதியிருப்பேன் என பொறாமை கொள்ளும் நபர் வேறு யாருமில்லை ஒரு
மகா ஞானியான ஓஷோ அவர்கள். 
 "மனிதனுக்குள் பிளவுப்பட்டு கிடக்கும் இருமையை உள் உணர்வில் கரைத்து ஒருமைப்படுத்தி, அவனுக்குள் இருக்கும் தெய்வீகத்தை, அவனுக்கு திரை நீக்கி காட்டும் சுய தரிசனத்திற்கான தூண்டுதல் முயற்சி தான் இந்த ஞான நூலின் சாரம்" என்கிறார் கவிஞர் புவியரசு.

 இந்நூலை மொழிபெயர்ப்பு செய்ததில் ஆசிரியர் மிகப்பெரிய சவாலையும் கடின உழைப்பையும் கண்டு இருக்கிறார் என்றால் அது மிகையாகாது. ஏனெனில்...
 "காடு கமலும் கற்பூர சொற்கோ.." என்ற பாவேந்தரின் சொற்றொடரையோ அல்லது "தீர்த்தக் கரையினிலே... தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே..." என்ற பாரதியின் வரியை எவ்வாறு மொழிபெயர்ப்பு செய்வது? கடினமல்லவா? சவாலானதல்லவா?சிக்கலானதல்லவா?
 மூல நூலில் ஆசிரியர் மிகெய்ல் நைமி அவர்களின் இப்படியான பல சொற்றொடர்களை வெற்றிகரமாக அதன் சுவை குறையாமல், பொருள் குற்றம் ஏற்படாமல் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.
 எப்படியான புத்தகம் இது? இதை படித்தால் என்ன விதமான தாக்கம் உண்டாகும்? இந்த புத்தகம் தரும் விளைவுகள் என்ன? அவசியம் படிக்கப்பட வேண்டிய புத்தகமா? என்ற கேள்விகளுக்கெல்லாம் 'ஆம்' என்று உச்சரிப்பதை தவிர அதன் சாரத்தை எப்படி வெளிப்படுத்துவது என எனக்கு தெரியவில்லை.
 புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நீங்கள் மூழ்கி போவீர்கள். ஒரு நீண்ட தேடலை உருவாக்கி  கொள்வீர்கள். உங்களை நீங்கள் பரிசோதிக்க தொடங்குவீர்கள். ஒரு ஆழ்ந்த சிந்தனைக்குள் அகப்பட்டு விடுவீர்கள். மெய்ஞான சாயல் தோன்றி மறையும். தன் இருப்பை அறிய சில நிமிடங்கள் ஆகும்.

 "நான்" என்ற சொல்லை அகந்தையாக பயன்படுத்தாமல் "நான்" யார் என்ற தேடலுக்கு பயன்படுத்துங்கள். "நான்" என்பதின் அர்த்தம் தெரிந்து கொண்டால் இங்கு யாரும் "நான்", நானென பிரித்திருக்க மாட்டார்கள்.  "நான்" என்பது உள் ஆனந்தத்தை குறிப்பது. பரந்த அறிவைத் தந்து தெளிவை கொடுப்பது. என்ற ஞானத்தை எனக்கு அளித்திருக்கிறது.
 "உங்கள் கனவுகள் உங்களுடைய மட்டுமல்ல. உங்கள் கனவுகளில் பிரபஞ்சம் கனவு காண்கிறது! என்கிறார்.  ஒரு சார்பு தன்மையை இதைவிட எளிமையாய் எவ்வாறு சொல்லிவிட முடியும்?
 ஒருவரிடம் "சமாதானம்" என எழுதச் சொன்னால் மாறாக "போர்" என எழுதிவிட்டால் விளைவு என்னவாக இருக்கும்? இப்படியான மனங்களை சமாதான புரிதலுக்கு இழுத்துச் செல்கிறது.
 "கிளை முறிந்தாலும் வீசும் காற்றில் ஆடி பரவசப்பட்டு கொள்கிறது" என்ற முதிர்ந்த மனநிலையை உருவாக்கும் நூல் இது.
 "கடவுள் உண்டு என்றும் கடவுள் இல்லை என்றும் கூறி அவர்களின் நாக்கை புனிதமடைய செய்கிறது இந்நூல்.

 "மேகம் மேகமாக தன்னை கருதிக் கொண்டிருக்கும் வரை அதற்கு தான் ஒரு கடல் என்பது தெரியாது. அது போல "நான்" என்ற அர்த்தம் தெரியாத வரை இறைத்தன்மை தெரியாது என்கிறது இந்த நூல்.
 இறுதியாக... இந்நூல் இப்படியான சிந்தனைதான் கூறுகிறது என வரையறுத்து ஒரு கட்டுக்குள் அகப்படும் ஒரு நூல் அல்ல. இந்த உலகில் எது பெரியதோ அதைவிட பெரியது. எது சிறந்ததோ அதைவிட உயர்ந்தது.
 நீங்கள் இந்த பிரபஞ்சத்தை ஆராய்வது போல இந் நூலையும் ஆராய்ந்தால்  புதிய புதிய சிந்தனைகளை பெற்றுக் கொண்டே இருக்கலாம்.
 ஒருமுறை வாசித்து தான் பாருங்களேன் மூழ்கி போவீர்கள்.

Comments

Popular posts from this blog

Smoke and Ashes - நூல் அறிமுகம்.

உணவு சுற்றுலா - நூல் அறிமுகம்.

கற்பது உலகளவு - நூல் அறிமுகம்.