தமிழ்நாட்டில் காந்தி - நூல் அறிமுகம்.

தமிழ் நாட்டில் காந்தி.
1934-ஆம் ஆண்டில் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்தையே முக்கியமான இலக்காகக் கொண்டு இந்தியா முழுக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் காந்தி. ஏறத்தாழ எட்டு மாத காலம். அவருடைய பயணத்திட்டத்தில் தொடக்கத்திலேயே இடம்பெற்ற இடம் தமிழ்நாடு. 23.02.1934 முதல் 22.03.1934 வரை தமிழ்நாடு முழுக்க வலம்வந்தார் அவர். வில்வண்டி, நான்கு சக்கர வாகனம், புகைவண்டி என எல்லா விதங்களிலும் இடைவிடாமல் பயணம் செய்து 112 ஊர்களில் பொதுமக்களைச் சந்தித்தார். ஏறத்தாழ இரண்டுகோடி மக்கள் காந்தியை நேரில் காணவும் அவருடைய உரையைக் கேட்கவும் அவருடைய பயணத்தின் நோக்கத்தை உணரவும் செய்தார்கள். தீண்டாமை ஒழியப் பாடுபடுமாறு சென்ற இடங்களிலெல்லாம் மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் காந்தியின் பயண ஏற்பாடுகளை இந்திய ஹரிஜன சேவா சங்கத் தலைவரான தக்கர் பாபா கவனித்துக் கொள்ள, கன்னியாகுமரியில் அவருடன் இணைந்துகொண்டார் ராஜன். ஒவ்வொரு நாளும் செல்லவேண்டிய ஊர்கள், கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள், தங்க வேண்டிய இடங்கள் எல்லாவற்றையும் கச்சிதமாக வடிவமைத்ததில் ராஜனுக்குப் பெரும்பங்குண்டு. அதைத்தவிர காந்தியின் உரையைத் தமிழில் மொழிபெயர்த்துப் பேசும் பணியையும் அவர் ஏற்றுக் கொண்டார். நாளொன்றுக்கு சராசரி நூற்றைம்பது மைல்களுக்குக் குறையாமல் பிரயாணம் செய்து கொண்டு, பத்து மணிநேரத்துக்கும் மேலாக வேலை செய்து கொண்டு, ஓர் இரவு தங்கிய இடத்தில் மறு இரவு தங்காமல் காற்றைப்போல பறந்து கொண்டிருந்த காந்தியோடு அப்பயணம் முழுக்க இருபது பேர் இருந்தார்கள். குஜராத்தியர் ஒன்பதுபேர். தமிழர்கள் ஐந்துபேர். பெண்கள் மூவர். இந்துஸ்தானிகள் இருவர் ஜெர்மானியர் ஒருவர்.
சீனிவாச ஐயங்கார், வைத்தியநாத ஐயர், மாசிலாமணிப் பிள்ளை, வீரபாகுப்பிள்ளை, அவிநாசிலிங்கம் செட்டியார், கிருஷ்ணசாமி ஐயங்கார், சாம்பசிவ ஐயர், ராஜாஜி, ஸ்வாமி ஸகஜானந்தர், கோடம்பாக்கம் கணேசன் போன்ற முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளையெல்லாம் பயண வழிகளில் இணைத்துக்கொண்ட ராஜன் மிக எளிய காங்கிரஸ் தொண்டர்கள் தாமாகவே மனமுவந்து நிகழ்த்திய நிகழ்ச்சிகளையும் முக்கியத்துவம் கொடுத்து இணைத்துக் கொண்டதையும் ஊக்கம் குன்றாமல் காந்தி இந்த இடங்களில் உரையாடியதையும் புத்தகம் முழுக்கப் பார்க்கமுடிகிறது. ஒவ்வொரு இடத்திலும் காந்தியின் பயணம் ஒரு புதுவித அனுபவத்தைப் பெறுவதை சுவாரசியமாகக் குறிப்பிடும் ராஜனின் எழுத்தாளுமை பாராட்டுக்குரியது. எத்தனை முறை படித்தாலும் அலுப்புத் தட்டாத ஒரு புத்தகம் ‘தமிழ்நாட்டில் காந்தி’. கண்ணால் பார்க்கமுடியாத ஒரு மாபெரும் தலைவர் நாம் வாழும் பகுதிக்கு வந்து சென்றிருக்கிறார. நம் மூத்த தலைமுறையினரிடம் உரையாடியிருக்கிறார் என்பதை இப்புத்தகம் வழியாக உறுதிப்படுத்திக்கொள்வது ஒரு விசித்திரமான அனுபவம்.

- பாவண்ணன்.

Comments