திருக்குறளும் திராவிட இயக்கமும் - நூல் அறிமுகம்.

தகடூர் புத்தகப் பேரவை - 
நூல் அறிமுகம்-11, 11.09.24
 
நூல்:
திருக்குறளும் திராவிட இயக்கமும் 

 நூலாசிரியர்: முனைவர் பா.குப்புசாமி 
 வெளியீடு: பாரதி புத்தகாலயம் 
(ஆகஸ்டு 2019) பக்கங்கள் :256 , விலை: ₹260
 நூல் அறிமுகம் : இயக்குநர் மாரி கருணாநிதி 

தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒரு நூலாக திருக்குறள் இருப்பதை நாம் அறிவோம். திருக்குறளுக்கும், திராவிட இயக்கத்திற்குமான தொடர்பு இந்த நூல் வழியே தொகுக்கப்பட்டுள்ளது.

 மூன்று தலைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ள கருத்துக்களில் ஒரு பகுதி நாம் அனைவரும் அறிந்த கருத்துக்கள் தான். மற்றவை நாம் அறிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள்.

 திராவிட இயக்க வரலாறு என்கின்ற முதல் தலைப்பில் நீதிக்கட்சி உருவாவதற்கும், அதன் பிறகு அது திராவிடர் கழகமாக உருப்பெற்று பல கிளைகளாக, பல கழகங்களாக பரவியது வரை ,சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. பண்டிதர் அயோத்திதாசர் முதல் செல்வி ஜெயலலிதா வரையிலான ஆளுமைகளைப் பற்றிய அறிமுகமாக நாம் இந்த தலைப்பை அறிந்து கொள்ள முடிகிறது. நாவலர் நெடுஞ்செழியன் தொடங்கிய மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் ,வைகோ தொடங்கிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என திராவிட இயக்கங்கள் உருவான வரலாறு மிக சுருக்கமாக இத்தலைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இரண்டாவது தலைப்பில் திராவிட இயக்கத்தினரின் திருக்குறள் உரைகள் குறித்த மிக சிறந்த ஆய்வுரை நூலாசிரியரால் வழங்கப்பட்டுள்ளது. திருக்குறள் உரை வகைகள், உரைக்கான தேவைகள் என்பதாக இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது. திராவிட இயக்க உரை நூல்களாக 20 பேரின் திருக்குறள் உரைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. புலவர் குழந்தை, கூ.ச.ஆனந்தன் ,நாவலர் நெடுஞ்செழியன், பாவேந்தர் பாரதிதாசன், அயோத்திதாசர், அர்த்தனாரி ,அரிமதி தென்னகனார், இளங்குமரனார், இறையரசன் ,கடவூர் மணிமாறன், கமலநாதன், மு.கருணாநிதி, ஆர்.கனகராஜ் , பே.சு கோவிந்தராசன், நடராஜ் செல்லையா, பழனிவேலனார், புலவர் குடந்தையான், மல்லை மணி வாசகம், மாவண்கிள்ளி ,எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோரின் உரைகளை, பரிமேலழகர் உரையுடன் ஒப்பிட்டு,  திராவிட இயக்க அறிஞர்களின் திருக்குறள் உரைகளையும், முன்னர் சிறந்தது என குறிப்பிடப்பட்ட பரிமேலழகர் உள்ளிட்ட பலரின் உரைகளோடு திராவிட இயக்க உரையாளர்கள் எவ்வாறு மாறுபட்டு நிற்கிறார்கள் என்பதை இரண்டாவது தலைப்பில் மிக விளக்கமாக நூலாசிரியர் வழங்கி உள்ளார்  
தாங்கள் சார்ந்துள்ள சமயங்கள், கொள்கைகள் சார்ந்து திருக்குறள் உரைகளை இவர்கள் வடித்துள்ளதை ஆசிரியர் தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளார்.

 மூன்றாவது தலைப்பு திருக்குறள் கருத்து பரப்பல்.
 தமிழ்நாட்டில் திருக்குறள் எவ்வாறு எல்லாம் பரப்பப்பட்டது, குறள் ஆய்வுகள் நடத்தப்பட்ட விதம், கருத்தியல் செயல்பாடுகள், கடவுள் மறுப்பு ,வைதீக கொள்கை மறுப்பு இவற்றுக்கு திருக்குறளை பயன்படுத்திய விதம், மனு மறுப்பு- திருக்குறளால் எழுந்த எழுச்சி ,தந்தை பெரியார் நடத்திய குறள் மாநாட்டுக்கு பிறகு, தமிழ்நாட்டில் திருக்குறளின் எழுச்சி, திருவள்ளுவரின் புரட்சி, திருவள்ளுவர் நாள், திருவள்ளுவர் படம் சிலைகள் ,அஞ்சல் தலை, நாணயம், பதக்கங்கள், லச்சினைகள் உருவானவற்றை
யெல்லாம் நூலாசிரியர் தொகுத்து வழங்கியுள்ளார்.

 இந்த நூலின் வழியே நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்றால், திராவிட இயக்க வரலாற்றில் திருக்குறள் என்பது மிகப்பெரிய கிளர்ச்சியை உருவாக்கியுள்ளது என்பதையும், அதற்கான தேவைகளையும், திராவிட இயக்கத்திற்கு முன் திருக்குறள்- திராவிட இயக்கத்திற்குப் பின் திருக்குறள் எனப் பிரித்தறிந்து, தமிழரின் வாழ்வோடு திருக்குறளும் அதன் அறநெறி கருத்துக்களும் பின்னிப் பிணைவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளை அறிந்து கொள்ள இயலும்.

 திருக்குறள் பற்றாளர்கள், திராவிட இயக்கப்பற்ளாளர் கள், தமிழ்ச் சமூகம் இந்த நூலை வாசிப்பதன் வழியே, திருக்குறள் வழி தமிழ்நாட்டின் அரசியல்- பண்பாட்டை, திருக்குறளின் தேவையைப் புரிந்து கொள்ள இயலும்.
 வாசிப்போம் ! விமர்சிப்போம் !!

Comments

Popular posts from this blog

Smoke and Ashes - நூல் அறிமுகம்.

உணவு சுற்றுலா - நூல் அறிமுகம்.

கற்பது உலகளவு - நூல் அறிமுகம்.