ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம் - நூல் அறிமுகம்.
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம்-19
நாள்:19.09.24
நூல் : ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம்
நூலாசிரியர் : சி.மகேந்திரன்
நூல் அறிமுகம்: கூத்தப்பாடி மா. பழனி
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கம் : 440, விலை : ரூ.500/-
வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம் என்ற இந்த நூல் ஜூனியர் விகடனில் 25 இதழ்களில் புகழ்பெற்ற ஓவியர் மருது வரைந்த வண்ணப் படங்களோடு தொடராக வெளிவந்ததை விகடன் பிரசுரம் நூலாக அச்சிட்டு முதல் பதிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போது இரண்டாம் பதிப்பாக டிஸ்கவரி புக் பேலஸ் மூலம் 2019ல்
வெளிவந்திருக்கிறது. இந்த புத்தகத்தில் 74 தலைப்பிலான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
முதல் கட்டுரை நீரின் மரணம் எனத்
தொடங்குகிறது.
நம் முன்னோர்களின் சமாதி மீது படர்ந்துள்ள ஈரம் கூட இரக்கமற்ற மனிதர்களின் காலடிகள் படிவதால் உலர்ந்துக் கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் ஈரத்தில் நனைந்து மகிழ்ந்த கால்கள் இன்று சுடு மணலில் வெந்து போனதில் மனம் காயப்பட்டு கிடக்கிறது. நதியை இழந்தவனின் துயரம் விவரிக்க இயலாதது.
என்பது போன்ற வரிகளால் மனிதர்களால் இயற்கையான நீர் நிலைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. பூமி பிறந்து மாற்றங்கள் நிகழ்ந்தபோது நீர் முதல் பிறப்பாக உருப்பெற்றது. மழை கொட்டியது. புதிதாய் பிறந்த பூமியில் மேடு பள்ளங்கள் இருந்தன. தொடர்ந்து பெய்த மழையால் பள்ளங்கள் நிரம்பி கடலாக்கியது மழைநீர். உயிர்கள் அனைத்தும் இந்த நீரில் இருந்துதான் தோன்றின என்பது உண்மையிலும் உண்மை.
முதல் உயிரினம் நீரில்தான் தோன்றியது எனில் உயிரினத்தின் ஆதித்தாய் நீர்தான். மனிதன் உள்ளிட்ட எல்லா உயிரினங்களையும் பெற்றெடுத்து கொடுத்த முதல்தாய் கருவை வளர்த்தெடுத்து பிறப்பு என்னும் வாசல் அமைத்து தருவதும் நீர்தான். நீரின்றி எதுவும் அமைவதில்லை. ஆனால் தண்ணீருக்காக மனிதன் செய்துவரும் துரோகங்களை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை வஞ்சிக்கப்பட்ட தண்ணீர்தாயின் கோப பெருமூச்சு இன்று புவிப்பரப்பெங்கும் அனலாய் கொதித்து நிற்கிறது.
"ஆறில்லா ஊர் பாழ்" என்பது தமிழர்களின் பழமொழி. ஆறுகள் தான் நாம் இருக்கும் இடம் தேடி நீரை சுமந்து வந்து தருகின்றன ஆறுகள் இல்லாவிட்டால் தமிழர்களுக்கான ஒரு தொன்மையான பண்பாடு இருந்திருக்குமா? கங்கை சென்றது, கடாரம் வென்றது போன்ற பெருமைகள் இருந்திருக்குமா? ஆனால் தொன்மையான பண்பாட்டை வளர்த்துக் கொடுத்த நதிகளின் இன்றையநிலை என்ன என்ற கேள்வி? படிக்கும் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.
நீர் பிரச்சனையில் சென்னையும் தமிழகமும் அவதிப்பட்டு கொண்டிருந்தபோது அசோகமித்திரனின் தண்ணீர் நாவலும், கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் திரைப்படமும் அந்தக் கால தண்ணீர் பிரச்சனையை அறிந்து கொள்ளச் செய்திருக்கிறது.
இயற்கையை அழித்து மனிதன் சுயநல போக்கோடு செயல்பட ஆரம்பித்ததன் விளைவாக இயற்கை வளங்கள் ஒவ்வொன்றாக பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இயற்கையை பாதுகாக்கும் தொலைநோக்கு முயற்சி இல்லாத காரணத்தால் ஏற்படுகின்ற பாதிப்பு மிகப்பெரியது.
தமிழக நதிகளை பற்றிய தேடுதலில்
நூலாசிரியரிடம் ஏற்பட்ட மகிழ்ச்சி, கோபம், வெறுப்பு, வேதனை, புதிய நம்பிக்கைகள் என எத்தனையோ உணர்ச்சிகள் என நதிகளின் இந்த தேடுதல் பயணம் அவர் இதுவரை அறிந்திராத தனி உலகத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது என்கிறார்.
ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம் என்ற நூலை எழுதுவதற்காக
71 துணை நூல்கள் தமிழிலும், 59 துணை நூல்கள் ஆங்கிலத்திலும்
கையாண்டு பல்வேறு ஆதாரப்பூர்வமான தரவுகளுடன் இந்த மிகப்பெரிய நூலை ஆசிரியர் உருவாக்கி இருக்கிறார்.
நம் முன்னோர்கள் உருவாக்கிச் சென்ற ஏரி, குளம், குட்டை, கண்மாய் போன்றவைகள் காணாமல் போய் உள்ளது. இதிலிருந்து செல்லும் நீர்வழித் தடங்கள் முழுமையாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
நீர் வளத்தோடு இருந்த ஆறுகளில் இருக்கும் மணலை அள்ளி அள்ளி சென்றதன் விளைவை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
உலக நாடுகள் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய சவால் நீருக்கானதுதான்.
நாடுகளுக்குள் இருக்கும் நதிநீரை பங்கிட்டு கொள்வதில் எவ்வளவு சிக்கல்கள். நீர் சிக்கனம், மழைநீர் சேகரிப்பு போன்றவைகளை
முறையாக செய்ய வேண்டியது அவசியம். இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற உள்ளுணர்வையும் சிந்தனையையும் தூண்டுவதாக ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம் என்ற நூல் இருக்கிறது.
இயற்கையை நேசிப்பவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம். வாய்ப்பிருப்பவர்கள் வாசித்துப் பாருங்கள்.
அருமை
ReplyDeleteசிறப்பான விமர்சனம் ஐயா. வாழ்த்துகள்
ReplyDeleteஅறிமுகம் அற்புதமாக இருந்தது.ஆனால் காணாமல் போகும் நீர்வளத்தால் மனித இனம் இன்னல்களுக்கு ஆட்பட்டு கேள்வி குறியாக இருக்கும் நேரத்தில் நீரைப் பற்றிய இந்நூல் மனிதர்க்கு சரியான விழிப்புணர்வு ஆக இருக்கும்.
ReplyDeleteஅருமையான பதிவு நீண்ட நாள்களாக இதைப்பற்றிய நினைவுகள் ' மனிதன் மாறிவிட்டன ,தண்ணிரை பாதுகாத்திடுக்கள்
ReplyDelete