வெல்லுவதோ இளமை - நூல் அறிமுகம்.
இந்து தமிழ் திசையின் இணைப்பிதழான "இளமை புதுமை"யில் 25 வாரங்கள் வெளிவந்த ஒவ்வொரு வாரமும் ஒரு வெற்றியாளரின் இளமைக்கால கதையையும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை, சவால்கள் உள்ளிட்டவைகள் பற்றியும் அவர்கள் அதை எவ்வாறு வெற்றிகரமாக எதிர்கொண்டு முன்னேறினார்கள் என்பது பற்றி 25 ஆளுமைகளின் அனுபவங்களை பேசுகின்ற அற்புதமான நூல் வெல்லுவதோ இளமை என்ற நூல்.
இன்றைக்கு மிகப்பெரிய சாதனையாளர்களாக இருப்பவர்கள் ஒரு காலத்தில் அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு சவால்களையும், சிக்கல்களையும் எதிர்கொண்டார்கள் என்பதை அறியும்போது மனம் வலிக்கத்தான் செய்கிறது.
வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு விதமான துன்பங்கள், சிக்கல்கள் நம்முடைய எதிர்காலத்திற்கு படிப்பினைகளாக அமைகிறது என்பதை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து எவ்வாறு விடுபட்டு வெற்றிகரமாக முன்னேற்ற பாதையில் செல்ல முடியும் என்பதை சிந்தித்தவர்களால் மட்டுமே இன்று உச்சத்தை தொட்டவர்களாக இருக்கிறார்கள்.
தவறுகளில் இருந்து மனிதன் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லுவார்கள் அதுபோலத்தான் இங்கே 25 ஆளுமைகளின் வாழ்க்கையில் அவர்கள் கடந்து வந்த பாதைகள் என்பது பஞ்சுமெத்தை போன்றதல்ல.
கற்களும், முட்களும் நிறைந்த பாதைகள் தான். அந்தப் பாதைகளை அவர்கள் எவ்வாறு பஞ்சு மெத்தைகளாக மாற்றி இன்று நாடு போற்றுபவர்களாக உலகம் போற்றுப்பவர்களாக மாறியிருக்கிறார்கள் என்பதை படிக்கும் போது ஒவ்வொருவருக்குள்ளும் தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும் விதமாக உள்ளது.
நம்மைப் போன்று சாதாரணமாக இருந்தவர்கள் இன்று
சாதனையாளர்களாக மாறியிருப்பதற்கு அவர்களின் அணுகுமுறை என்னவாக இருந்தது என்பதை அறிந்து கொள்ளும் விதமாக அந்த ஆளுமைகளின் அனுபவங்கள் படிக்கும் அனைவருக்கும் பாடமாக இருக்கிறது.
தோல்விகள், தடைகள், குழப்பங்கள், தடுமாற்றங்கள், கவலைகள், துரோகங்கள், எரிச்சல்கள், நம்பிக்கையின்மைகள் என அனைத்தையும் தாண்டி தட்டு தடுமாறி வெளியே வந்திருக்கிறார்கள் என்றால் இளமை துடிப்பை சரியாக பயன்படுத்தி இவர்கள் வென்று இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
இவர்களின் வெற்றிக்கு பல மனிதர்களின் உதவியும் சூழலும் உதவியிருப்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.
இன்று இருக்கும் சூழ்நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்லும் பயணம் என்பது மிகவும் கடினமானது.
வாழ்க்கையில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதனை எதிர்கொண்டு வாழும் ஆற்றலை, தன்னம்பிக்கையை கொண்டவர்களால் மட்டுமே வெற்றியாளர்களாக முடியும்.
25 ஆளுமைகளில் பில்கேட்ஸ், விராட் கோலி, புருஸ்லீ, ஜே.கே. ரௌலிங், விஸ்வநாதன் ஆனந்த், என இப்படி 25 ஆளுமைகளின் வாழ்க்கையில் அவர்கள் சந்தித்த இடர்பாடுகளில் இருந்து எவ்வாறு மீண்டு எழுந்தார்கள் என்பதனை அறிந்து அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். இந்த புத்தகத்தை வாசிப்பதன் மூலமாக புத்துணர்ச்சியையும் தன்னம்பிக்கையையும் வாசிப்பவர்களுக்கு உருவாக்கும் அற்புதமான நூலாக வெல்லுவதோ இளமை என்ற நூல் இருக்கிறது.
வாய்ப்புள்ளவர்கள் இந்த நூலை படித்து பயன்பெறலாம்.
நூல் அறிமுகம் அருமை.
ReplyDelete